பதிவு செய்த நாள்
28
ஜன
2012
11:01
கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஜந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் மகாகும்பாபிஷேக விழா நாளை (ஜன.29) கோலாகலமாக நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் மகாகும்பாபிஷே விழா நாளை (ஜன.29) நடக்கிறது. இதையொட்டி கடந்த 25ந்தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் மூன்றுகால பூஜைகளும் நடந்தது.
இந்நிலையில் நேற்று (ஜன.28) காலையில் நடைதிறக்கப்பட்டு மங்கள இசை, தமிழ்வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், நான்காம் கால வேள்வி வழிபாடு, நிறை அவி அளித்தல் மற்றும் ஒளி வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் மங்கள இசை, தமிழ் வேதம் ஓதுதல், ஐந்தாம் கால வேள்வி வழிபாடு, நான்கு வேதம் ஓதுதல், நிறை அவி அளித்தல் மற்றும் ஒளிவழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து இன்று (ஜன.28) ஆறாம்கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகரமே திருவிழாக்கோலம் கண்டு வருகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை பல்வேறு சமுதாய நிர்வாகங்கள், தனிநபர் உபயங்கள், அமைப்புகள் வழியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை (ஜன.29) செண்பகவல்லியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்பட்டி நகருக்குள் போக்குவரத்து சீராக இருக்கவும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் சுவாமி வழிபாடு செய்ய கோயிலுக்கு செல்லவும் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி போலீஸ் டிஎஸ்பி சிலம்பரசன் கூறியதாவது, கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக நகர போக்குவரத்துகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரை மற்றும் ராஜபாளையம் மார்க்கத்தில் கோவில்பட்டிக்கு வரும் பயணிகள் பஸ்கள் தோட்டிலோவன்பட்டி விலக்கில் இறங்கி இனாம் மணியாச்சி ஜங்ஷன் வழியாக கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டை அடைய வேண்டும். தொடர்ந்து திரும்பிச்செல்லும் போதும் இதே வழியை பின்பற்ற வேண்டும்.
தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் மார்க்கத்தில் கோவில்பட்டிக்கு வரும் பயணிகள் பஸ்கள் அம்பேத்கர் சிலை வழியாக புதுரோட்டில் இறங்கி மெயின் ரோடு வழியாக அண்ணா பஸ் ஸ்டாண்டை வந்தடைய வேண்டும். அதேநேரத்தில் இத்தடத்தில் திரும்பிச் செல்லும் வாகனங்கள் அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து இளையரசனேந்தல் ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக, மெயின் ரோடு, புதுரோடு, அம்பேத்கர் சிலை சென்று எட்டயபுரம் ரோட்டில் செல்ல வேண்டும். பசுவந்தனை ரோட்டில் சென்றுவரும் வாகனங்கள் எட்டயபுரம் ரோடு, அம்பேத்கர் சிலை, புதுரோடு, மெயின் ரோடு வழியாக அண்ணா பஸ் ஸ்டாண்ட் வந்து, திரும்பி செல்லும்போது இளையரசனேந்தல் ரோடு, மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு சென்று பசுவந்தனை ரோட்டில் திரும்பி செல்ல வேண்டும். ஆனால் கழுகுமலை, சங்கரன்கோவில் மார்க்கத்தில் கோவில்பட்டி வந்து செல்லும் வாகனங்கள் தற்போதுள்ள வழிமுறைகளையே கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் இளையரசனேந்தல் ரோடு, மார்கெட் ரோடு, புதுரோடு, அம்பேத்கர் சிலை வழியாக எட்டயபுரம் ரோட்டில் சென்று, ஆர்டிஓ ஆபிஸ் அருகில் சப்கோர்ட் வளாக ரோட்டில் திரும்பி அரசு அலுவலக வளாக பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டும். அதேநேரத்தில் திரும்பிச் செல்லும் போது எட்டயபுரம் ரோடு, அம்பேத்கர் சிலை வழியாக புதுரோட்டில் சென்று வேலாயுதபுரம் மேம்பாலம் வழியாக நகருக்கு வெளியே சென்று செல்ல வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறும் நாளன்று கனரக வாகனங்கள் எதுவும் நகருக்குள் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போக்குவரத்து அனைத்தையும் ஒழுங்குபடுத்த கோவில்பட்டி நகரின் நுழைவு வாயில்களான இனாம்மணியாச்சி ஜங்ஷன், தோட்டிலோவன்பட்டி விலக்கு மற்றும் நகருக்குள் மாதாங்கோயில் ரோடு சந்திப்பு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு, மங்களவிநாயகர் கோயில் அருகில், அம்மா மெஸ் பாலம் அருகில் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில்பட்டி டிஎஸ்பி சிலம்பரசன் தெரிவித்தார்.