பதிவு செய்த நாள்
30
ஜன
2012
04:01
(இருபத்தொன்றாவது-மணிமேகலை உதயகுமரன் மடிந்தது கண்டு உறுதுயரெய்த நெடுநிலைக் கந்தின் நின்ற பாவை வருவதுரைத்து அவள் மயக்கொழித்த பாட்டு)
அஃதாவது: விச்சாதரன் உதயகுமரன் பின் சென்று மணித்தோள் துணிய வாளால் வீசியதனானும் மணிமேகலையை அணுகச் சென்ற காஞ்சனனை மறித்து அவனுக்குக் கந்திற்பாவை அறிவுறுத்திய சொல்லானும் உண்டான அரவத்தாலே சம்பாபதி கோயிலினூடே துயின்றிருந்த மணிமேகலை விழித்துக் கந்திற்பாவை கூற்றினாலே உதயகுமரன் கொலையுண்டமை யுணர்ந்து அவன்பால் பற்பல பிறப்புகளிலே அடிப்பட்டு வந்த பற்றுண்மையாலே அவ்வுதயகுமரன் இறந்துபட்டமை பொறாமல் பற்பல கூறி அரற்றி அவன் உடலைத் தழுவி அழச்செல் வாளை இடையே கந்தற்பாவை தடுத்து இறந்தகாலச் செய்திகள் பற்பல கூறி உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணமான பழவினை இன்னதென இயம்பித் தேற்றி இனி, எதிர்காலத்தேயும் அவட்கு வர விருக்கின்ற ஏது நிகழ்ச்சியனைத்தையும் இயம்பி இனிது ஆற்றுவித்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.
இனி, இதன்கண்-கந்துடை நெடுநிலை கடவுட் பாவை கூறும் கூற்றுக்கள் முழுவதுமே பயில்வோர்க்கு மெய்யறிவு கொளுத்தும் பண்புமிக்கன; ஆற்றவும் இனிமையும் மிக்கனவாயிருத்தலுணர்ந்து மகிழற்பாற்று. இக் காதை அவலச் சுவை பொதுளிதொரு காதையுமாகும்.
மணிமேகலை பிறப்புப் பலவற்றிற் றொடர்ந்து தனக்குக் கணவனாகவே வந்த உதயகுமரன்பால் பற்று மிக்கவளாகி அவனையும் மெய்யறிவு கொளுத்தி அவனுடைய பிறவிப்பிணியையும் அகற்றி விடப் பெரிதும் விரும்பி அவனுக்கு அறங்கூற முயன்றாவாகவும் தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று கருதி அவனைக் கொன்றொழித்ததாகவும் சொல்லி அழுதரற்று மொழிகள் அவலச்சுவைக்கு எடுத்துக் காட்டத் தகுவனவாக அமைந்திருக்கின்றன. இக் காதை பயில்பவர்க்கும் மெய்யுணர்வு தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.
கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இவ் உரு என
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித் 21-010
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் 21-020
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ! என
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 21-030
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும் 21-040
நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு! என
ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள் எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனைப் பேணினிராகி 21-050
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே 21-060
விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை 21-070
ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு 21-080
காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090
பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்
தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்
பூத விகாரப் புணர்ப்பு என்போர்களும் 21-100
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை? என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை! என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை 21-110
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும் 21-120
முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்! 21-130
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் 21-140
மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள்? என்றலும்
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த 21-150
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள 21-160
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்
தாயரும் நீயும் தவறு இன்றுஆக 21-170
வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்! என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை! 21-180
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் 21-190
உரை
மணிமேகலை துயில் காயசண்டிகை வடிவத்தைக் களைந்து தன்னுருக் கோடல்
1-10: கடவுள்.....நீங்கி
(இதன் பொருள்) கடவுள் எழுதிய நெடுநிலைக்கந்தின் குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் முதியாள் கோட்டத்து-கடவுட்டன்மையோடு இயற்றப்பட்ட பாவையையுடைய நெடிய நிலையினையுடைய தூணுக்கு மேற்றிசையிலே அமைக்கப்பட்டிருந்த குச்சரக் குடிஞை யென்னும் நெடிய நிலையையுடைய வாயிலமைந்த சம்பாபதியின் திருக்கோயிலின்; அகவயின் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கிளன் எழுந்து-உள்ளிடத்தே துயில்கொண் டிருந்த மணிமேகலையானவள் அம்பலத்தே யெழுந்த அரவம் கேட்டுத் துயில் மயக்கத்தோடு எழுந்து; (கந்திற் பாவையின் கடவுள் மொழியினாலே) விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்- விச்சாதரன் உதயணனை வாளால் எறிந்து கொன்ற செய்தியையும் ;மன்றப் பொதியில் கந்து உடை நெடுநிலை கடவுள் பாவை ஆங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அம்பலமாகிய அவ்வுலக வறவியின் தூணை இடமாகக் கொண்டு நெடிது நிலைபெற்றிருக்கின்ற தெய்வத் தன்மையுடைய அக் கந்திற் பாவையானது அப்பொது அவ் விச்சாதரனுக்குக் கூறிய வியத்தகு மொழிகளையும்; கேட்டனன் எழுந்து-கேட்டுத் துயில் மயக்கம் நீங்கி நன்கு விழிப்புற்றவளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து; தோட்டு அலர்குழலி இவ்வுரு கெடுக என உள்வரி நீங்கி-அம் மணிமேகலை இக் காயசண்டிகையின் வடிவம் என்னை விட்டொழிவதாக என்று அவ் வேற்றுருவத்தினின்று விலகித் தன் வடிவத்தோடே நின்று அரற்றுபவள்;
(விளக்கம்) கடவுள் என்றது-துவதிகனை. குடவயின்-மேற்றிசையின்கண். முதியாள் கோட்டம்-சம்பாபதி கோயில். கிடந்த என்றது துயில்கொண்டிருந்த என்றவாறு. மதுமலர்க்குழலி: மணிமேகலை மயங்கினள்: முற்றெச்சம். விஞ்சையன் செய்தி-உதயகுமரனை வாளால் எறிந்தமை வேந்தன் மைந்தன்: உதயகுமரன் உற்றது என்றது. கொலை யுண்டமையை அற்புதக் கிளவி-வியத்தகு மொழி; அஃதாவது, காயசண்டிகையின் நிலை இன்னது எனக் கூறியதாம். இவ்வுரு என்றது, தான் மேற்கொண்டிருந்த காயசண்டிகை வடிவத்தை; அவ்வடிவமே உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணம் என்னும் கருத்தால் கெடுக! என்றாள். தோடலர்-தோட்டலர் என விகாரம் எய்தியது. குழலி: மணிமேகலை. உள்வரி-வேடம் மேல்வருவன மணிமேகலையின் அரற்றல், ஆதலின் அரற்றுபவள் என எழுவாய் பெய்துரைத்துக் கொள்க.
