பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
உடுமலை: ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரத்தையொட்டி, உடுமலை கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில், ஆண்டாள் பிறந்த தினத்தை, ஆண்டுதோறும், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பெருமாளை மனதில் நினைத்து விரதமிருந்து வரம் பெற்ற, ஆண்டாளின் சிறப்பை போற்றி வணங்கும் நிகழ்வாகவும், இந்நாளை கோவில்களில் பூஜை நடத்துகின்றனர். குறிஞ்சேரி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்திருவிழா, கடந்த 11ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, குபேர மகாலட்சுமி பூஜை, மாலையில் லட்சார்ச்சனை நடந்தது. மறுநாள், லட்சார்ச்சனை நிறைவு பூஜை மற்றும் இரவு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஆடிபூரத்தையொட்டி, நேற்று, காலையில் ஆண்டாள் நாச்சியார் சமேத ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் அரங்கேறியது. பக்தர்கள், பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி, திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.
நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில்களில் உள்ள ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. அடிவள்ளி, வெங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இத்தினத்தையொட்டி, அம்மன் கோவில்களில், பெண்கள் வளையல்களை காணிக்கையாக படைத்து, வேண்டுதல் வைப்பதும் நடந்தது.