பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
திருப்புத்துார்: திருப்புத்துாரில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக மெகா விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.விநாயகர் சதுர்த்திக்கு திருப்புத்துார் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் பொது வழிபாட்டிற்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிதிருப்புத்துார் தென்மாநகர் பகுதியில் துவங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரத்திலிருந்து சிற்பக்கலைஞர்கள் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு வடிவங்களில் 200 விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் மும்முரமாக உள்ளனர். மூஷிக வாகனம் மட்டுமின்றி அன்னம்,மயில், சிங்கம்,ரிஷபம்,தாமரை என்று பல வாகனங்களில் விநாயகர் சிலைகளைஅமைத்துள்ளனர். குறைந்தது 5 அடியிலிருந்து 13 அடி வரை சிலைகள் அமைக்கப்பகின்றன.
இந்த சிலைகளை வடிவமைக்கும் சிற்பிகள் சிவலிங்கம், சங்கர் கூறுகையில் நாங்கள் பல தலைமுறைகளாக சிற்ப வேலைகள் பார்க்கிறோம். நவராத்திரிக்கான கொலு பொம்மை செய்வது தான் அதிகம். மழை காலம் போக மீதமுள்ள 8 மாதம் இந்த சிற்ப பணி செய்கிறோம். சதுர்த்தி நேரங்களில் விநாயகர் ரசாயன கலப்பில்லாத கல்நார் மாவு, பேப்பர் கூல் ஆகியவற்றை வைத்து இந்த சிலைகளை வடிக்கிறோம். இவை எளிதாக தண்ணீரில் கரையும். தலை,உடல்,கை,தும்பிக்கை,வாகனம்....என்று தனி,தனி பாகங்களாக செய்து கொள்கிறோம். அவற்றை இங்கு கொண்டு வந்து ஒன்றாக இணைத்து வண்ணம் பூசி பூர்த்தி செய்கிறோம். ஒரு சிலை செய்ய குறைந்தது ஏழு நாட்கள் ஆகிறது என்றனர்.