மணிமேகலையின் அரற்றுரை
11-22: திட்டி..........காதல
(இதன் பொருள்) (22) காதல-என் ஆருயிர்க்காதலனே!; திட்டிவிடம் உண நின் உயிர்போம் நாள் கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-அந்தோ! போய பிறப்பில் திட்டிவிடம் என்னும் பாம்பினது நஞ்சு பருகுதலாலே உன்னுடைய உயிர் போன நாளிலே அடிச்சியாகிய யான் மிக்க நெருப்பினை உடைய சுடுகாட்டின்கண் தீப்பாய்ந்து என் உயிரை யானே சுட்டுப் போக்கினேன், இப் பழந் தொடர்பு காரணமாக; உவவன மருங்கின் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின்-மன்னவன் மகனாக இப்பிறப்பில் பிறந்து வந்த நின்னை யான் உவவனம் என்னும் பூம்பொழிலின்கண் முதன் முதலாகக் கண்டபொழுதே நின்பால் வந்த என் நெஞ்சத்தைத் தடுத்து நிறுத்த இயலாதேன் ஆயினேன், என் மன நிலை இங்ஙனம் இருத்தலின்; தலை மகள் தோன்றி என்னை ஆங்கு மணிபல்லவத்திடை உய்த்து என்பால் அருள் மிக்க எங்குல முதல்வியாகிய மணிமேகலா தெய்வம் அம் மலர்வனத்தினில் வந்து என்னைத் துயிலும்பொழுது அவ்விடத்தினின்றும் எடுத்துப்போய் மணிபல்லவத் தீவின் கண் வைத்தும்; பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி-பற்றறுதற்குக் காரணமான பெரிய தவத்தை உடைய புத்தபெருமானுடைய பீடிகையைக் காணச் செய்து அவ்வாற்றால் என்னுடைய பழைய பிறப்பை உணர்ந்துகொண்டு நின்ற என் முன்னே எழுந்தருளி அத் தெய்வமானது; உன் பிறப்பு எல்லாம் ஒழிடு இன்று உரைத்தலின்-அப் பிறப்பிலே என் காதலனாகிய உன்னுடைய முற்பிறப்பும் இப்பிறப்பும் ஆகிய பிறப்புகளையும் இவற்றிற்கியன்ற காரணங்களையும் சிறிதும் ஒழிவின்றி அறிவித்தமையாலே; யான்-நின் காதலி ஆகிய யான் நின்பால் அன்பு மிகுந்து; பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்-பிறந்தவர்கள் இறந்து போதலும் இறந்தவர் மீண்டும் பிறந்தலும் இங்ஙனம் பிறந்தும் இறந்தும் சுழன்று வருகின்ற உயிர்களுக்கு அவை செய்கின்ற கல்வினைகள் கொணர்ந்து தருகின்ற மன அமைத்திக்குக் காரணமாகிய இன்பமும் அவை செய்த தீவினைகள் கொணர்ந்து தருகின்ற அமைதி அற்ற துன்பமும் ஆகிய இவற்றின் இயல்புகளையும்; நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காய சண்டிகை வடிவானேன் உனக்கு அறிவித்து உனது பிறவித் துயரங்களுக்கெல்லாம் காரணமாய் இருக்கின்ற இருள்சேர் இருவினையும் ஒழித்து நின்னை உய்விக்க கருதியன்றோ இக் காய சண்டிகை வடிவத்தை யான் மேற்கொள்ளலாயினேன் அந்தோ! அம்முயற்சியே நினது சாவிற்குக் காரணமாய் முடிந்ததே என்றாள் என்க.
(விளக்கம்) திட்டிவிடம்-கண்ணால் நோக்கியே கொல்லும் ஒருவகைப் பாம்பு. கட்டழல்-மிக்க நெருப்பு. என் உயிர் சுட்டேன் என்றது -தீப்பாய்ந் திறந்தேன் என்றவனாறு. நின்பால் உள்ளம் தவிர்விலேன் என்றது-அடிப்பட்டு வருகின்ற அன்புத் தொடர்பு காரணமாக மறு பிறப்பெய்தி வந்த நின்பால் எய்திய என் நெஞ்சத்தைத் தவிர்க்க இயலாதேன் ஆயினேன் என்பதுபட நின்றது. தலைமகள் என்றது- மணிமேகலா தெய்வத்தை; குலதெய்வமாதலின் தலைமகள் என்றாள். மாதவன்: புத்த பெருமான். காட்டினமையால் என் பிறப்பு உணர்ந்து நின்ற என்க. உன் என்றது-உதயகுமரனை யான் உனக்கு இடர்களைய எண்ணிக் காயசண்டிகை வடிவானேன். அதுவே உனக்குச் சாத்துன்பத்தை விளைவித்துவிட்டது என்று பரிந்துகூறியவாறு. ஈண்டு,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (380)
எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும்.
இதுவுமது
23-26: வைவாள்...........எழுதலும்
(இதன் பொருள்) வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை உருப்ப விளிந்தனையோ- கூரிய வாளையுடைய விச்சாதரனுடைய மயக்கம் காரணமாக மிக்க சினத்தைக் கருவியாகக் கொண்டு நின்று பழவினை சினந்து வந்து ஊட்டுதலாலே இறந்தொழிந்தாயோ; என விழுமக் கிளவியின் வெந்துயிர்த்துப் புலம்பி-என்று சொல்லி அழுகின்ற துன்ப மொழிகளோடே வெய்தாக மூச்செறிந்து தனிமையுற்று; அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-நிலத்தில் வீழ்ந்து அழுது ஏங்கி நெடிடுயிர்ப்புக் கொண்டு உதயகுமரன் உடல் கிடக்கும் இடத்திற்குப் போக எண்ணிச் செல்லுமளவிலே; என்க.
(விளக்கம்) வை-கூர்மை. மயக்கு-அறியாமை. வெவ்வினை-கொடிய தீவினை உருப்ப என்றது. உருத்து வந்தூட்ட என்றவாறு, விழுமக்கிளவி-துன்பத்தாற் பிறந்த மொழி. வெய்துயிர்த்தல்-வெய்தாக நெடுமூச் செறிதல் புலம்பி-தனிமையுற்று. அழுதனள் :முற்றெச்சம் அயா உயிர்த்தல்-நெட்டுயிர்ப்புக் கொள்ளல்.
மணிமேகலையைக் கந்திற்பாவை தடுத்தல்
27-35: செல்லல்..............உரைத்தலும்
(இதன் பொருள்) இருந்தெய்வம் செல்லல் செல்லல்சே அரிநெடுங்கண் அல்லியம் தாரோன் தன்பால் செல்லல்-தூணகத் துறைகின்ற பெரிய தெய்வமானது போகாதே போகாதே சிவந்த வரிகள் படர்ந்த நெடிய கண்ணையுடைய மணிமேகலாய் அகவிதழ்களால் புனைந்த மலர்மாலை அணிந்த உதயகுமரன்பால் போகாதே கொள்; நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்-உனக்கு இவ்வுதயகுமரன் கணவனாகப் பிறந்ததுவும் நின்னுடைய மனதிற்கு இனியவனாகிய இவனுக்கு நீ மனைவியாகப் பிறந்ததுவும்; கண்ட பிறவியே அல்ல-நீ உணர்ந்திருக்கின்ற உங்களுடைய முற்பிறப்பு மட்டுமே அல்ல; பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-அதற்கு முன் நிகழ்ந்த பழங்காலத்தும் பன்முறை அங்ஙனமே கணவன் மனைவியாகப் பிறந்த பிறப்புகள் பற்பல உள்ளன; காரிகை-நங்கையே கேள்; தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்-நீ இப்பொழுது மாறி மாறி வருகின்ற பிறவிக் கடலின்கண் ஆழ்வதற்குக் காரணமான அப் பிறப்பினையே ஒழித்து விடுகின்ற நல்நெறியிலே செல்லுகின்ற முயற்சியை உடையை அல்லையோ ஆதலால்; விழுமங் கொள்ளேல் என்று இவை சொல்லி உரைத்தலும்-துன்புறாதே கொள் என்று இவ்வரிய செய்திகளைச் சொல்லித் தடுத்துக் கூறுதலும்; என்க.
(விளக்கம்) செல்லல்: எதிர்மறை வியங்கோள்; சேயரி நெடுங்கண்: அன்மொழித் தொகை. அல்லி-அகவிதழ். தாரோன் என்றது உதயகுமரனை. உதயகுமரன் உடம்பின் அருகே செல்லற்க என்று தடுத்தப்படியாம் மகன்-கணவன். மகள்-மனைவி. கண்ட பிறவி-புத்தபீடிகையின் தெய்வத்தன்மையாலும் மணிமேகலா தெய்வத்தின் திருவருளாலும் நீ உணர்ந்து கொண்டிருக்கின்ற உங்கள் முற்பிறப்பு என்றவாறு; தெய்வ மாதலின் இந்நிகழ்ச்சியை அறிந்து கூறிற்று என்க. காரிகை: விளி தடுமாறுதல்-மாறி மாறி மேலும் கீழுமாய் வருதல் பிறவிக் கடலில் என்க. தோற்றம் -பிறப்பு. தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் என்றது, போகாதே போகாதே என்று தான் வற்புறுத்துத் தடுத்தற்குக் காரணம் இதுவென உடம்படுத்துக் கூறிய படியாம் என்னை?
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை (குறள்-345)
என்பது பற்றி பழவினைத் தொடர்புடைய அம் மன்னன் மகனை நீ மனத்தாலும் நினைதல் கூடாது எனவும், அவன் பொருட்டு நீ இவ்வாறு வருந்துதலும் கூடாது எனவும் அறிவுரை கூறியபடியாம். அறிதற்கரிய செய்திகளை எடுத்துக் கூறி அத் தெய்வம் உணர்த்திற்றென்பார் இவை சொல்லி உரைத்தலும் என வேண்டாது கூறி வேண்டியது முடித்தார்.
மணிமேகலை கந்திற்பாவையைத் தன் நன்றியறிவு தோன்றக் கைதொழுதல்
36-44: பொன்........ஈங்கென
(இதன் பொருள்) பொன்திகழ்மேனி பூங்கொடி பொருந்தி-பொன் போல விளங்குகின்ற திருமேனியையுடைய பூங்கொடி போல் பவளாகிய மணிமேகலை தானும் அத் தெய்வத்தின் மொழிக்குடன் பட்டு நின்று கூறுபவள்; பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய தெய்வம் நீயோ-வியப்புற்றுப் பொய்த்தல் இல்லாத மொழி பேசுகின்ற நாவினோடு இவ் வம்பலத்தின்கண் தூணில் உறைகின்ற தெய்வம் ஒன்றுண்டு என்று அறிந்தோரால் கூறப் படுகின்ற கந்திற்பாவை என்னும் தெய்வம் நீ தானோ; திருஅடி தொழுதேன்-அங்ஙனமாயின் நன்றுகாண் அடியேன் நின்னுடைய திருவடிகளை நன்றியறிவுடன் கைகூப்பித் தொழுகின்றேன்; விட்ட பிறப்பின் ஈங்கு இவன் செல்உயிர் திட்டிவிடம் உண் யான் வெய்து உயிர்த்து நெஞ்சு நடுங்கி நெடுந்துயர்கூர போயது-கழிந்த பிறப்பின்கண் இங்கு வெட்டுண்டிறந்த மன்னன் மகன் உயிரைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கண்ணால் நோக்கிப் பருகுதலாலே உடலை விட்டுப் போகின்ற உயிரானது என்னுடைய உள்ளம் நடுங்கிப் பெரிய துயர் மிகுந்து யான் வருந்தும்படி போயதற்கும்; விஞ்சையன் வாளின் விளிந்ததுஉம் இப்பிறப்பின்கண் விச்சாதரனுடைய வாளினாலே இவன் வெட்டுண்டு இறந்தமைக்கும் காரணங்களையும்; அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் நின் பேரருள் ஈங்கு பெறுவேன் தில்ல என அறிந்திருப்பாய் அல்லையோ அவற்றை அறிந்துள்ளாயாயின் நின்னுடைய பெரிய அருளால் இப்பொழுது அறிந்து கொள்ளப் பெறுவேன்: இஃது என் விருப்பமாம் என்று சொல்லிக் கை கூப்பி வணங்கா நிற்ப; என்க.
(விளக்கம்) விட்ட பிறப்பு-முற்பிறப்பு. இவன்-இம் மன்னன் மகன்-முற்பிறப்பில் இவனுயிர் திட்டி விடத்தால் போயதற்கும் இப்பிறப்பில் இவன் வாளால் இறந்ததற்கும் உரிய காரணங்களையும் நீ அறிந்திருத்தல் கூடும் அறிந்ததுண்டாயின் அவற்றையும் எனக்குக் கூறியருளுக, இஃது என் வேண்டுகோள் என்று கூறியபடியாம். தில்ல: விழைவின்கண் வந்தது; உரிச்சொல்.
கந்திற்பாவை மணிமேகலைக்கு காரணம் அறிவுறுத்தல்
45-52: ஐஅரி.............என்றலும்
(இதன் பொருள்) ஐ அரி நெடுங்கண் ஆயிழை கேள் என தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-அழகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய ஆயிழையே கூறுவல் கேட்பாயாக என்று சொல்லித் தனக்குரிய தெய்வ மொழியினாலே அக் கந்திற்பாவை கூறுகின்றது:-காயங்கரை எனும் பேரியாற்று அரைகரை மாயம் இல் மாதவன்-முற்பிறப்பிலே நீயும் நின் கணவனாகிய இராகுலனும் காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின் கண் எழுந்தருளி இருந்து பொய்மை சிறிதும் இல்லாத பெரிய தவத்தை உடைய புத்தர்; வருபொருள் உரைத்து மருள் உடை மாக்கள் மனமாசு கழூஉம்-உலகில் வந்து பிறந்தருளி அறங்கூறும் காலத்தையும் அறிவித்து அறியாமையுடைய மாந்தரின் மனத்தின்கண் உள்ள அழுக்ககற்றுபவனும் ஆகிய; பரமதருமனை பேணினிர் ஆகி-பிரமதருமன் என்னும் பெயரையுடைய துறவியைக் கண்டு அவனை நன்கு மதித்துப் போற்றுபவராய்; யாம் விடியல்வேலை அடிகளுக்கு அடிசில் சிறப்பு ஆக்குதல் வேண்டும் என்றலும்-யாங்கள் நாளை விடியற் காலத்தே அடிகளாருக்கு அடிசிலால் விருந்து செய்தற்கு விரும்பினேம் என்று நீவிர் இருவிரும் நுங்கள் மடைத்தொழிலாளனுக்குக் கூறாநிற்க; என்க.
(விளக்கம்) மாதவன் வருபொருள் என்றது-புத்தபெருமான் வந்து அவதரிக்கும் செய்தியை என்றவாறு; உலகத்தில் தீவினை மிகும் காலம் தோறும் புத்தபெருமான் ஈண்டு வந்து பிறந்தருளித் தமது அருள் அறத்தை நிலை நிறுத்துவர் என்பது பவுத்த நூற்றுணிபு. இதனை ஈரெண்ணூற்றொ டீரெட்டாண்டிற் பேரறிவாளன் றோன்றும் எனவும்(12:77-8) புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோ னுலகுயக் கோடற் கொருவன் றோன்று மந்தா ளவனறங் கோட்டோரல்ல தின்னாப் பிறவி யிழுக்குந ரில்லை எனவும்(25:45-8) கரவரும் பெருமைக் கபிலையும் பதியி ளளப்பரும் பாரமிதை யளவன்ற நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி(26-44-6) எனவும் இந்நூலுள்ளே பலவிடத்தும் வருதலாலும் காண்க. பிரமதருமன் ஒரு பவுத்தத் துறவி. இவர் வரலாற்றினை 9 ஆம் காதையில் விளக்கமாகக் காணலாம். ஆக்குதல் வேண்டினம் என்று மடைத்தொழிலாளனுக்கு அறிவிக்க என்க.
உதயகுமரன் வாளால் எறியுண்டமைக்குக் காரணமான தீவினை
53-62: மாலை..................அகலாதது
(இதன் பொருள்) மாலை நீங்க மனமகிழ்வு எய்தி காலை தோன்று அ வேலையின் வரூஉம்-அற்றை நாள் இரவு கழியா நிற்ப அவ்வறம் செய்தல் காரணமாக மனத்தின்கண் பெரிதும் மகிழ்ந்து நீங்கள் குறிப்பிட்ட அவ் விடியற்காலம் தோன்றுகின்ற பொழுதே வந்து; நடைத்திறத்து இழுக்கி நல்அடி தளர்ந்து மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை-மகிழ்ச்சியின்கண் உண்டான சோர்வு காரணமாக நடந்து செல்லும் பொழுது வழுக்கித் தனது நல்ல கால் தளர்ந்து அக்களையின்கண் உள்ள அடிசிற் கலங்கள் தொழிலாளனைக் கண்டு; சீலம் நீங்கா செய்தவத்தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்ற-நின் கணவனுக்குப் பத்துவகை ஒழுக்கத்தினின்றும் நீங்காது செய்கின்ற தவத்தை உடையவராகிய பிரம தருமருக்கு உண்டி வழங்கும் பொழுது தவறியமையால் பெரிதும் சினம் தோன்றா நிற்ப அம்மடைத் தொழிலாளனுடைய; தோளும் தலையும் துணிந்து வேறாக வாளின் தப்பிய வல்வினை அன்றே-தோளும் தலையும் வெட்டுண்டு வேறுபட்டு வீழும்படி தனது வாளால் வெட்டிய வலிய கொலையாகிய தீவினை யல்லவோ; விராமலர் கூந்தல் மெல்லியல் நின்னோடு இராகுலன் தன்னை இட்டு அகலாதது மணம் விரவிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய மெல்லியலாயிருந்த இல்ககுமியாகிய நின்னோடு நின் கணவனாகிய இராகுலனையும் விட்டு நீங்காமல் தொடர்வது; என்க.
