பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
02:07
மீஞ்சூர்: பொலிவிழந்து கிடந்த, மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில், தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொதுமக்களால் விமோசனம் கிடைத்து உள்ளது. வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலின் பின்பகுதியில் உள்ள குளம், குடியிருப்புகளின் கழிவுநீராலும், ஆகாயத்தாமரைச் செடிகளாலும் பொலிவிழந்து கிடந்தது. திருக்குளத்தின் புனிதத்தன்மை கேள்விக்குறியானதால் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.கோவில் குளத்தினை துாய்மைப்படுத்துவதற்காக, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு சார்பில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை துார்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ள, இ.எப்.ஐ., என்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உதவியை நாடியது. அந்த அமைப்பு, கோவில் குளத்தினை பார்வையிட்டு, உடனடியாக துாய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. அந்த அமைப்புடன், பகுதிவாசிகளும் இணைந்து கொண்டனர். குழந்தைகள், பெரியர்கள், இளைஞர்கள் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை பறித்து வெளியில் போட்டு துாய்மை பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இது குறித்து, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்ரெட்டி கூறுகையில், ’கோவில் குளத்திற்கு இ.எப்.ஐ., சுற்றுச்சுழல் அமைப்பு மற்றும் பொதுமக்களால் விமோசனம் கிடைத்து உள்ளது. ’குடியிருப்புவாசிகள் குளத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், அதில், கழிவுநீர் விடுவது, குப்பைக் கழிவுகள் போடுவதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.