பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆற்றுப்பகுதியில், ஆடிப்பெருக்கையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வருவதை ஆற்றுப்பெருக்கு எனக் கூறப்படுகிறது. உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவது வழக்கம். நேற்று பாரம்பரியம் மாறாமல், பொள்ளாச்சி பகுதி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அம்பராம்பாளையம் ஆற்றில், முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் குடும்பத்துடன் திரண்டனர். முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். ஆழியாறு அணை மற்றும் பூங்காவிலும், நேற்று கூட்டம் அதிகமிருந்தது.
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கு பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.