பதிவு செய்த நாள்
23
ஆக
2018
12:08
கோவை: பக்ரீத் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள, 13 ஈத்கா மைதானங்கள், 300 பள்ளிவாசல்களில், நேற்று சிறப்புத்தொழுகை நடந்தது; நான்கு லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்றனர். கடந்த, 12ம் தேதி மாலை, துல்ஹஜ் பிறந்ததையடுத்து, கோவையில், ஆக., 22ல், தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
நேற்று காலை, 7:30 முதல், 10:00 மணி வரை, முஸ்லிம்கள், ஈதுல்அளுஹா தொழுகையை, ஈத்கா மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் மேற்கொண்டனர். ஒப்பணக்கார வீதி அத்தர்ஜமாத் பள்ளிவாசல், பூமார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசல், வின்சென்ட் சாலை நல்லாயன் பள்ளி மைதானம், கோவை கவுண்டம்பாளையம் நுாருல் இஸ்லாம் பள்ளிவாசல், கரும்புக்கடை ஷம்சுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத், குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகை நடந்தது. கோவை மாவட்டம் முழுவதும், 13 ஈத்கா மைதானங்கள் உள்ளிட்ட, 300 பள்ளிவாசல்களில் நடைபெற்ற தியாகத்திருநாள் சிறப்புத்தொழுகையில், நான்கு லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகைக்குபின், அவரவர் இல்லங்களில் குர்பானி பிராணி அறுவை செய்யப்பட்டு, இறைச்சியை ஏழை எளியோருக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் வழங்கி, விருந்தளித்து, உற்சாகத்துடன் தியாகத்திருநாள் கொண்டாடினர்.