பதிவு செய்த நாள்
10
ஆக
2018
02:08
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களை, முறைகேடாக தனியார் பட்டா பெறுவதை தடுக்கும் விதத்தில், கோவில் படத்துடன் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூரில் புகழ்பெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு சொந்தமாக காலவாக்கம், திருப்போரூர், கண்ணகப்பட்டு, புதுச்சேரி, சென்னை, மயிலம், மறைமலைநகர், பொன்மார், பட்டிபுலம் உள்ளிட்ட இடங்களில் விவசாய மற்றும் வீட்டுமனை உபயோக நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. இவை முறையாக, கோவிலுக்கு சார்ந்த இடப்பகுதியில் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாடகை ஆக்கிரமிப்பாளர்கள், மாற்று நபர்களுக்கு விற்பதுடன் முறைகேடாக பட்டா பெறவும் செய்கின்றனர். குறிப்பாக, இக்கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் வருவாய் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. கோவில் சொத்துகளில், ஒரு சில இடங்களில் மட்டுமே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும், நில அளவு புள்ளி விபரத்துடன் அறிவிப்பு பலகைகள் வைக்க செயல் அலுவலர், உதவி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.