பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
03:07
காஞ்சிபுரத்தில், கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிக்கு மாணவ --- மாணவியரை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஏகாம்பரநாதர், வரதராஜர், குமரகோட்டம், கச்சபேஸ்வரர் என, வருவாய் அதிகமுள்ள பல பெரிய கோவில்களும் மற்றும் சிறிய கோவில்களும் உள்ளன. இக்கோவில் உண்டியல் களில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை அவ்வப்போது எண்ணப்பட்டு வருகிறது. இதை, கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் எண்ணுவது வழக்கம். சமீப காலமாக, உண்டியல் பணத்தை எண்ணும் பணிக்கு, அரசு பள்ளி மாணவ - மாணவியரும் ஈடுபடுத்தப்படுப்படுகின்றனர். இதனால், ஒரு நாள் முழுவதும் வகுப்பறையில் எடுத்த பாடங்களை கற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவ - மாணவியரின், கல்வியும் பாதிக்கப்படுகிறது. பள்ளியில் அமர்ந்து பாடத்தை கவனிப்பதைவிட, கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணிக்கு சில மாணவ -மாணவியர் மகிழ்ச்சியுடன் தான் செல்கின்றனர். இருப்பினும் அவர்களின் ஒரு நாள் படிப்பு வீணாகுவதை அவர்கள் அறிவதில்லை. எனவே, மாணவ - மாணவியரை உண்டியல் பணம், எண்ணும் பணிக்கு ஈடுபடுத்துவதை, கல்வித்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -