Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
22. அழற்படு காதை வஞ்சிக் காண்டம்(24. குன்றக் குரவை) வஞ்சிக் காண்டம்(24. குன்றக் குரவை)
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
23. கட்டுரை காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
05:01

அஃதாவது - ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் அஞ்சாது வந்து தோன்றிய மதுராபதி என்னும் அம் மாபெருந்தெய்வம் கண்ணகிக்குக் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணமும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய செங்கோன் முறைமையும் மதுரை தீக்கிரை ஆதற்குக் காரணமும் இனிக் கண்ணகி எய்தும் நிலைமையும் ஆகிய அறிதற்கரிய பொருள் பொதிந்த மொழிகளை அறிவித்து அவட்கு விதிமுறை சொல்லிச் சினந்தணிவித்து மதுரையை அழல் வீடு கொண்ட செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

கட்டுரை - பொருள் பொதிந்த உரை. அழல் வீடு கொள்ளல் நகரை மேலும் நெருப்புண்ணாமல் பாதுகாத்தல் (கண்ணகியின் சினத்தீ தணிவித்தலும் கொள்க.)

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்   5

வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக்  10

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன்  15

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோவென   20

ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி
பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் 25

வருந்திப் புலம்புறு நோய்
தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை; காதின்   30

மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்  35

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40

இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து  45

மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்   50

உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை
இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை  55

திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்  60

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி   65

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க  70

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்   75

பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி  80

கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்  85

தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்  90

ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து  95

முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப்  100

கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில்  105

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவந் திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்  110

கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென
ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப
நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி  115

அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்  120

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவந் திறந்தது   125

சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக்  130

கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண  135

உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்   140

காம்பெழு கானக் கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ்  145

செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும்   150

சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்  155

ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ  160

ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்  165

கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ   170

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை  175

ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக்  180

கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு  185

அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்  190

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி  195

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்.  200

வெண்பா

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும்  10

நேரத் தோன்றும் வரியுங் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வடஆரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்   15

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கிக் கிடந்த   20

உரை

மதுராபதியின் மாண்பு

1-10: சடையும் ........... தகைமையள்

(இதன்பொருள்.) சடையும் தாழ்ந்த பிறையும் சென்னி குவளை உண்கண் தவள வாள்முகத்தி - சடையையும் அதனிடத்தே தங்கிய பிறையையும் உடைய தலையினையும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணையுடைய வெண்ணிறமான ஒளி பொருந்திய திருமுகத்தையு முடையவளும்; கடை எயிறு அரும்பிய பவளச் செவ் வாய்த்தி - கடைவாயின்கண் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற எயிற்றினையுடைய பவளம் போன்று சிவந்த வாயையுடையவளும்; இடைநிலா விரிந்த நிலத்தில நகைத்தி - அவ் வாயினிடத்தே நிலா ஒளி விரிந்து திகழுகின்ற முத்துக்கோவை போன்ற பல் வரிசையினை யுடையவளும்; இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும் வலமருங்கு பொன்நிறம் புரையும் மேனியள் - தனது இடப்பாகம் இருண்ட நீலமணிபோன்ற நிறமுடையதாயிருப்பினும் வலப்பாகம் பொன்னினது நிறத்தை ஒக்கும் நிறமுடைய திருமேனியையுடையவளும்; இடக்கை பொலம் தாமரைப்பூ ஏந்தினும் வலக்கை அம்சுடர் கொடுவாள் பிடித்தோள் - தனது இடக்கையின்கண் பொற்றாமரை மலரை ஏந்தியிருப்பினும் வலக்கையின்கண் அழகிய ஒளியையுடைய மழுவை ஏந்தியவளும்; வலக்கால் புனைகழல் கட்டினும் - தனது வலக்காலிடத்தே அழகிய வீரக்கழலை அணிந்திருந்தாளேனும்; இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் - இடக்காலிடத்தே ஒப்பற்ற சிலம்பு கிடந்து ஒலிக்கின்ற தன்மையுடையவளும்; ஆகிய இம் மதுராபதிதானும்; என்க.

(விளக்கம்) தகைமையள் ஆகிய - (13) கிழத்தி என இயையும். முகத்தி, வாய்த்தி, நகைத்தி, மேனியள், பிடித்தோள், தகைமையள் என்பன கிழத்தி என்னும் ஒருபொருள்மேல் பல பெயர்கள் அடுக்கி வந்தன. இவையிற்றை நோக்கின் மதுராபதி என்னும் இத் தெய்வத்தின் உருவம் அம்மையப்பனாம் இறைவனுடைய திருஉருவம் என்பது புலப்படும். இத் தெய்வமே பிற்றைக் காலத்தில் அங்கயற்கண்ணியும் சோமசுந்தரக் கடவுளுமாகக் கொள்ளப்பட்டது போலும். அக்காலத்தே மதுராபதி என்னும் பெயரோடு இத்தெய்வம் பாண்டிய மன்னர் குலதெய்வமாகவும் மதுரை நகரத்தின் காவல் தெய்வமாகவும் கொள்ளப்பட்டது, என்க.

இடக்கால் தனிச்சிலம்பரற்றினும் வலக்கால் புனைகழல் கட்டும் தகைமையள் என்றும் பாடம். கடை எயிறு என்பதற்கு, பன்றிக் கொம்பு போலப் புறப்பட்ட எயிறு என்பது அரும்பதவுரை. கொடுவாள் - மழு.