(விளக்கம்) மனமகிழ்ச்சியோடு வந்தமையால் சோர்வுற்று அடிவழுக்கி அம் மடையன் மடைக்கலம் சிதைய வீழ்ந்தான் என்பது தோன்ற மனமகிழ்வெய்தி வந்தான் என்றார். இதன் பயன் கொலையுண்டவனும் அறவோன் என்றுணர்த்தல். வேலை-ஈண்டு உண்ணுதற்குரிய பொழுது. தப்பிய-வெட்டிய. வல்வினை யாதலால் அஃது எங்ஙனம் தன் பயனை ஊட்டாது போம்? என்றவாறு மணிமேகலையின் முற்பிறப்பாகிய இலக்குமியின் மேற்றாக மணிமேகலையை விராமலர் கூந்தல் மெல்லியல் என இத் தெய்வம் கூறுகின்றது என்க. இராகுலன்-உதயகுமரனுடைய முற்பிறப்பின் பெயர்.
வல்வினையின் இயல்பு
63-71: தலைவன்..........ஒழிந்தது
(இதன் பொருள்) தம் பொருட்டு அல்லல் ஆகிய அவல் வெல்வினை தலைவன் காக்கும் என்போர் அறியார்-தன்னிடத்தே அன்பு செய்கின்ற அடியார்கள் என்பது கருதி அவ்வடியாராகிய தம்மால் செய்யப்பெற்ற துன்பத்திற்குக் காரணமான தீவினை வந்து துன்புறுத்தாற்படி தம் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறுபவர் அறிவிலாதார் ஆவர்; அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் மறம் செய்து உளது எனின் வல்வினை ஒழியாது-ஒருவன் அறம் செய்ய வேண்டும் என்னும் காதல் உடையவனாய் அவ்வன்பு காரணமாகவேனும் அவனால் தீவினை செய்யப்பட்டிருக்குமாயின் அத் தீவினை உருத்து வந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண்; ஆங்கு அவ்வினை வந்து அணுகும் காலை-அவ்வாறு அத் தீவினை வந்து தன் பயனை ஊட்டுவதற்கு அணுகும் காலத்தே; தீங்கு உறும் உயிரே செய்வினை தீமையை எய்துதற்குரிய அவ்வுயிர்க்குச் செய்த அப் பிறப்பினூடேயே ஊட்டினும் ஊட்டும், அல்லது அவ்வுயிர் தான் செய்த வினை வழியாக இறந்துபோய் மாறிப்பிறக்கின்ற பிறப்பின் கண் வந்து தன் பயனை ஊட்டினும் ஊட்டும்; ஆங்கு அவ்வினை காண் ஆயிழை கணவனை ஈங்கு வந்துஇ இடர் செய்து ஒழிந்தது. முற்பிறப்பில் அம் மடையனைக் கொன்ற அத் தீவினையே நின் கணவனாகிய இராகுலனை இங்கு இப் பிறப்பில் வந்து தன் பயனாக இக் கொலைத் துன்பத்தை ஊட்டிக் கழிந்தது; என்க.
(விளக்கம்) தம் பொருட்டு அல்லல் ஆகிய வெவ்வினை தலைவன் காக்கும் என்போர் என மாறிக் கூட்டுக; இவ்வாறு கூறுபவர் சைவசமய முதலிய பிற சமயத்தவர்கள். இதனை-
சிவனும் இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்ததென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே (சுபக்கம்-304)
எனவரும் சிவஞானசித்தியாரானும் அறிக.
இறைவன்பால் அல்லது துறவோர்பால் உண்டான அன்பு காரணமாகச் செய்யப்பட்டாலும் மறவினை ஊட்டா தொழியாது என்றவாறு.
மீண்டு வருபிறப்பின் மீளினும் என்றது அப் பிறப்பிலேயே எய்தும் எய்தாதாயின் என இறந்தது தழீஇய எச்சவும்மை உறும் உயிர்-உறுதற்குரிய வுயிர். ஆங்கு-அவ்வண்ணமே. அவ்வினை-மடையனைக் கொன்ற தீவினை. ஆயிழை: முன்னிலைப் புறுமொழி. இவ்விடர் இக்கொலைத் துன்பத்தை.
கந்திற்பாவை மணிமேகலைக்கு எதிர்காலத்து வரும் ஏது நிகழ்ச்சிகளை அறிவுறுத்துதல்
72-81: இன்னும்........நீங்குவ
(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளமையுடைய பூங்கொடி அழகுடைய மணிமேகலை நல்லாய்!; இன்னும் கேளாய்-இன்னும் நினக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகள் உள்ளன அவற்றையும் கூறுவேன் கேட்பாயாக; மன்னவன்-சோழமன்னன்; மகற்கு வருந்து துயர் எய்தி-தன் மகனாகிய இவ்வுதயகுமரன் கொலை யுண்டமை அறிந்து பெரிதும் வருந்துதற்குக் காரணமான மகவன்பினாலே மாபெருந்துயர மெய்திப் பின்னர்; மாதவர் உரைத்த வாய்மொழி கேட்டு-பெரிய தவத்தையுடைய சான்றோர் எடுத்துக் கூறுகின்ற வாய்மையான அறிவுரைகளைக் கேட்டு அமைதியுற்ற பின்னர்; காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கு இடும்-செங்கோன் முறைப்படி ஆருயிர் காவலன் ஆதலின் நின்னையும் தன் காவலிற் படுத்து அதற்கியன்ற சிறைக்கோட்டத்திலே இடுவன்; இராசமாதேவி ஈடு சிறை நீக்கி கூட வைக்கும் கொட்பினள் ஆகி-பின்னர் உதயகுமரன் அன்னையாகிய கோப்பெருந்தேவி தன் மகன் கொலையுண்டமைக்கு இவளே காரணம் என்று கருதி நினக்கு இடுக்கண் செய்ய வேண்டும் என்னும் தன் படிற்றுளம் கரந்து நின்னை மன்னவன் இட்ட ஈடுசிறைக்கோட்டத்தினின்றும் நீக்கித் தன்னோடு உவளகத்திலே வைத்துக் கொள்ளும் ஒரு கொள்கையுடையவளாகி;(தான் கருதிய வஞ்சச் செயல் சில செய்யவும் செய்வள்;) மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற-பின்னர் மாதவி நின் நிலையறிந்து போய் அறவண வடிகளாரின் மலர் போன்ற திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நீ சிறைப்பட்டிருக்கின்ற துன்பச் செய்தியைக் கூறா நிற்றலாலே; அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அம்மாதவியையும் தம்மோடு அழைத்துக் கொண்டு அறவணவடிகளார் கோப்பெருந் தேவியின்பாற் சென்று கூறிய அறிவுரையாகிய மெய்மொழிகளைக் கேட்டுப் பின்னர்; காதலி நின்னையும் காவல் நீக்குவள்-தன் மகன் காதலியாகிய நின்னையும் அக்கோப் பெருந்தேவி சிறை வீடு செய்குவன் காண்; என்க.
(விளக்கம்) மன்னவன் என்றது உதயகுமரன் தந்தையை மகற்கு வருந்துயர்-மகன் பொருட்டுத் தனக்கு வருந்துயருமாம். வருந்து துயர்-இடையறாது வருந்துதற்குக் காரணமான பெருந்துயர்; மகன் இறந்துபட்டமையால் வந்த துயரம்; அது மாபெருந் துன்பமாதலின் அங்ஙனம் விதந்தபடியாம்.
மாதவர்: உதயகுமரனுக்குற்ற துரைக்க இனிச் செல்ல விருக்கும் சக்கரவாளத்துத் துறவோர்களை. நினக்குப் பிறரால் தீங்கு நேராமைப் பொருட்டும் நின் அழகான் மயங்கி நகரத்து இளைஞர் தீமைக்கு ஆளாகாமைப் பொருட்டும் நின்னைத் தன் காவலிலே வைத்துக் கோடலே அம் மன்னவன் செங்கோன் முறைமை ஆதலின் அவன் காவல் செய்திடும் என்னாது காவலன் என்று எடுத்தோதினர். காவல் செய்தற்கியன்ற பிழை செய்திலாத நின்னையும் என்பது தோன்ற உயர்வு சிறப்பும்மை கொடுத்தோதினர்.
ஈடுசிறை- சிறையில் ஒருவகைச் சிறை எனக் கோடலுமாம். அஃதாவது-குற்றமில்லாதவரையும் பிறர் வருத்தாமைப் பொருட்டு வைக்கும் பாதுகாவற் சிறை என்க. இக் கருத்தாற்போலும் காவலன் நின்னைச் சிறை செய்யும் என்னாது நின்னையும் காவல் செய்து அதற்குரிய இடத்திலே இடும் என்பதுபட ஓதியதும். மேலும் அவ்விடத்திற்கு ஈடுசிறை என்னும் பெயர் என்பது தோன்ற ஈடுசிறை நீக்கி என்று ஓதியதூஉம் என்று கருத இடனுண்ணையுணர்க இக்காலத்தும் அத்தகு சிறைக் கோட்டமுண்மையும் நினைக.
கொட்பு-கோட்பாடு. (78) மாதவன்: அறவணர். தீது-மணிமேகலை சிறைப்பட்ட துன்பச்செய்தி. தன் மகற்குப் பல பிறப்புகளிலே காதலியானவள் என்னும் பரிவு காரணமாகவும் நின்னைச் சிறை வீடு செய்வாள் என்பது தோன்ற, காதலி நின்னையும் என்று வேண்டா கூறி வேண்டியது முடித்தார்.
இதுவுமது
82-91: அரசாள்..........புகுவை
(இதன் பொருள்) அரசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-சிறைவீடு பெற்ற பின்னர் அரசாட்சியாகிய செல்வத்தையுடைய ஆபுத்திரனைக் காண்டற்கு விரும்பி அவன் இருக்கும் நகரத்திற்கு நின்னுடைய சான்றோராகிய அறவணர் மாதவி சுதமதி முதலிய மேலோரை வணங்கி அவர்பால் விடைபெற்றுச் செல்லவும் செல்வாய்; போனால் அவனொடும் பொருள் உரை பொருந்தி-அந்நகரத்திற்குச் சென்றால் அவ்வாபுத்திரனோடு அறவுரைகள் கூறி அவனோடு கேண்மை கொண்டிருந்து; மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து மாயம் இல்செய்தி மணிபல்லவம் எனும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்-கடலின்கண் மரக்கலம் ஊர்ந்து வருகின்ற ஆபுத்திரனாகிய புண்ணியராசன் என்பவனோடு புறப்பட்டு நீ வானத்தின் வழியே பொய்மையில்லாத செயலையுடைய மணிபல்லவம் என்னும் தீவின்கண் மீண்டும் போதலும் உண்டாகும்; தீவதிலகையின் சாவகமன்னன் தன்திறம் கேட்டு தன் நாடு அடைந்த பின்-மணிபல்லவத்தின்கண் தீவதிலகை என்னும் தெய்வத்தின் வாயிலாக அச் சாவக நாட்டு மன்னனாகிய புண்ணியராசன் தன் பழம்பிறப்பு வரலாறுகளைக் கேட்டறிந்து கொண்டு அத் தீவினின்றும் தன்னுடைய நாட்டிற்குச் சென்ற பின்னர்; ஆங்கு அத் தீவம்விட்டு அருந்தவன் வடிவாய் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை பின்னர் நீயும் அவ்வாறே தீவினின்றும் அரிய மாதவனாகிய வேற்றுருவங் கொண்டு வஞ்சி மாநகரத்திற்குச் செல்லுவாய் என்க.
(விளக்கம்) ஆபுத்திரன் என்றது சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கின்ற ஆபுத்திரன் என்றவாறு. புரையோர்-மேலோர் அவராவார், அறவணர் மாதவி சுதமதி சித்திராபதி முதலியோர். போகலும் போகுவை என்றது ஒரு சொல் நீர்மைத்து பொருளுரை என்றது பவுத்தர் அறவுரையை. பொருந்தி என்றது அவற்றைக் கேட்டு என்றவாறு. மாநீர்-கடல். வங்கம்-மரக்கலம். அவன் புண்ணியராசன். வங்கத்தில் வருகின்ற அவனோடு நீ வானத்தில் எழுந்து சேறலும் உண்டு என்க. சாவக மன்னன்-புண்ணியராசன். பூங்கொடி என்றது நீ என்னுந் துணை. புகுவை: முன்னிலை ஒருமை.
இதுவுமது
92-102: ஆங்கு............அந்நாள்
(இதன் பொருள்) ஆங்கு அந்நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்-அவ்விடத்தே அந்த வஞ்சி மாநகரத்தின்கண் உன்னால் மெய்ப்பொருளை வினவி அறிந்து கொள்ளுதற்குரிய உயர்ந்த நூற்கேள்வியையுடைய சான்றோர் பலராவர் அவரைக் கண்டு வினவுமிடத்தே அவர்களுள் வைத்து; இறைவன் எம் கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்-இறைவனே எங்களுக்குக் கடவுள், காணப்படுகின்ற எந்த உயிரினங்கள் உளவோ அவை அனைத்தையும் முறைமையினாலே படைத்தருளிய அவனே தலைவன் என்று கூறுவோர்களும்; தன் உரு இல்லோன் பிறஉரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்-தனக்கென்று யாதோருருவமும் இல்லாதவனும் உயிரினங்களுக்கெல்லாம் உருவங்களைப் படைகின்றவனும் ஆகிய அத்தகையவனே எங்களுக்குக் கடவுளாகும் என்று கூறுவோர்களும்; துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு இன்ப உச்சி இருத்தும் என்போர்களும்-யாங்கள் மேற் கொண்டிருக்கின்ற துன்பத்தைப் பொறுக்கின்ற இந் நோன்பு தானே இப்பிறவித் தொடர்புக்குக் காரணமான பற்றினை அறுத்து அவ்விடத்தே அந்தமில் இன்பமுடைய உலகினது. உச்சியில் வைக்கும் என்று கூறுவோர்களும்; பூதவிகாரப் புணர்ப்பு என்போர்களும்-ஐம்பெரும் பூதங்களும் தம்முள் விகாரமெய்திக் கூடிய கூட்டமே உலகம் இதற்கொரு கடவுள் இல்லை என்று கூறகின்றவர்களும் இங்ஙனமாக; பல்வேறு சமய படிற்று உரை எல்லாம் அல்லியம் கோதை கேட்குறும் அந்நாள்-பல்வேறு வகைப்பட்ட சமயக்கணக்கர்கள் கூறுகின்ற பொய்ம் மொழியையெல்லாம் மணிமேகலாய் நீ கேட்கலாகின்ற அந்த நாளிலே; என்க.
(விளக்கம்) அறிபொருள்-அறிதற்குரிய மெய்ப்பொருள். இறைவன் என்றது அங்கிங்கெனாதபடி எங்குமிருக்கின்ற பரப்பிரமத்தை முறைமை என்றது ஒன்றிலிருந்து ஒன்றைத் தோற்றுவிக்கின்ற முறைமை. தன் உருவில்லோன்-தனக்கென்று உருவமில்லாதவன்; பிறவற்றிற்கு உருப்படைப்போன் என்க. அன்னோன்-அத்தகையவன்; துன்ப நோன்பே அறுத்து உச்சியில் இருந்தும் என்க. பூத விகாரப்புணர்ப்பு என்பவர்-பூதவாதிகள்; படிற்றுரை-பொய் மொழி; அல்லியங் கோதை முன்னிலைப் புறமொழி.
இதுவுமது
103-112: இறைவனும்.......ஒழிவாயலை
(இதன் பொருள்) இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் இவ்வுலகத்திற்குக் கடவுளாவான் யாருமில்லை செத்தவர் மீண்டும் பிறப்பதில்லை ஆதலால்; அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-அறம் என்னும் அவற்றினோடு மாந்தர்க்குற்ற தொடர்பு என்கொலோ என்று கூரிய பூதவாதியை நோக்கி; பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க்கோதை எள்ளினை நகுதி-முற்பிறப்பும் அறநெறியும் பண்பினோடு அறிந்துகொண்டிருக்கின்ற மணிமேகலாய்! நீ இகழ்ந்து நகைப்பாய்; இவ்வுரை கேட்டு எள்ளிவை போலும்-நீ நகைத்தமை கண்ட அப் பூதவாதி யான் கூறிய மொழியைக் கேட்டு நீ என்னை இகழ்ந்து நகைத்தாய் போலும்; இங்கு எள்ளியது உரை என-நீ இவ்விடத்திலே என்னை இகழ்ததற்குக் காரணம் கூறுதி என்று அவன் நின்னை வினவா நிற்ப அவனுக்கு; உன் பிறப்பு உணர்த்துவை-நீ உன்னுடைய முற்பிறப்பினை உணர்ந்திருக்கின்ற வரலாற்றினைக் கூறுவாய்; ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை என்று அவன் உரைக்கும்-அது கேட்ட அந்தப் பூதவாதி நின்னை நோக்கிக் கூறுபவன் அம் மணிபல்லவத்தின்கண் உன்னைக் கொண்டுவந்த காண்டற்கரிய தெய்வமே நின்னை மயக்கி விட்டமையாலே மூங்கில் போன்ற தோளையுடைய நீ கனவின்கண் மயங்கி அங்ஙனம் கண்டிருக்கின்றாய் என்று அவன் உனக்குக் கூறுவான்; இளங்கொடி நல்லாய் அன்று நன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாய் அலை-மணிமேகலாய் நீ அங்ஙனம் அன்று என்று கூறுமளவிலே நில்லாமல் அவன் முன்னர் அறங் கூறுதலை மறந்து போகமாட்டாய் என்க.
