பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
சேலம்: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. திருமணமான பெண்கள் மாங்கல்யம் நிலைக்க, குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏற்பட, அனைவரும் நலமாக வாழ, வரலட்சுமி விரதம் இருக்கின்றனர். கன்னிப்பெண்கள், நல்ல வரன் அமைய, இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். இதற்காக, வீட்டில், அம்மன் படத்தை வைத்து, அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்வர். கொழுக்கட்டை, பச்சரிசி, இட்லி, உளுந்தவடை, அப்பம், பால் பாயாசம் போன்றவற்றை படைப்பர். கோவில்களுக்கு செல்லும் பெண்கள், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், கொய்யா, பூ, தாலிக்கயிறு, புது புடவை, வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். பின், அந்த கயிறை கையில் கட்டிக்கொள்வர். இந்நிகழ்ச்சி, சேலத்திலுள்ள அம்மன் கோவில்களில், நேற்று நடந்தது. குறிப்பாக, அழகிரிநாதர் கோவிலிலுள்ள துளசி மாடத்தில், சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அதேபோல், அணைமேடு அருகே, சிருங்கேரி மடத்தில், சாரதாம்பாள் சுவாமிக்கு வளையல் அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டிருந்தது. அதேபோல், சேலம், எல்லைப்பிடாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள், சுவாமியை தரிசித்தனர்.
சுமங்கலி பூஜை: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த சுமங்கலி பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, குடும்பம் சுபிட்சம் பெற, மாங்கல்யம் நிலைக்க, பூஜை நடந்தது. பின், மாரியம்மனுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிறைவாக, பெண்களுக்கு மாங்கல்ய சரடு, குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருவிளக்கு...: கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சுமங்கலி பெண்கள், வரலட்சுமி பூஜை நடத்தினர். பின், ஊர்மக்கள் சுபிட்சம் பெற, மழை வரவேண்டி, திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.