10-17: பனித்துறை .............. குறையென

(இதன்பொருள்.) பனித்துறைக் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டுவரம்பன் பொதியிற் பொருப்பன் - சிறந்த முத்தினையுடைய துறையினையுடைய கொற்கைப்பட்டினத்தின் தலைவனும் தென்குமரி என்னும் செந்தமிழ் நாட்டுத் தெற்கெல்லையாகிய கடல் துறையையுடையவனும், பொன்னாகிய குவட்டை யுடைய இமயமலையினைத் தனதாட்சிக்கு வடவெல்லையாக உடையவனும் கன்னித்தமிழ் தோன்றிய பொதியின் மலையினை யுடையவனும் ஆகிய பாண்டிய மன்னனுடைய குலமாகிய; குலமுதல் கிழத்தி ஆதலின் - இறைக் குலத்தை அது தோன்றிய காலந் தொடங்கிக் காத்துவருகின்ற உரிமை உடையாளாதலின்; அலமந்து ஒருமுலை குறைத்த திருமாபத்தினி - தன் கணவனை இழந்தமையாலே பெரிதும் வருந்தித் தனது ஒரு கொங்கையினைத் திருகி வீசி மதுரையை எரியுண்ணச் செய்த திருமாபத்தினியாகிய; அலமருதிரு முகத்து ஆயிழை நங்கைதன் - தனது மனச்சுழற்சி வெளிப்பட்டுத் தோன்றுதற்கிடனான திருமுகத்தையுடைய மாதருள் தலைசிறந்த மங்கையாகிய கண்ணகியின்; முன்னிலை ஈயாள் - முன்னே தோன்றுதற்குத் துணியாதவளாய், பின்னிலைத் தோன்றி - அம் மாபத்தினிக்குப் பின்னர்த் திருவுருக்கொண்டு அவளைத் தொடர்ந்து சென்று; நங்கை - மாதர் மணிவிளக்கே; வாழி - நீ நீடூழி வாழ்வாயாக! என் குறைகேட்டிசின் என - யான் நின்பால் கூறுதற்குரிய என் காரியம் ஒன்றுண்டு அதனைக் கூறுவேன் கேட்பாயாக! என்று கூறி இரவா நிற்ப, என்க.

(விளக்கம்) மதுராபதி என்பது அதிகாரத்தாற் பெற்றாம். ஈண்டும் கொண்கன் துறைவன் வரம்பன் பொருப்பன் என்னும் பல பெயர்கள் பாண்டியன் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தன. அத் தெய்வம் திருமாபத்தினிமுன் வருதற்குக் காரணம் தெரித்தோதுவார் குலமுதற் கிழத்தியாதலின் என்றார். நங்கையின் சீற்றத்திற்குத் தானும் அஞ்சி முன்னில்லாது பின்னிலைத் தோன்றினள் என்பது கருத்து. குறை - காரியம். இசின்: முன்னிலையசை. தெய்வம் அலமந்து அலமரும் நங்கை பின்தோன்றி எனினுமாம். இதற்குத் தெய்வம் தன் காவலிற்பட்ட மன்னனும் அவன் நகரமும் அழிதற்கு அலமந்தது என்பது கருத்தாகக் கொள்க. அலமருதல் - துன்பத்தால் சுழலுதல்.

கண்ணகி கூற்று

18-20: வாட்டிய .............. என

(இதன்பொருள்.) வாட்டிய திருமுகம் வலவயின் சோட்டி - அம் மதுராபதியின் வேண்டுகோளாகிய மொழியைக் கேட்டலும் அக்கண்ணகித் தெய்வந்தானும் துயரத்தால் வாடிய தனது திருமுகத்தை வலப்பக்கமாகத் திருப்பி அம் மதுராபதியை நோக்கி; என்பின் வருவோய் நீ யாரை - என்பின் வருகின்ற நீதான் யார்; என்னுடை ஆர்அஞர் எவ்வம் அறிதியோ என - நீதான் என்னுடைய பொறுத்தற்கரிய பெருந்துன்பத்தின் தன்மையை உணர்ந்துள்ளாயோ? எற்றிற்குப் பின்வருதி? என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வாட்டிய - வாடிய; விகாரம். கோட்டுதல் - ஈண்டுத் திருப்புதல். யாரை என்புழி ஐகாரம்: சாரியை. அஞர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி.

மதுராபதியின் விடை

21-30: ஆரஞர் ................ வந்தவினை

(இதன்பொருள்.) அணியிழாய் - நங்காய்! ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் - யான் நினது பொறுத்தற்கரிய மாபெருந்துன்பத்தின் தன்மையை நன்கு அறிந்துள்ளேன் காண்: மாபெருந் கூடல் மதுராபதியென்பேன் - யான் மிகப்பெரிய இக் கூடன்மா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதி என்னும் தெய்வங் காண்! கட்டுரை யாட்டினேன் - யான் நின்பால் கூறுதற்குரிய பொருள் பொதிந்த மொழி ஒன்றுடையேன்; நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யானும் நின்னுடைய கணவனின் பொருட்டுப் பெரிதும் துன்பமுடையேன் காண்! பைந்தொடி கேட்டி - பசிய தொடியினையுடைய நங்கையே! எனது கட்டுரையைக் கேட்பாயாக! பெருந்தகைப் பெண் - பெண்டிர்க்குரிய பெருங்குணங்கள் எல்லாம் உடைய பெண்மணியே; என் நெஞ்சம் வருந்திப் புலம்புறும் நோய் ஒன்று கேளாய் -என் நெஞ்சமானது பெரிதும் வருந்தித் தனிமையுறுதற்குக் காரணமான துன்பம் ஒன்றனைக் கேட்பாயாக; தோழி நீ எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக்கடை ஈதொன்று கேட்டி - என் தோழியே! எம்மரசனுக்கு ஊழ்வினை வந்த வகையாகிய ஈதொரு செய்தியையும் கேட்பாயாக! மாதராய் உன் கணவற்குத் தீதுஉற வந்தவினை ஈதொன்று கேள் - பெண்ணே! உன்னுடைய கணவனுக்குத் தீமை உறுதற்குக் காரணமாக வந்துற்ற பழவினையின் செய்தியாகிய பிறிதொன்றனையும் கூறுவல் கேட்பாயாக; என்றாள் என்க.

(விளக்கம்) எவ்வம் அறிதியோ என்னும் வினாவிற்கு எவ்வம் அறிந்தேன் எனவும், யாரை நீ என்னும் வினாவிற்கு யான் மதுராபதி எனவும், பேணி இத் தெய்வம் விடை கூறுதலும், பின்னர் நின்பால் கட்டுரை கூற வந்துளேன் எனவும் அவைதாம் யாவை எனின் என் நோய் ஒன்றும், எம்மரசனுக்கு ஊழ்வினை வந்தபடி ஒன்றும், மேலும் உன் கணவனுக்கு வந்த ஈதொன்றுமாம் என அக் கண்ணகி தன்னை விரும்பித் தான் கூறுவனவற்றைக் கேட்குமாறு தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற சொற்றிறம் உணர்ந்து மகிழற்பாலதாம். இனி அத்தெய்வம் இவ்வாறு தோற்றுவாய் செய்த தன்னுடைய கட்டுரையைத் தொகை வகையாற் கூறி மேலே விரிவகையாற் கூறத் தொடங்குகின்றது; என்க.

பாண்டியனின் செங்கோன் மாண்பு

30-34: காதில் ........... அல்லன்

(இதன்பொருள்.) காதில் மறை நா ஓசை அல்லது யாவதும் மணி நாவோசை கேட்டதும் இலன் - எங்கள் அரசர் பெருமான் பாண்டியன் இதுகாறும் தனது செவியால் அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற அவர்தம் வேதமுழக்கத்தைக் கேட்பதல்லாமல் ஒருசிறிதுந் தன்பால்குறை கூற வருவோர் இயக்குகின்ற தனது கடைமணி நாவினது ஓசையை ஒருபொழுதும் கேட்டிருப்பானு மல்லன்! அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - ஒரோ வழி, தன் அடிகளைத் தொழுது வணங்காத பகைமன்னர்கள் அழுக்காறு காரணமாகத் தம்முள் தன்னைப் பழிதூற்றுதல் அல்லது; குடிபழி தூற்றும் கோலனும் அல்லன் - தனது குடை நிழலில் அமைந்த குடிமக்களே பழிதூற்றுதற்குக் காரணமான கொடுங்கோல் உடையனும் அல்லன் காண்! குடி தழுவிச் செங்கோல் ஓச்சும் மன்னனே எங்கள் கோமகன் கண்டாய் என்றாள், என்க.

(விளக்கம்) மறைநா - மறையோதும் அந்தணர்நா. யாவதும் - சிறிதும். மணிநா - ஆராய்ச்சிமணியின் நாக்கு.

இதுவுமது

35-41: இன்னுங் கேட்டி ............. தாராது

(இதன்பொருள்.) இன்னுங் கேட்டி - நங்காய்! இன்னும் எம்மரசன் பிறந்த குடியினது மாண்பினையும் கேட்பாயாக! ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு - நங்காய்! படைப்புக் காலந்தொட்டு நல்லொழுக்கத்தோடு இடையறாது கூடி வருகின்ற இந்தப் பாண்டிய மன்னருடைய சிறப்பான குடியின்கண் பிறந்தவர்களுக்கு; இளமை யானை கல்விப்பாகன் கை அகப்படாது - இளமைப் பருவம் என்கின்ற களிற்றியானையானது கல்வியாகிய பாகனுடைய அடக்குமுறைச் செயலின்கண் அகப்படாமல்; நல்நுதல் மடந்தையர் மடம் கெழு நோக்கின்- நல்ல நெற்றியையுடைய மகளிரினது மடப்பம் பொருந்திய காமநோக்கங் காரணமாக; மதமுகம் திறப்புண்டு - மதமாகிய வழி நன்கு திறக்கப்பட்டு; இடங்கழி நெஞ்சத்து - எல்லை கடந்த காமம் பெருகிய நெஞ்சத்தோடே; ஒல்கா உள்ளத்து ஓடுமாயினும் குறையாத ஊக்கத்தோடே நெறியல்லாத நெறியின்கண் இயங்குதல் பிறர்க்கெல்லாம் இயல்பேயாயினும்; இழுக்கந் தாராது - அத்தகைய இளம்பருவமும் ஒருசிறிதும் பழியைத் தரமாட்டாது காண் என்றாள், என்க.

(விளக்கம்) இப் பாண்டியருடைய விழுக்குடியிற் பிறந்தோர்க்குப் பிறர்க்கெல்லாம் இழுக்கமுண்டாக்கும் இளமைப் பருவந்தானும் இழுக்க முண்டாக்க மாட்டாது என்று அறிவித்தபடியாம்: என்னை?

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு  (951)

எனவும்,

ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்  (952)

எனவும் வரும் சான்றோர் மொழிபற்றிப் பாண்டியனுடைய குடியை ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடி என்றும், அத்தகைய குடிப்பிறப் புண்மையால் ஏனையோர் இழுக்குப்படும் இளம்பருவத்தினும் இக் குடிப்பிறந்தோர் இழுக்கம் எய்தார் என்றும் தெரித்தோதியவாறு. இங்ஙனங் கூறியது -கண்ணகியார் முறையில் அரசன் தன் ஊர் எனவும், மறனொடு திரியுங்கோல் மன்னவன் எனவும், என் காற் சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே எனவும், பழி கூறியதற்கு, எங்கோமகன் அவ்வாறு இழுக்குவானல்லன் என்று உணர்த்தியவாறு என்க. இடங்கழி நெஞ்சம் -நன்னெறியின் எல்லையாகிய இடத்தைக் கடந்து போன நெஞ்சம். கல்வியாகிய பாகன் என்க. உள்ளம் - ஊக்கம். விழுக்குடி - ஒழுக்கத்தாற் சிறந்த குடி.

பாண்டிய மன்னரின் செங்கோற் சிறப்பு

41-47: இதுவுங்கேட்டி ............... காவாதோவென

(இதன்பொருள்.) இதுவுங் கேட்டி - நங்காய்! இறைக்குடியாகிய இப்பாண்டியர் விழுக்குடிப் பிறந்தோர் செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒன்று கூறுவேன் அதனையும் கேட்பாயாக; உதவாவாழ்க்கைக் கீரந்தை மனைவி - பிறருக்கு ஏதும் உதவிசெய்ய வியலாத வறுமையையுடைய தனது வாழ்க்கையை நல்வாழ்க்கையாக்கும் பொருட்டுக் கீரந்தை என்னும் அந்தணன் ஒருவன் பொருள் தேடுதற்கு வேற்று நாட்டிற்குச் செல்பவன் தனக்குத் துணையில்லையே என வருந்திய மனைவிக்கு; அன்புடையோய்! அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென - குடிமக்களுக்குச் செங்கோலரசனாகிய வேலியே பாதுகாக்கும் வேலியாவதல்லது அதனினும் காட்டில் சிறந்த வேலி வேறொன்றும் இல்லை. அஞ்சற்க! எனக் கூறிப் போயினனாக; ஒருநாள் புதவக் கதவம் புடைத்தனன் - ஒருநாள் இக் குடிப்பிறந்த மன்னனொருவன் மாறுவேடங் கொண்டு நகரி காவற்பொருட்டு இரவில் வந்தவன் அப் பார்ப்பனி இருந்த வீட்டின் வாயிற் கதவினை இதன்கண் உறைவார் யார் என அறிதற்பொருட்டுக் கையால் தட்டினனாக அவ்வொலிகேட்டு அஞ்சிய பார்ப்பனி அந்தோ நீவிர் (அரைசவேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து) மன்றத்திருத்திச் சென்றீர் நன்கு பாதுகாவலில்லாத இம்மன்றத்தின் கண் என்னை வைத்துச் சென்றீரே இன்று; அவ்வழி அவ்வேலி காவாதோ என - இற்றைநாள் அவ்வாறு அந்த அரசவேலி என்னைப் பாதுகாவாது ஒழியுமோ! என்று சொல்லி அச்சத்தால் தன் கணவனை நினைந்து அரற்றாநிற்க, என்க.

