கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி, சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து லலிதா சகஸ்ர நாம மந்திரங்கள் வாசித்து பூஜைகள் செய்யப்பட்டது. ஆடி 18 சிறப்பையொட்டி பெண்கள் கும்ப கலசத்திலிருந்த காவேரி நீருக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.