(விளக்கம்) இறைவனும் இல்லை............அறைந்தோன் என்றது பூதவாதியை இறந்தோர் பிறத்தல் இல்லையாதலால் மாந்தர் அறம் செய்தல் பயனில் செயலால் என்பான் இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்றான். என்னை? என்னும் வீனாஅது பயனில் செயலாம் என்பது படநின்றது. அறவி-அறநெறி. நறுமலர்க் கோதை:முன்னிலைப் புறமொழி;காம்பன தோளி என்றது அத் தெய்வம் பூதவாதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் பூதாவதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க மயக்குற்றனை என்று பூதவாதி கூறினான் என்றமையால் மணிமேகலை அவனுக்குத் தன் பிறப்புணர்த்தும் வழி மணிமேகலா தெய்வம் தன்னை எடுத்துப் போயதும் அதனால் புத்த பீடிகை கண்டு பிறப்புணர்ந்து வரலாறு முழுவதும் கூறுவாள் என்பதும் பெற்றாம். அயர்ந் தொழி வாயலை-மறந் தொழியாய்.
இதுவுமது
113-118: தீவினை.....கேளாய்
(இதன் பொருள்) மடவாய் தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்-மணிமேகலாய்! ஒருவன் செய்த தீவினையின் பயன் அவனுக்கு வந்தெய்துதலும் இறந்தவர் மீண்டும் பிறத்தலும் வாயே என்று மயக்கொழி -உண்மையே என்று நீ அவன் உரையால் மயங்காதொழிக; வழுஅறு மானும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது குற்றமற்ற மரமும் மண்ணும் கல்லும் இவற்றால் பண்ணிய பாவைகளும் பேசமாட்டா என்னும் இயற்கையை; அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்-நீ அறிந்திருப்பாயோ அறியமாட்டாயோ அறிந்திலா யாயின் அது பற்றி யான் கூறும் இதனையும் கேட்பாயாக; என்க.
(விளக்கம்) வாயே என்று அவனுடைய மயக்கத்தை ஒழித்திடுக எனக் கந்திற்பாவையின் வேண்டுகோளாகக் கோடலுமாம். வழு-குன்றம் பேசா என்பது என்றது பேசமாட்டா என்னும் இயற்கையை. கந்திற்பாவை தான் தூணின் நின்ற பாவை வாயிலாகப் பேசுதலால் தன் பேச்சிணை அவள் ஐயுறாமைப் பொருட்டு அத் தெய்வம் இது கூறிய படியாம். ஆங்கு அது என்றது. அவ்வியற்கைக்கு மாறாய் இக் கற்பாவை பேசுமிது என்றவாறு.
கந்திற் பாவை தன் வரலாறு கூறுதல்
119-129: முடித்து....கேட்டியோ
(இதன் பொருள்) முடித்துவரு சிறப்பின் மூதூர்-யாண்டு தோறும் செய்து முடித்து வருகின்ற இந்திர விழாவினையுடைய பழைய இப் பூம்புகார் நகரத்தின்கண்; கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமா இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் யாங்கணும்-கொடியுயர்திய தேர் ஓடுகின்ற வீதிகளிலும் கோயில்களிடத்தும் முதிய மரங்கள் நிற்கும் இடங்களிலும் பழைமையான நீராடும் துறைகளிடத்திலும் ஊரம்பலத்திலும் மன்றங்களிடத்தும் இன்னோரன்ன எவ்விடங்களிலும் பொருந்துபு நாடி காப்பு உடை மாநகர் காவலும் கண்ணி-பெருந்தும் இடங்களை ஆராய்ந்தறிந்து மதில் அரண் முதலிய காவலையுடைய பெரிய இந்நகரத்திற்குத் தெய்வக் காவலும் வேண்டும் என்றும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-அவ்வத் தெய்வங்களுக்குப் பொருத்தமுடையதாக அவற்றின் இயல்பறிந் தோரால் துணியப் பெற்று மண்ணாலும் கல்லினாலும் மரத்தினாலும் சுவர்களிடத்தும்; கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க ஆங்கு அத்தெய்வதம் அவ்விடம் நீங்கா அச் சான்றோரால் கருதப்பட்ட அத் தெய்வங்களின் உருவத்தைச் செய்து காட்டுபவராகிய மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞரும் இயற்றா நிற்ப அவ்வுருவங்களில் உறைகின்ற அத் தெய்வங்கள் அவ்விடங்களினின்றும் ஒரு பொழுதும் நீங்க மாட்டா ஆதலின்; ஊன் கணினார்கட்கு உற்றதை உரைக்கும் என் திறம் கேட்டியோ ஞானக்கண் இல்லாத மாந்தர்களுக்கு நிகழ்வதனை எடுத்துரைக் கின்ற என்னுடைய வரலாறு கேட்பாயா; என்க.
(விளக்கம்) தேவர் கோட்டம்-தெய்வத்திருக்கோயில்கள்; பொதியில்-கட்டிடத்தோடு கூடிய ஊரம்பலம். மன்றம்-மரநிழலையுடைய பொதுவிடம். காப்பு-மதில் முதலியன. காவலும் கண்ணி என்றது அரண்காவலேயன்றித் தெய்வக்காவலும் வேண்டுமென்று கருதி என்றவாறு. யாப்பு-பொருத்தம், வலித்து-துணியப்பட்டு. அறிந்தோரால் வலிக்கப்பட்டு மண் முதலியவற்றால் தெய்வதம் காட்டுநர் வகுக்க என இயைத்திடுக தெய்வதம் காட்டுநர்-மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞருமாம். அத் தெய்வம் அவ்விடம் நீங்கா எனவே யானும் எனக்கு வகுத்த இப் பாவையினின்று உற்றதுரைப்பேன் என்று அறிவித்தவாறும் ஆயிற்று. இது குறிப்பெச்சம் கேட்டியோ என்புழி ஓகாரம் அசைச்சொல்.
இதுவுமது
129-142: இளங்கொடி...........என
(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளைமையுடைய மணிமேகலை நல்லாய்!; மன்பெரும் தெய்வகணங்களின் உள்ளேன்-யான் நிலைபெற்ற பெருந்தெய்வக் கூட்டங்களுள் ஒரு தெய்வமாக இருக்கின்றேன்; துவதிகன் என்பேன்-துவதிகன் என்று பெயர் கூறப்படுவேன்; தொன்று முதிர் கந்தின் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் யான் நீங்கேன்-பழைமையினால் முதிர்வுற்ற இத் தூணின்கண் மயன் என்னும் தெய்வத்தச்சன் பொழுதும் யான் நீங்குகிலேன்; என் நிலையது கேளாய்-என்னுடைய தன்மையைக் கூறுவேன் கேள்; மாந்தர் அறிவது வானவர் அறியார்-மக்கள் அறிதற்கியன்ற மறைச்செய்தியைத் தேவர்களும் அறிந்துகொள்ள வல்லுநர் அல்லர் போலும்; ஓவியச் சேனன் என் உறுதுணைத்தோழன் ஆவதை ஆர் இந்நகர்க்கு உரைத்தனரோ-தெய்வங்களுள் வைத்துச் சித்திசேனன் என்பான் என்னுடைய நெருங்கிய உசாஅத்துணைத் தோழனாய் இருக்கின்ற செய்தியை யார்தாம் இந்நகர மக்களுக்கு அறிவித்தனரோ யானும் அறிகிலேன்; அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் உடம் உறைந்தார் போல் ஒழியாது எழுதி-அச்சித்திர சேனனோடு யான் போய் விளையாடுகின்ற இடங்களிலெல்லாம் எம்முடன் கூடி இருந்தார் போன்று அவனையும் என்னையும் இணைத்து அவ்விடங்களில் ஒன்றேனும் ஒழியா வண்ணம் உருவெழுதி வைத்துக்கொண்டு; பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து-மலரும் மணப்புகையும் ஆகிய வழிபாட்டுப் பொருள்களைக் கூட்டி என்பால் வந்து; நாநனிவருந்த என் நலம் பாராட்டலின்-தம்முடைய நா மிகவும் வருந்துமளவிற்கு என்னுடைய அழகினை வர்ணித்துப் புகழ்தலின்; மணிமேகலை யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன்-மணிமேகலாய்! யான் அம் மக்களுக்கு எதிர்காலத்திலே நிகழ்கின்ற பொருளெல்லாம் தெளிவுடன் கூறுவேன் ஆயினேன்; என் சொல் தேறு என-ஆதலின் அங்ஙனமே யான் உனக்குக் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளையும் உண்மை என்று தெளிந்துகொள்ளக் கடவாய் ஐயுறாதே கொள்; என்க.