(விளக்கம்) உதவா வாழ்க்கை - பிறர்க்கு உதவிசெய்ய வியலாத வறுமை நிலை. அவ்வாழ்க்கையைப் பொறாமல் பொருள் தேடுதற்கு வேற்றுநாடு சென்ற கீரந்தை என்க. அவன் செல்லுங்கால் தனக்குத் துணையின்மை நோக்கி வருந்திய மனைவிக்கு அரசவேலி நின்னைப் பாதுகாக்கும் அஞ்சாதே என்று சொல்லிப் போயினன் என்க. நகரி காவற்பொருட்டு இரவில் மாறுவேடங்கொண்டு தெருவில் வந்த மன்னன் அவ்வீட்டினைக் கண்டு நன்கு காவலில்லாத இவ்வீட்டில் உறைவார் உளரோ இலரோ என்று அறிந்துகோடற்கு அவ் வீட்டின் கதவைத் தட்டினான் என்க. உள்ளிருந்த மனைவி தன் கணவன் சொல்லியதைச் சொல்லி அவ்வரசவேலி இன்று காவாதோ என்று அஞ்சி அரற்றினள் என்றவாறு. இவ் வரலாற்றினை வேறுவேறு வகையாகவும் கூறுவாரும் உளர். மன்றம் என்றது பாதுகாவலின்மை நோக்கி இகழ்ந்து கூறியவாறு. அரும்பதவுரையாசிரியரும் அரணில்லாத வீடு என்பதுமுணர்க.

48-54: செவிச்சூட்டாணி ................... ஆகுதல்

(இதன்பொருள்.) செவிச்சூட்டாணியில் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று - அப் பார்ப்பனியின் அரற்றுரை கேட்டுத் தனது தவற்றினை உணர்ந்த அப் பாண்டிய மன்னன் அவள் கூறிய அம்மொழி தானும் தனது செவியின்கண் உலையில் காய்ச்சிய புகையும் தீயால் பொதியப்பட்ட இருப்பாணியைப் போல நுழைந்து தனது நெஞ்சினைச் சுடுதலாலே அந்தோ இவளுக்கு நமதுசெயல் பழியைப் பிறப்பிக்குமே என்று அஞ்சி மெய்நடுக்கமெய்தி அத் தவற்றினைச் செய்தமைக்காக; வச்சிரத்தடக்கை அமரர்கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்த கை குறைத்த - வச்சிரப் படையை யுடைய பெரிய கையையுடைய தேவேந்திரனுடைய தலையிற் சூட்டியிருந்த பொன்னாலியன்ற முடியணியை ஒளியுடைய தனது சக்கரப் படையால் உடைத்த பெருமையுடைய தனது கையை அப்பொழுதே தனது வாளால் துணித்த; செங்கோல் - செங்கோன்மைச் சிறப்பினையும்; குறையாக் கொற்றத்து - ஒரு பொழுதும் குன்றாத வெற்றியினையுமுடைய; இறைக்குடிப் பிறந்தோர்க்கு - இப்பாண்டிய மன்னர் குடியில் பிறந்தவர்க்கு; இழுக்கமின்மை ஒருபொழுதும் பழிபிறவாமை; நல்வாய் ஆகுதல் - பேருண்மையே ஆதலை அறிந்துகோடற்கு; இன்னும் கேட்டி - இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) நள்ளிரவில் யாரோ ஒருவன் அப் பார்ப்பனி வீட்டின் கதவைத் தட்டினான் எனப் பிறர் அறிந்தவிடத்து ஏனையோர்க்கு அவன் கற்புடைமையின்கண் ஐயம் பிறத்தல் தேற்றம் என்பதுபற்றி அரசன் அஞ்சி நடுங்கினன் என்பது கருத்து. ஈண்டு,

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்  (428)

எனவும்,

பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு  (1015)

எனவும் வரும் திருக்குறள்கள் நினைவிற் கொள்ளற்பாலனவாம். அப்பார்ப்பனியின் அரற்றுரைக்குப் புகையும் அழலும் பொத்திய சூட்டாணி உவமை என்க. செவியின்கண் சூட்டாணிபோல அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் என்க. அவன் குறைத்த கையின் சிறப்புக் கூறுவாள் அமரர் கோமான் முடி உடைத்த கை என்றாள். இவ்வாற்றால் பாண்டியன் தான்செய்த தவற்றினை உலகறியச் செய்து, பார்ப்பனிக்குப் பழிபிறவாமற் செய்தருளினமை உணர்க. குறைத்தமைக்குக் காரணமான செங்கோல் என்றவாறு. அவ் இறைக் குடியிற் பிறந்த பாண்டியனொருவன் அமரர் கோமான் முடியுடைத்ததனையும் மற்றொருவன் கை குறைத்ததனையும் ஒருங்கே ஈண்டு நெடுஞ் செழியனுக்கு ஏற்றிக் கூறியவாறாம்.

பாண்டியன் கை குறைத்தமையை எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத் தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச் செய்யார் மாணாவினை, எனவும், நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித் தன், ஆடு மழைத்தடக்கை யறுத்துமுறை செய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் எனவும் வருவனவற்றானும் அறிக.

நெடுஞ்செழியன் ஒற்றாடற் சிறப்பும், முறை செய்தற் சிறப்பும்

(55- பெருஞ்சோறு என்பது தொடங்கி 131 - கொற்ற வேந்தன் என்பது ஈறாக ஒரு தொடர்.)

