சின்னமனுார்:குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனி பெருந்திருவிழாவின் இரண்டாவது வாரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்தாண்டுக்கான ஆடி சனிவாரத்திருவிழா ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று 2வது சனிவாரத்தையொட்டி வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் சுயம்பு மூலவரை வரிசையில் நின்று தரிசித்தனர். அவர்களின் வசதிக்காக தேனி, போடி, கம்பம், தேவாரத்திலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பேரூராட்சி சார்பில் 150 தற்காலிக பணியாளர்களை வைத்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில் வளாகத்தில் செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை, அறநிலையத்துறையினர் செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்வராததால், அருகில் உள்ள பெட்டி கடைகளில் பாட்டில் குடிநீர் விற்பனை அமோகமாக நடந்தது. ஆக.,3ல் சனீஸ்வரர் -நீலாதேவி திருக்கல்யாணம் காலை 11:30 மணிக்கு மேல் நடக்கிறது. மூன்றாவது சனிவாரத் திருவிழா நிறைவடைந்தவுடன், இரவு 12:00 மணிக்கு மேல், மூலவருக்கு செந்துாரக்காப்பு அலங்காரம் செய்யும் பணி நடைபெறும். சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்கும் இந்நிகழ்ச்சிக்கான மூலிகை கலவையை தயார் செய்து வருகின்றனர்.