நாகர்கோவில், ஓண பூஜை காலத்தில் சபரிமலைக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் பாதுகாப்பாக வருமாறு தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவில் கொட்டி தீர்த்த மழையால் சபரிமலை ரோடுகள் சேதமடைந்துள்ளன. அட்டத்தோடு பகுதியில் மலைச்சரிவு ஏற்பட்டு ரோடு துண்டிக்கப்பட்டுஉள்ளது. பம்பையில் ஆற்றில் மணல் குவிந்து தண்ணீர் பக்தர்கள் நடந்து செல்லும் பாதை வழியாக பாய்ந்து கொண்டிருக்கிறது.தண்ணீரின் அளவு இன்னமும் குறையவில்லை. பக்தர்கள் நதியை கடந்து செல்லும் இரண்டு பாலங்களையும் மணல் மூடியுள்ளது. மணலை அப்புறப்படுத்திய பின் தான் பாலத்தின் நிலை தெரிய வரும்.நடை திறப்புஓண பூஜைகளுக்காக நாளை (ஆகஸ்ட் 23)ல் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. 28-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப் படும். இந்த நாட்களில் சபரிமலைக்கு பத்தணந்திட்டை வழியாக வரும் பக்தர்கள் வடசேரிக் கரையில் இருந்து சிற்றாறு, சீதைத்தோடு, ஆங்ஞமுழி, பிலாப்பள்ளி, சாலயக்காயம் வழியாக பம்பை வரவேண்டும். எருமேலி வழி வரும் பக்தர்கள் வழித்தடத்தின் நிலை அறிந்து பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.