55-64: பெருஞ்சோறு ...... காண்கென

(இதன்பொருள்.) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறத்தின் இயல்பினை நூல்வாயிலாக அறிந்தாங்குச் செலுத்துகின்ற செங்கோல் முறைமையினையும் போர்நெறியினை அறிந்து அதற்கேற்பப் போராற்றுகின்ற நெடிய வாளினையும் உடைய; புறவு நிறைபுக்கோன் - தன்பால் தஞ்சம் புகுந்த புறாவின் பொருட்டு அதன் நிறைக்கு ஈடாகத் தன் தசையெலாம் அரிந்து வைத்தும் பின்னர்த் தானும் துலாத்தின்கண் புகுந்தவனாகிய சிபி மன்னனும்; கறவை முறைசெய்தோன் - ஒரு பசுவிற்குத் தன் அரும்பெறல் மகனைத் தேராழியிலிட்டு முறைசெய்த மனுநீதிச்சோழனும் ஆகிய; பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் - நீர்ப்பூக்கள் மிகுந்த கழனிகளையுடைய பூம்புகார் நகரத்தையுடைய சோழனுடைய; தாங்கா விளையுள் நல்நாடு அதனுள் - நிலம் பொறாத மிக்க விளைவினையுடைய நல்ல சோழ நாட்டின்கண்; வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - மறைநூல் அறிவின்கண் வல்லவனாகிய பார்ப்பானாகிய பராசரன் என்பவன்; பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை - பாரதப்போரின்கண் பாண்டவர் கவுரவர் ஆகிய பகைவேந்தர் இருவர் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய வள்ளன்மையையும் திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திருமகள் நிலைபெற்ற பெரிய நாளோலக்கத்தினையும் உடைய; குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு - தன்னோடு குலவி வருகின்ற வேல்படையினையுடைய உதியன் சேரலாதன் என்னும் சேர மன்னனுடைய வள்ளன்மைச் சிறப்பினைக் கேள்வியுற்று; வண்தமிழ் மறையோர்க்கு வான்உறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன் காண்கு என - வளவிய தமிழ்ப்புலவனாகிய பாலைக்கவுதமன் என்னும் அந்தணனுக்கு மேனிலை உலகத்தின்கண் உறையுளை உண்டாக்கிக் கொடுத்த அந்தத் திண்ணிய ஆற்றலுடைய நெடிய வேற்படையையுடைய சேர மன்னனை யான் சென்று காண்பேன் என்று துணிந்து; என்க.

(விளக்கம்) பாரதப் போர் நிகழ்த்த எண்ணிப் பாண்டவரும் கவுரவரும் தனித்தனியே தன்பால் துணைவேண்டி வந்தாராகச் சேர மன்னன் அவ்விருவர்க்கும் நடுவுநிலை யுடையனாய்ப் பாரதப்போர் நிகழ்ந்து முடியுந்துணையும் இருவர் படைகளுக்கும் தான் ஒருவனே உணவு வழங்குவதாக ஒப்புக்கொண்டு அங்ஙனமே வழங்கினான் எனக் கூறுவர். இக்காரணத்தால் இவன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப்பட்டான். இவ் வரலாற்றினை :

ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனவும், (29. ஊசல்வரி); உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை எனவும், (அகநா. 233: 9-10.) அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் எனவும், (புறநா.2: 13-6) வருவனவற்றாலுணர்க. நாளிருக்கை - நாளோ லக்கத்து இருக்கை: என்றது கொலுமண்டபத்தை. புறவுநிறை புகுதலும் கறவைமுறை செய்தலுமாகிய புகழ்களை ஒரு சோழன்மேல் ஏற்றிக் கூறுவார், புகார்நகர் வேந்தன் என்றார். வலவை - வல்லமை. வண்டமிழ் மறையோன் என்றது பாலைக் கவுதமனார் என்னும் பார்ப்பனப் புலவரை. இவரை வானின்கண் உறையும்படி செய்த என்றவாறு, இவ் வரலாற்றினை:

நான்மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோன் எனவும், (சிலப். 28. 137-8); பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப் பாட்டு ......... பாடிப்பெற்ற பரிசில். நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்விற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். எனவும், (பதிற். 3 ஆம் பத்து, இறுதி வாக்கியம்;) துறக்கமெய்திய தொய்யா நல்லிசை, முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல் எனவும் (அகநா - 233: 7:8.) வருவனவற்றால் அறிக.

65-73: காடு நாடும் ............ பெயர்வோன்

(இதன்பொருள்.) காடும் நாடும் ஊரும் போகி - இடையே கிடந்த காடுகளையும் நாடுகளையும் ஊர்களையும் கடந்து சென்று அப்பாலுள்ள; நீடு நிலை மலையம் பிற்படச்சென்று - நெடிய நிலையினை யுடைய பொதியமலையும் பின்னே கிடக்கும்படி அப்பாற்சென்று; ஆங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி - வீடுபேறு ஒன்றனையே விரும்பும் கோட்பாட்டினையும் இரண்டு பிறப்பினையும் உடைய அந்தணர்க்குரிய மூன்று வகை வேள்வித் தீயையும் ஓம்புதலாகிய செல்வத்தினையும் நான்கு மறைகளையும் கடைபோக ஓதி உணர்தலும்; ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்து வகைப்பட்ட வேள்விகளையும் செய்தலாகிய தொழிலினையும்; அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - தமக்கியன்ற ஆறுதொழிலினையுமுடைய பார்ப்பனர்கள் தாம்பெற்ற முறைமையினை அப் பராசரனுக்குத் தாமறிந்தபடி வகைப்படுத்திக் கூறா நிற்ப; நாவலங்கொண்டு - அப் பராசரன் தனது நாவன்மையைக் கொண்டு;  அவர்களோடு சொற்போர் புரிந்து வெற்றி கொண்டு; நண்ணார் ஓட்டி - பகைவர்களை அஞ்சி ஓடச்செய்து; பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகை என்னும் சிறப்பினை எய்தி; ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் - தன்னுடைய வெற்றிக்குப் பொருத்தமாகச் சேர மன்னன் பால் நல்ல அணிகலன்களைப் பரிசிலாகப் பெற்றுக்கொண்டு தன் ஊர் நோக்கி மீண்டுவருபவன்; என்க.