(விளக்கம்) தெய்வங்களுள் யான் சிறந்த தெய்வ கணத்தைச் சேர்ந்துளேன் என்பது தோன்ற மன்பெருந் தெய்வகணம் எனல் வேண்டிற்று என்பேன்-எனப்படுவேன். ஒப்பாக என்பதன் ஈறு தொக்கது. பாவை-கந்தினிடத்துப் படிமம். எனக்கு ஒரு தோழன் சித்திரசேனன் என்பவன் உளன். யானும் சித்திரசேனனும் எங்குச் சென்றாலும் சேர்ந்து செல்வேம். அவனும் யானும் விரும்பி விளையாடுகின்ற இடங்களும் பல உள. அவ்விடங்களிலெல்லாம் என்னையும் அவனையும் இணைத்தே எழுதியிருக்கின்றனர். வாழ்த்தும்போது என்னுடைய நலத்தை மட்டும் தனித்தெடுத்துப் பாராட்டுகின்றனர். அவன் எனக்குத் தோழனாய் இருப்பதனையும் அறிந்து, யாங்கள் கூடி விளையாடும் இடங்களிலும் ஒன்றும் ஒளியாமல் எங்களை இணைத்தே எழுதியிருக்கின்றனர். இம் மறைச் செய்திகளை எல்லாம் மக்களாகிய இவர்கள் எப்படித்தான் அறிந்து கொள்ள முடிந்ததோ! அவர்கள் அறிந்து கெண்ட வழி யாது என அறிந்துகொள்ளத் தெய்வமாகிய எனக்கும் இயலவில்லை என மக்களைப் பாராட்டுகின்ற இக் கந்திற் பாவை மாந்தர் அறிவது வானவர் அறியார் போலும் என்று வியந்து கூறுகின்றது; என்க துணிவுடன் உரைத்தேன் என்றது உரைத்து வந்தேன் அவ்வாறே நினைக்கும் உரைத்த என் சொல் தேறு என்பதுபட நின்றது. தேறு-தெளி.
மணிமேகலை கந்திற்பாவையை எனக்கு எதிர்காலத்தே வரும் ஏது நிகழ்ச்சிகளைக் கடைபோகக் கூறுக என்று வேண்டுதல்
143-146: தேறேன்...........நல்லாய்
(இதன் பொருள்) தெய்வக் கிளவிகள் தேறேன் அல்லேன்-அதுகேட்ட மணிமேகலை அருளுடைய தெய்வமே கேள்! அடிச்சி தெய்வங்கள் கூறுகின்ற மொழிகளை வாய்மை என்று தெளிந்து கொள்ளும் அளவிற்கும் பட்டறிவுடையேன் ஆதலால் ஐயுறாது உன் மொழிகளைத் தெளிந்து கொள்வேன் காண், ஒரு வேண்டுகோள்! நீ கூறுகின்ற ஏது நிகழ்ச்சிகளை; எனக்கு ஈறு கடை போக அருள் என்றலும்-அடிச்சிக்கு அவற்றை எனது இறுதிகாறும் கூறி அருளுக என்று வேண்டிக் கொள்ளா நிற்ப; துவதிகன் உரைக்கும் மடக்கொடி நல்லாய் சொல்லலும் சொல்லுவேன் வருவது கேளாய்-அவ் வேண்டுகோட் கிணங்கிய துவதிகன் என்னும் அத் தெய்வம் கூறும் மடப்பம் உடைய பூங்கொடி போலும் அழகுடையோய் அங்ஙனமே நின்னுடைய இறுதிக்காலம் வருந்துணையும் நிகழும் ஏது நிகழ்ச்சியைக் கூறுகின்றேன் கேட்பாயாக; என்க.
(விளக்கம்) தேறேன் அல்லேன் என்னும் இரண்டு எதிர்மறையும் ஓருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றன. ஈறு-சாக்காடு அங்ஙனம் தெளிவதற்குரிய பட்டறிவு எனக்கு மிகுதியும் உண்டென்பது இதன் குறிப்புப் பொருள். சொல்லலும் சொல்லுவேன் என்னும் அடுக்கு தேற்றமாகச் சொல்லுவேன் எனும் உறுதிப்பொருள் பயந்து நின்றது; இவ்வாறு அடுக்கிக் கூறும் வழக்கம் இந்நூலின்கண் பலவிடங்களில் காணப்படுகின்றது. அவ்விடமெல்லாம் இவ்விளக்கத்தைக் கோள்ளுக.
துவதிகன் கூற்று
147-154: மன்னுயிர்.........சேர்குவை
(இதன் பொருள்) மன் உயிர் நீங்க மழைவளம் கரந்து பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய-உலகத்தில் உடம்பொடு நிலைபெற்று வாழுகின்ற உயிர்கள் மடிந்து போகும்படி மழையால் உண்டாகின்ற வளம் ஒழிந்து போனமையால் அழகிய மதிலை உடைய காஞ்சிமாநகரம் அழகொழிந்து போகாநிற்க; ஆங்கு அது கேட்டு ஆர் உயிர் மருந்தாய் ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கி-ஆங்கு நிகழ்ந்த மன்னுயிர் மடியும் செய்தியைக் கேட்டு அரிய உயிர்களுக்குச் சாக்காடு தவிர்க்கும் மருந்தாக இங்கு இச்சம்பாபதி திருக்கோயிலின்கண் வைத்துள்ள தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தைச் செவ்விதாகக் கையில் எடுத்துக் கொண்டு; தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்-மணிமேகலாய்! உன்னுடைய தாய்மார்களாகிய மாதவியோடும் சுதமதியோடும் சென்று அறவணவடிகளாரும் அக் காஞ்சி நகரத்திலேயே இருப்பது தெரிந்து; செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை-நீயும் வஞ்சி நகரத்தினின்றும் போய் அக் காஞ்சிமா நகரத்தை அடைவாய் என்க.
(விளக்கம்) நீங்க என்றது இறந்துபட என்றவாறு. பொன் அழகு. நீ அது கேட்டுத் தெய்வப்பாத்திரம் செவ்விதின் வாங்கி அறவணன் ஆங்குளன் ஆதலும் தெரிந்து நீயும் அவ்வுயிரைப் பாதுகாத்தற்கு அந் நகரத்தை அடைவாய் என்றவாறு.
இதுவுமது
155-160: அறவணன்.............பலவுள
(இதன் பொருள்) ஆய்தொடி அறவணன் அருளால் அவ்வூர் பிறவணம் ஒழிந்து நின்பெற்றியை ஆகி-அக் காஞ்சி நகரின் கண் நீ அறவணவடிகளாருடைய அறிவுரை கேட்டு அந் நகரத்தின் கண் நின் உருவிற்கு வேறுபட்ட அம் மாதவன் வடிவத்தைக் களைந்து நினைக்கியல்பான பெண்ணுருவத்தை உடையையாகி வறன்ஓடு உலகின் மழைவளம் தரூஉம் அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை-வற்கடம் பரவிய இவ்வுலகத்தின்கண் மழை போல உணவாகிய செல்வத்தை யளிக்கும் அறப் பண்புடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தி உண்டி கொடுத்து அரிய உயிரினங்களைப் பாதுகாத்தலைச் செய்வாய்; ஆய் தொடிக்கு அவ்வூர் அறனோடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள- நினக்கு அக் காஞ்சிநகரத்தின்கண் அவ்வறச் செயலோடு பழவினைப் பயன்கள் பலவும் நிகழவிருக்கின்றன; என்க.
(விளக்கம்) அறவணன் அருளால் என்றது அறவணருடைய அறிவுரையின்படி என்றவாறு. ஆய்தொடி : முன்னிலைப் புறமொழி பிறவணம்-வேற்றுருவம்; என்றது அவள் மேற்கொள்ளும் மாதவன் வடிவத்தை. வறன் ஓடு உலகு-வற்கடம் (பஞ்சம்) பரவிய உலகம். மழை போல உணவாகிய செல்வத்தை அளிக்கும் என்க வறன், அறன்; மகரத்திற்கு நகரம் போலி.
