ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் குப்பை மண்டி கிடந்த சரவணா தீர்த்த குளத்தை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் 54 ஆண்டுக்கு பிறகு மீட்டனர்.ராமேஸ்வரம் துவங்கி உப்பூர் வரை பாம்பன், மண்டபம் 108 தீர்த்த குளம், கிணறுகள் உள்ளன. ராமேஸ்வரம் கோயிலுக்கு அக்காலத்தில் புனித பயணம் வரும் பக்தர்கள் வெளிப்பகுதியில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தத்திலும் நீராடுவார்கள்.
காலப்போக்கில் பல தீர்த்த குளங்கள் புதைந்தும், ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போயின.இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர், புதைந்து போன தீர்த்தங்களை மீட்டு மராமத்து செய்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.நேற்று ராமேஸ்வரம் பாம்பன் குந்துகால் அருகில் குப்பை, முள் மரங்களுக்கு இடையே புதைந்து கிடந்தசரவணா தீர்த்த குளத்தை பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி சரஸ்வதி கண்டுபிடித்தார்.அவர் கூறியதாவது: பாம்பன் வழியாக ராமேஸ்வரத்திற்கு ராணி மங்கம்மா சாலையில் நடந்து வரும் பக்தர்கள் இந்த சரவணா தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்கு சென்றுள்ளனர். 1964ல் ஏற்பட்ட புயலுக்குப்பின் இந்த குளம் பராமரிப்பின்றி குப்பையில் புதைந்து போனது.அரசு அனுமதி பெற்று இந்த குளம் விரைவில் புதுப்பிக்கப்படும். பணி முடிந்ததும் பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்லலாம், என்றார்.