(விளக்கம்) சோழ நாட்டிற்கும் சேரன் அரண்மனைக்கும் இடையே கிடந்த காடு நாடு ஊர் இவற்றைக் கடந்து மலையம் முதலியவற்றைக் கடந்து சேரன் அரண்மனைக்கண் சென்று அங்குள்ள ஒன்றுபுரி கொள்கை முதலியவற்றையுடைய பார்ப்பனரோடு ஒன்றுபுரி கொள்கை முதலிய பொருள்பற்றி வாதிட்டு வென்று பார்ப்பன வாகைசூடி அவ் வெற்றிக்கேற்ற பரிசிலாக, சேரமன்னன் வழங்கியவற்றைக் கைக்கொண்டு மீண்டு வருபவன் என்றவாறு. ஒன்று என்றது வீடுபேற்றினை. இருபிறப்பாவது - பூணூல் பூணற்கு (உபநயனத்துக்கு) முன் ஒரு பிறப்பும் அதன்பின் ஒரு பிறப்பும் ஆகிய இருவகைப் பிறப்பு என்க. இதனால் பார்ப்பனரை இருபிறப்பாளர் என்றும் கூறுவர். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன. அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. ஆங்கு உள்ள அந்தணர் பெறுமுறை வகுக்க அவரோடு வாதுசெய்து நாவலம்கொண்டு என்றவாறு. நாவலம் - நாவினால் பெறும்வெற்றி. அஃதாவது சொற்போர் புரிந்து வெல்லுதல். பார்ப்பன வாகையின் இயல்பினை:

கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று எனவும் ஓதங் கரைதவழ் நீர்வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதம் சுடுசுடர்தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்று வெண்பாவானு முணர்க. (பு.வெ.163.) இதன்கண் நண்ணார் என்றது சொற்போரின்கண் தன்னோடு மாறுபட்டவரை, என்க.

74-79: செங்கோல் ............ இருப்போன்

(இதன்பொருள்.) செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்றது ஊர் - செங்கோன்மை பிறழாத பாண்டிய நாட்டின்கண் திருந்திய தொழிலையுடைய பார்ப்பனர் வாழுகின்ற திருத்தங்கால் என்னும் பெயரையுடைய ஊரின்கண் வந்து; அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து - அவ்வூரின்கண்ணுள்ள பசிய இலை நிறைந்த அரசமரத்தையுடையதொரு மன்றத்தின்கண் இளைப்பாறுதற் பொருட்டு; தண்டே குண்டிகை வெள்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக்காப்பொடு களைந்தனன் இருப்போன் - தனது ஊன்றுகோலையும் குண்டிகையையும் வெள்ளைக் குடையையும் சமித்துக்களையும் பரிசிலாகப் பெற்ற பண்டங்களையுடைய சிறிய மூடையையும் மிதியடியையும் நிலத்தின்கண் ஒருசேர வைத்து இளைப்பாறி இருந்தனனாக; என்க.

(விளக்கம்) மறையவர் - பஞ்சக்கிராமிகள். தங்கால் - திருத்தங்கால் என்னும் ஊர். மன்றம் - அவ்வூரிலுள்ள போதிமன்றம். அம் மன்றத்தில் இளைப்பாறுதற் பொருட்டுத் தண்டு முதலியவற்றை ஓரிடத்தே வைத்து இளைப்பாறி இருந்தான் என்க. பாதக்காப்பு - மிதியடி. களைந்தனன் : முற்றெச்சம்.

79-87: காவல் வெண்குடை ................ சூழ்தர

(இதன்பொருள்.) காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - அங்ஙனம் இருந்த பராசரன் தன் தகுதிக் கேற்ற பரிசில் நல்கிப் போற்றிய சேர மன்னனை நினைந்து வாழ்த்துபவன் செங்கோன்மை பிறழாது மன்னுயிரைக் காக்கின்ற கொற்ற வெண்குடையினையும் பல்வேறு இடத்தும் விளைந்து முதிர்ந்த பெரிய வெற்றியினையும் உடைய மன்னர் பெருந்தகை வாழ்வானாக; கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலிடையே கிடக்கும் தீவகத்தில் வாழும் பகைவருடைய கடம்பாகிய காவன் மரத்தைத் தடிந்து அவரைவென்ற வெற்றி வேந்தன் நீடூழி வாழ்வானாக; விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலையின் மிசைத் தனதிலச்சினை யாகிய வில்லினைத் தனது வெற்றிக் கறிகுறியாகப் பொறித்த வேந்தர் வேந்தன் வாழ்வானாக; பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - மலர்களையுடைய தண்ணிய புனலையுடைய பொருநை யாற்றையுடைய பொறையன் வாழ்வானாக; மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலிரும் பொறை என்னும் திருப்பெயரையுடைய மன்னவன் வாழ்வானாக என்று வாய்விட்டுக் கூறி வாழ்த்தாநிற்ப அவ் வாழ்த்தொலியைக் கேட்டலும்; குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலையும் குடுமியையும் மழலை பேசுகின்ற சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடையவராய்க் கூட்டங்கூடி; தமர் முதல் நீங்கி - தம் தாய் தந்தையர் முதலிய சுற்றத்தாரைப் பிரிந்து வந்து; விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர - அம் மன்றத்தின்கண் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர்கள் எல்லாம் அப் பராசரனைச் சூழ்ந்து கொள்ள; என்க.

(விளக்கம்) பராசரன் சேரன் தனக்குச் செய்த உதவியை நினைந்து அச் சேர மன்னனைப் பலவாறு வாழ்த்தினன் என்க. அவ் வாழ்த்தொலி கேட்டு அம் மன்றத்தில் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர் எல்லாம் வந்து பராசரனைச் சூழ்ந்து கொண்டார் என்க.

பராசரன் அச் சிறுவரை நோக்கிக் கூறுதல்

88-94: குண்டப் பார்ப்பீர் ................ ஓத

(இதன்பொருள்.) குண்டப் பார்ப்பீர் - பார்ப்பனச் சிறுவர்களே! நுங்களில் யாரேனும்; என்னோடு ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின் என - என்னோடு சேர்ந்து மறையினை ஓதவல்லீர் உளீராயின் வம்மின்! வந்து ஓதுமின்! அங்ஙனம் ஓதுவீர் யான் பரிசிலாகப்பெற்ற பொருளையுடைய இச் சிறிய முடையைப் பரிசிலாகப் பெற்றுக் கொண்டுபோவீராக ! என்று கூறாநிற்ப; சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் - அதுகேட்டு அச் சிறுவர்களுள் வைத்துப் புகழினால் தகுந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மகனும் தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவனும் ஆகிய சிறுவன் ஒருவன் அங்ஙனம் ஓதுவதற்குத் துணிந்து முன்வந்து; பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால்மணங் கமழுகின்ற சிவந்த வாயையுடைய தன்னையொத்த ஏனைச் சிறுவர்களின் முன்னர்; தளர்நா ஆயினும் மறைவிளி வழாஅது - தன்னுடைய நாக்குத்தானும் மழலை மாறாத தளர்ச்சியையுடைய நாக்காக விருப்பினும் மறையின் ஒலி சிறிதும் வழுவாதபடி; உளமலி உவகையோடு - தனது உள்ளத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியோடே; ஒப்ப ஓத - அப்பராசரனோடு நன்கு பொருந்த ஓதா நிற்றலால்; என்க.