இதுவுமது
141-172: பிறவறம்............உரைத்தலும்
(இதன் பொருள்) பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள்-பவுத்தருடைய அறத்திற்கு வேறுபட்ட அறங்களையுடைய பிற சமயக்கணக்கர் உனக்கு வஞ்சி நகரத்திலே உரைத்த அறங்களை எல்லாம் அறவணவடிகளாருக்கு நீ எடுத்துக் கூறிய அந்த நாளிலே தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்தும் மறஇருள் இரிய மன்உயிர் ஏமுற-அது கேட்ட அறவணவடிகளார் உனக்குக் கூறுபவர் தவமும் தருமமும் ஒன்றை ஒன்று சார்ந்து தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறப்பறுதற்குக் காரணமான நன்னெறியும் என்னும் இவற்றைத் தமக்கே சிறந்துரிமையுடைய பண்போடு எடுத்துக் கூறித் தீவினையாகிய இருள் கெடவும் நிலைபெற்ற உயிரினம் இன்பமுறவும்; அறவெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றுங்காறும்-தமது அறமாகிய ஒளியை உலகிலே பரப்பி அவ்வாறே அளக்கலாகாத இருத்திகளோடே புத்த பெருமான் என்னும் ஞாயிற்று மண்டிலம் இவ்வுலகில் வந்து தோன்றுமளவும்; செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா-யான் இறந்தும் பிறந்தும் பவுத்தர் கூறுகின்ற மெய்ப்பொருளைப் பாதுகாத்து; இத் தலம் நீங்கேன் யானும்-இக் காஞ்சி நகரத்தைக் கைவிட்டுப் போகேன் யானும் இந் நகரத்திலேயே உறைவேன் காண்; இளங்கொடி நீயும் தாயரும் தவறு இன்றாக-இளமையுடைய நீயும் நின் தாயராகிய மாதவியும் சுதமதியும் அறத்தில் பிறழாது வாழ்வீராக; நின் மனப்பாட்டு அறம் வாய்வது ஆக என ஆங்கு அவன் உரைத்தலும் நின்னுடைய உள்ளத்தினுள் தோன்றிய இத் துறவறம் நினக்கு வாய்ப்புடையதாகுக என்று அவ்வறவணவடிகள் உனக்குக் கூறா நிற்பவும்; என்க.
(விளக்கம்) பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறநெறி. சார்பு பன்னிரண்டு நிதானங்கள். அவை பேதைமை செய்கை யுணர்வே யருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பய, னிற்றென வகுத்த வியல்பீ ராறும் என்பன. இவை ஒன்றை ஒன்று சார்ந்து மண்டில வகையால் வருதலால் சார்பில் தோற்றம் எனப்பட்டன. இருத்தி-சித்தி; அவை அணிமா முதலிய எண் வகைப்படும். புத்த ஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத் தலம் நீங்கேன் நீயும் தாயரும் தவறின்றாக நினக்கு அறம் வாய்வதாக என்று அறவணர் நின்னை வாழ்த்துவார் என்றவாறு.
இதுவுமது
172-179: அவன்......உய்தி
(இதன் பொருள்) அவன் மொழி பழையாய் பாங்கு இயல் நல்அறம் பலவும் செய்த பின்-அவ்வறவணர் அறிவுறுத்த அறிவுரைகளினின்றும் பிறழாது அவற்றின் பகுதியில் இயன்ற நன்மையுடைய அறங்கள் பலவற்றையும் செய்தபின்; கச்சிமுற்றத்து நின் உயிர் கடைகொள-அக் காஞ்சி மாநகரத்தின் கண்ணே நின்னுயிர் இப் பிறப்பின் முடிவினை எய்தா நிற்பப் பின்னர்; உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழயாய்-நினக்கு வட மகதநாட்டில் பல பிறப்புகள் உண்டாகும், அப் பிறப்பெல்லாம் ஆணாகவே நீ பிறந்து புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அருளறத்தினின்றும் ஒழியாயாய்; மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-அவ்வறத்திற்குரிய சிறப்போடு பிறப்பெய்தி மாந்தர்களின் மன மயக்கங்களை அறிவுரை கூறி அகற்றித் தனக்கென வாழாது பிறர் பொருட்டு நல்லறம் கூறுகின்ற புத்த பெருமானுக்குத் தலைமாணாக்கனாகிப் பற்றறுத்து வீடுபெறுவாய்காண்; என்க.
(விளக்கம்) அவன்: அறவணன்; பாங்கு-பகுதி கச்சி முற்றம் என்புழி முற்றம் ஏழாவதன் பொருட்டு ஆண் பிறப்பாகச் சார்பறுத்து உய்தி என்றமையால் ஆண் பிறப்பே வீடுபேற்றிற்குரியது என்பது பவுத்தர் கொள்கை என்பது பெற்றாம். தலைச்சாவகன் முதல் மாணாக்கன்.
இதுவுமது
180-190: இன்னும்...............கதிரோனென்
(இதன் பொருள்) இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை இன்னும் சில கேட்பதற்கு விரும்புவாய் அல்லையோ? கூறுவன் கேள் அழகிய நுதலையுடைய பெண்ணே; ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் முன்னொரு காலத்திலே புகழால் உயர்ந்த அறிவுடையோனாகிய உன்குல முதல்வன் ஒருவனை உலகத்தை வளைந்துள்ள கடலின் கண்ணிருந்து எடுத்து உய்வித்த நின் குலதெய்வமாகிய மணிமேகலா தெய்வம்; சாது சக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே உவவனம் மருங்கில் உன்பால் தோன்றி-நீ முற்பிறப்பில் சாது சக்கரனுக்கு உண்டி கொடுத்தமையால் இங்ஙனம் நீ பிறந்துள்ளாய் என்னும் உண்மையைத் தெரிந்து கொண்டே நீ உவவனத்தின் உள்ளே புக்கபொழுது உன்னிடத்தே வந்து தோன்றி உன் வாழ்க்கை நெறி பிறழ்தல் கூடாது என்பது கருதியே நின்னை; மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள்-உவவனத்தினின்றும் எடுத்துப் போய் மணிபல்லவத்திலே சேர்த்தது இச் செய்தியைக் கூர்ந்து கேட்பாயாக; என துவதிகன் உரைத்தலும்-என்று அக் கந்திற் பாவையிடத்து நிற்கும் தெய்வம் கூறா நிற்றலும்; அவதி அறிந்த அணி இழை நல்லாள் துயர்க்கடல் நீங்கி-இவ்வாற்றால் தன் பிறப்பின் எல்லையை அறிந்து கொண்ட மணிமேகலை துன்பமாகிய கடலினின்றும் கரை ஏறி; வலை ஒழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் மலர் கதிரோன் உலகு துயில் எழுப்பினன்-வேடர் வீசிய வலையினின்றும் தப்பிய மயில் போல ஊழ் வினையினாலே எய்திய தன் மன மயக்கத்தினின்றும் ஒழியுமளவிலே கடலினின்றும் தோன்றுகின்ற கதிரவன் உலகிலுள்ள உயிர்களை உறக்கத்தினின்றும் எழுப்பினன்; என்பதாம்.
(விளக்கம்) ஊங்கண்-முன்பு. தூங்கெயிலெறிந்த நின்னூங் கணோர் நினைப்பின்(புறநா-39) போந்தைக் கண்ணி நின்னூங் கணோர் மருங்கிற் கடற் கடம் பொறிந்த காவலன் (சிலப். 28: 134-135) திரை எடுத்த-அழுந்தி. இறவாவண்ணம் கடலினின்றும் எடுத்த இக் கதையை, (சிலப்பதிகாரம், 15: 28 ஆம் அடி முதலியவற்றிற் காண்க) சாது சக்கரற்கு-சாது சக்கரனென்னும் முனிவனுக்கு. ஈது-இத்தன்மையை யுடையது. அவதி-எல்லை. 190. மலர் கதிரோன்: வினைத்தொகை.
இனி இக் காதையை-குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெய்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அவாவுயிர்த்தெழுதலும் இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, நின்பொருள் பேறுவேன் என தெய்வங்கூறும்; அங்ஙனங் கூறுந்தெய்வம் என்சொற்றேறு என மணிமேகலை எனக்கு அருள் என்றலும்; துவதிகனுரைக்கும் அங்ஙன முரைக்குந் துவதிகன் உரைத்தலும் நல்லாள் நீங்கி மயக்கொழிதலும் கதிரோன் துயிலெழுப்பினனென இயைத்துக் கொள்க.
கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று.