கச்சிராயபாளையம்: அக்கராயபாளையத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், மாவிளக்கு, ஊரணி பொங்கல் வைத்தல் மற்றும் ஆயிரம் விளக்கு பூஜை செய்து தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் பொதுமக்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நேற்று காலை 10.15 மணிக்கு நடந்தது. இதில் மாஜி அமைச்சர் மோகன், கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜூலு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தேரினை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தேர்திருவிழாவில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.