(விளக்கம்) குண்டன்: குட்டன் என்பதன் விகாரம். சிறுவன் என்னும் பொருட்டு. எனவே குண்டப்பார்ப்பீர் என்றது பார்ப்பனச் சிறுவர்களே! என்றவாறாயிற்று. இனி இதற்குப் பிழுக்கைமாணி காள்; சிறுமாணிகாள் - சிறுபிள்ளைகாள் எனினுமாம் என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆலமர் செல்வன் பெயர் என்றது தக்கிணாமூர்த்தி என்னும் பெயர் என்றவாறு. படியோர் - ஒத்தவர். மறைவிளி மறையின் ஓசை. பராசரனோடு ஒப்ப ஓத என்க.

தக்கிணாமூர்த்தி பரிசில்பெறுதலும் அதன்விளைவும்

95-103 : தக்கிணன் .............. இட்டனனாக

(இதன்பொருள்.) தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - அங்ஙனம் தன்னோடு ஓதிய தக்கிணாமூர்த்தி என்னும் அப் பார்ப்பனச் சிறுவனைப் பார்ப்பன வாகைபெற்று உயர்ந்தவனாகிய அப் பராசரன் பெரிதும் வியந்து பாராட்டி; முத்தப் பூண் நூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டோடு கையுறை ஈத்து முத்துக்கோவையாகிய பூணூலும் அதற்கேற்ற அணிகலன்கள் பிறவும் கைக்குக் கடகமும் காதிற்குத் தோடும் ஆகிய இவற்றோடு தான்கொணர்ந்த கைப்பொருளாகிய அப் பண்டச் சிறுபொதியையும் அத் தக்கிணாமூர்த்திக்கு வழங்கிவிட்டு; தன்பதிப் பெயர்ந்தனனாக - தன் ஊர்க்குச் சென்றனனாக; கோத்தொழில் இளையவர் - அவ்வூரின்கண்ணுள்ள அரசியற் பணியாளராகிய இளமையுடையோர் சிலர்; நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅர் ஆகி - இவ்வாற்றால் தக்கிணாமூர்த்தியின் குடும்பத்தினர் அழகிய அணிகலன்கள் புனைவனவற்றையும் பூண்பனவற்றையும் கண்டுபொறாமை கொண்டு; வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைப் பிடித்துத் தம் காவலில் வைத்து; கோமுறை அன்றிப் படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன் என - அரசியல் முறைக்கு மாறாகப் புதையல் பொருளைக் கவர்ந்துகொண்ட பார்ப்பனன் இவன் என்று அவன்பால் குற்றங்காட்டி; இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - அரசனுக்குரிய பொருளைக் கைப்பற்றிக் கொண்ட வரை இடுதற்குரிய சிறைக்கோட்டத்தின்கண் இடுவாராயினர்; என்க.

(விளக்கம்) தக்கிணன் - தக்கிணாமூர்த்தி. பராசரன் பார்ப்பன வாகைபெற்றுச் சிறந்தோன் ஆதலோடு வள்ளன்மையாலும் சிறந்தோன் ஆதல்பற்றி மிக்கோன் என்றார். முத்தப்பூணூல் - முத்துகள் கோத்த முப்புரிநூல் ஆகிய பூணூல் என்பாருமுளர். அத்தகு - அழகினால் தகுதியுற்ற எனினுமாம். கடகம் ஒருவகைக் கையணி. தோடு - காதணி. கையுறை என்றது தன் கையகத்ததாகிய பண்டச் சிறுபொதியை. பராசரன் சிறுவனுக்குக் கொடுத்தவை காணிக்கை என்னல் பொருந்தாமை யுணர்க. புனைப - புனைவன. பூண்ப-பூண்பன. இவை அணிகலவகை. கோத்தொழில் இளையவர் பொறார் ஆகி என இயைக்க. படுபொருள் - புதையல். களவுப்பொருள் எனினுமாம். புதையற் பொருள் அரசனுக்குரிய பொருள் ஆதலின் கோமுறையன்றி வெளவினான் என்பது கருத்து. இடுசிறைக்கோட்டம் - கள்வரை இடுகின்ற சிறைக்கோட்டம்.

வார்த்திகன் மனைவி செயல்

104-106: வார்த்திகன் ............ பொங்கினள்

(இதன்பொருள்.) வார்த்திகன் மனைவி கார்த்திகை யென்போள்- சிறையிலிடப்பட்ட வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மனைவியாகிய கார்த்திகை என்பவள் அச்செயல் கண்டு; அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புரண்டனள் - பெரிதும் வருந்தினள் ஏங்கு அழுதாள் நிலத்தில் வீழ்ந்து புரண்டாள்; பொங்கினள் புலந்தனள் - சினத்தால் பொங்கி எழுந்தாள் செங்கோலை வெறுத்துப் பேசினள்; என்க.

(விளக்கம்) அலந்தனள் வருந்தினள் சினத்தால் பொங்கி எழுந்தாள் என்க. புலந்தனள் என்றது செங்கோலை வெறுத்துப் பேசினாள் என்றவாறு.

106-112: அதுகண்டு .............. அறிந்தீமின்னென

(இதன்பொருள்.) அதுகண்டு மை அறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவாது ஆகலின் - அக் கார்த்திகை என்னும் பத்தினிக்குற்ற நிலைமைகண்டு குற்றமற்ற சிறப்பினையுடைய கொற்றவை என்னும் தெய்வத்தின் கோயிலினது சிற்பச் செய்வினை அமைந்த கதவு திறக்கப்படாததாக ஆனமையின்; திறவாது அடைத்த கதவம் திண்நிலை மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - திறக்கவியலாபடி அடைக்கப்பட்ட திருக்கோயிற் கதவினது திண்ணிய நிலைமையினை மறப்பண்பு மிக்க வேலேந்திய எங்கள் மன்னவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் கேள்வியுற்றபொழுது நெஞ்சம் மயங்கித் தன் ஏவலரை நோக்கி; கொற்றவைக்கு உற்ற இடும்பை - நம் தெய்வமாகிய கொற்றவையின் திருவுள்ளத்தில் இப்பொழுது எய்திய குறையை; அறிந்தீமின் -ஆராய்ந்தறிமின்! யாவதுங் கொடுங்கோல் உண்டுகொல் - மேலும் நமது ஆட்சியின்கண் ஏதேனும் செங்கோன்மைக்கு மாறாக நிகழ்ந்தது உண்டோ? அதனையும் ஆராய்ந்து வந்து கூறுமின்; என - என்று ஏவலருக்குக் கட்டளையிடா நிற்ப; என்க.

