பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுார் கிராமத்தில், பட்டத்தரசியம்மன் கோவிலில் ஆடிமாத பூச்சாட்டு பெருந்திருவிழா நடந்தது.கோவிலில் பூச்சாட்டுடன் விழா துவங்கியது; தொடர்ந்து, 10 நாட்கள் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஊர் சாந்து, அம்மன் அழைப்பு, பட்டு எடுத்து வருதல் ஆகியன நடந்தன. கவுண்டம்பாளையத்தில் இருந்து சக்திக்கரகங்கள் அலங்காரத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது; நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அலங்கரிக்கப்பட்ட மாவிளக்கு, தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு படையலிட்டனர். பின், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.