பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலைமருந்தீஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 29ல் நடக்கிறது. ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்தபோது, இங்கு, அம்மலையின் சிறு குன்றுகள் சிதறுண்டன. அந்த மலை மீது ஈஸ்வரன் குடிகொண்டதால், இக்கோயிலில் மலைமருந்தீஸ்வரராக காட்சியளிக்கிறார். இரவு ஒளிரும் ஜோதி விருட்சக தலம் என போற்றப்படுகிறது. இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பு. இக்கோயில், மருதுபாண்டியர்கள் காலத்தில் திருப்பணி நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில், 1978ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் திருப்பணிக்கென 2006ல் பாலாலயம் செய்யப்பட்டது. இதற்காக, அறநிலையத்துறை 60லட்ச ரூபாய், பக்தர்கள் நன்கொடை என, 2.5 கோடி ரூபாயில், ஐந்து நிலை ராஜகோபுரம், பர்வதவர்த்தினிஅம்மனின் பிரதிஷ்டை, விநாயகர், பாலதண்டாயுதபாணி, பைரவர்,கருப்பர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கென தனி சன்னதியுடன் திருப்பணிகள் நிறைவு பெற்றன.
கும்பாபிஷேகம்: கடந்த 26ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, வேள்விகள், சிறப்பு யாகங்கள் நடைபெறும். நான்காம் நாளான ஜன., 29 அன்று, காலை 8.30 முதல் 9.30 மணிக்குள், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். திருப்பணி குழு தலைவர் சுதர்சனநாச்சியப்பன் எம்.பி., தலைமையில், ஏரியூர் கிராம மக்கள், விழா குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.