பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
காஞ்சிபுரம் : நாயகன்பேட்டை அமிர்த்தகடேஸ்வரர் கோவில், மற்றும் விநாயகர் கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை கிராமத்தில் பழமையான அபிராமியம்மை உடனுறை ஸ்ரீ அமிர்த்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யஞ் ஜெயமூர்த்தியாக அமிர்த்தகடேஸ்வரர் திகழ்கிறார். இக்கோவிலில், 59 வயது பூர்த்தியாகி 60 வயது ஆரம்பமான "உக்ராத சாந்திக்கும், 60 வயது "சஷ்டியப்த பூர்த்தி வைபவத்திற்கும், 69 வயது பூர்த்தியாகி 70 வயது ஆரம்பமான "பீமரத சாந்தி வைபவத்திற்கும், 80 வயது ஆரம்பமான "சதாபிஷேகம் மற்றும் " ஆயிஷ்ய ஹோமங்களுக்கும், கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்வது, இக்கோவிலின் தனி சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் கோவிலை புதுப்பிக்க, கிராம மக்கள் முடிவு செய்தனர். கோவிலை சுற்றி மதில் சுவர் கட்டி, வண்ணம் தீட்டினர். நடுத்தெருவில் உள்ள செல்வ விநாயகர், சின்னத்தெருவில் உள்ள வலம்புரி விநாயகர், ஒற்றைவாடை தெருவில் உள்ள செக்கடி விநாயகர் கோவில், ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 27ம் தேதி கணபதி பூஜை, கோபூஜை, முதல்கால யாக பூஜைகளும், 28ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைக்குப்பின், 8.30 மணிக்கு வலம்புரி விநாயகர் கோவில் விமானம், 8.45 மணிக்கு,செல்வ விநாயகர் கோவில் விமானம், 9 மணிக்கு செக்கடி விநாயகர் கோவில் விமானங்கள், 10.10 மணிக்கு அமிர்த்தகடேஸ்வரர் கோவில் விமானம் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. மாலை 6 மணிக்கு, அபிராமியம்மை சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க, மலர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. அதேபோல் குளக்கரையில் உள்ள நாகம்மன் மற்றும் சந்தான விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நேற்று நடந்தது.