திருவருட்செல்வர் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவனடியாரான திருநாவுக்கரசர் வேடத்தில் நடித்தார். இதில் காஞ்சி மகாசுவாமிகளின் முக பாவனைகளை அப்படியே உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும். இது குறித்து ரசிகர்கள் சிவாஜி கணேசனிடம் கேட்ட போது மகாசுவாமிகளின் ஞாபகம் வந்தவராக “பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நேரில் வந்து சந்திக்கும்படி சுவாமிகள், சொல்லியனுப்பினார். அப்போது சென்னை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார் சுவாமிகள். மனைவி, குழந்தைகளோடு தரிசிக்கச் சென்றேன். பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் எங்களை நோக்கி சுவாமிகள் நடந்து வந்தார். நாங்கள் அவரது திருவடியில் சாஷ்டாங்கமாக வணங்கினோம்.
“யாரு சிவாஜி கணேசனா?” என்றார் சுவாமிகள். “ஆமாம்... சுவாமி” என்றேன் பவ்வியமாக. ’நெறைய தான தர்மமெல்லாம் பண்றியே? அதுவும் வித்தியாசமா பண்றே. திருப்பதிக்குப் போனேன். ஒரு யானை வந்து என் கழுத்தில் மாலை போட்டது. எங்கிருந்து வந்தது இந்த யானை என்று கேட்டேன். சிவாஜி கணேசன் கொடுத்தது என்றார்கள். திருச்சியில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு போயிருந்தேன். யானை மாலை போட்டது. அதுவும் நீ கொடுத்தது தான் என்றார்கள். புன்னைவனநல்லூர் மாரியம்மன் கோயிலுள்ள யானையும் நீ கொடுத்தது என்றார்கள். சுண்டைக்காயளவு ஏதாவது கொடுத்துட்டு அதை யானையளவு விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். நீ யானையையே கொடுத்து விட்டு விளம்பரம் செய்துக்காம இருக்கியே? இப்படி ஒரு நல்ல பிள்ளையைப் பெற்ற உன் பெற்றோர் பாக்கியசாலிகள். உன் குடும்ப ஷேமத்திற்காக அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி ஆசியளித்தார். அப்போது சுவாமிகளை நெருக்கமாக தரிசித்ததில் அவரது முகபாவனை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். அதுவே திருவருட்செல்வர் திரைப்படத்தில் வெளிப்பட்டுள்ளது. எப்பேர்ப்பட்ட மகான் அவர்” என்று சொல்லி சிவாஜி கண்களைத் துடைத்துக் கொண்டார். திருப்பூர் கிருஷ்ணன்