(விளக்கம்) கார்த்திகைக்குக் கோத் தொழில் இளையவர் செய்த கொடுமை பொறாது கொற்றவை தன் கோயிற் கதவைத் திறக்க வியலாதபடி செய்தருளினள் என்பது கருத்து. மை - குற்றம். ஐயை-கொற்றவை (துர்க்கை). மன்னவன் என்றது நெடுஞ்செழியனை. தான் அறியாவண்ணம் ஏதேனும் கோமுறை பிழைத்துளதோ என்று மயங்கினான்; என்க.

113-117: ஏவலிளையவர் ............ கடனென

(இதன்பொருள்.) ஏவல் இளையவர் காவலன் தொழுது - அக் கட்டளைபெற்ற இளமையுடைய அப் பணியாளர் மன்னனைப் பணிந்து சென்று, ஒற்றினால் ஒற்றிச் செய்தி தெரிந்து அக் கோத்தொழில் இளையவரால் சிறையிடப்பட்ட; வார்த்திகன் கொணர்ந்து அவ் வாய்மொழி உரைப்ப - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறைவீடு செய்து அழைத்து வந்து அரசன் முன்னிறுத்தி உண்மையைக் கூறாநிற்ப அதுகேட்ட அரசன் மனம் வருந்தி; இது நீர்த்து அன்று என நெடுமொழி கூறி -இச் செயல் செங்கோன்மைக்குப் பொருந்திய நீர்மையுடைய தனறு எனச் சொல்லி அப் பார்ப்பனனுக்குப் புகழுரை பலசொல்லி; முறை நிலை திரிந்த அறியா மாக்களின் - தமக்குரிய கடமையினின்றும் பிறழ்ந்த அறிவில்லாத மாக்களாகிய என் பணியாளராலே; என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும்கடன் என என்னுடைய அரசியல் முறைமை பிழையுடையதாயிற்று, இப் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியீராகிய நுமது கடமை என்று சொல்லி; என்க.

(விளக்கம்) காவலனைத்தொழுது போய் ஒற்றினால் ஒற்றி உணர்ந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்து கொணர்ந்து என்க. வாய்மொழி என்றது நிகழ்ந்ததனை உண்மையாக அறிவித்ததனை. நீர்த்து - நீர்மை உடையது. நெடுமொழி - புகழ். முறைநிலை அறியா மாக்களின் என மாறுக. சிறியோர் செய்த பிழையைப் பெரியீராகிய நீயிர் பொறுத்தல் நுங்கடன் என்று வேண்டியவாறு. இறைமுறை - செங்கோன் முறைமை.

118-122: தடம்புனல் .............. தணித்தனனே

(இதன்பொருள்.) தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கி - பெரிய மருதநிலத்து நீர் வளமுடைய கழனிகள் சூழ்ந்த அவன் பிறந்த ஊராகிய திருத்தங்காலோடே குறையாத விளைவினையுடைய வயலூர் என்னும் ஊரினையும் ஒருசேர அப் பார்ப்பனனுக்கு முற்றூட்டாக வழங்கி; கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் - கற்புடையவளாகிய கார்த்திகை என்பவளுக்கும் அவள் கணவனாகிய அவ்வார்த்திகன் என்பவனுக்கும் முன்னிலையிலேயே; இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - பெரிய நிலமடந்தையாகிய தன் தேவிக்குத் தனது அழகிய மார்பினை வழங்கி; அவள் தணியாவேட்கையும் சிறிது தணித்தனன் - அத்தேவியின் குறையாத காமவேட்கையினையும் ஒருசிறிது தணித்தனன் காண் என்றாள்; என்க.

(விளக்கம்) திருத்தங்கால் - அவன் பிறந்தவூராதல் முன்பே பெற்றாம். அவ்வூரோடு வயலூரென்னும் ஊரையும் பரிசிலாக வழங்கினன் என்பது கருத்து. கார்த்திகை ..... திருமார்பு நல்கி என்றது - கற்புடையவளாகிய கார்த்திகையையும் அவள் கணவனையும் அவர்கள் திருவடிகளில் தன் திருமார்பு நிலத்திற்பட வீழ்ந்து வணங்கி என்றவாறு. திருவுடை மன்னனாகிய நெடுஞ்செழியனைத் திருமாலாகக் கொண்டு கூறுகின்றாள் ஆதலின், நிலமடந்தையை அவன் தேவியாகவும் கூறினாள். அவன் மார்பில் எப்பொழுதும் திருமகள் வீற்றிருத்தலால் மற்றொரு தேவியாகிய நிலமகளின் தணியாத வேட்கையை இவ்வாற்றால் ஒரு சிறிது தணித்தனன் என்றாள் என்க. இவ்வரலாற்றின் வாயிலாக நெடுஞ்செழியனைத் தேராமன்னன் என்னும் கோட்பாடுடைய கண்ணகித் தெய்வத்திற்கு அச் செழியனுடைய ஒற்றரால் ஒற்றி உண்மை தேரும் ஆராய்ச்சி வன்மையையும் ஆராய்ந்து கண்டு குறை நேர்ந்துழி, அவன் அதற்குச் செய்யும் செங்கோன் முறைமையையும், இத் தெய்வம் நன்கு திறம்பட விளக்கினமை உணர்க. மன்னன், காலில் வீழ்ந்து வணங்கிய செயலை ஈண்டு அடிகளார் வேறு வாய்பாட்டாற் கூறுகின்ற புலமை நுணுக்கம் நினைந்து நினைந்து மகிழற்பாலது.

இதுவுமது

122-132: நிலைகெழு ............. தகுதியுங்கேள் நீ

(இதன்பொருள்.) நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணுங் கேட்பக் கலை அமர்செல்வி கதவம் திறந்தது - கலக்கமின்றி அமைதியோடு நிற்கும் நிலைமை பொருந்திய இம் மதுரை மாநகரத்துள்ள மிகவும் நெடிய தெருவுகளில் அமைந்த மலையொத்த மேனிலை மாடங்களையுள்ளிட்ட எல்லா இடங்களினும் உறைகின்ற மாந்தர் அனைவரும் கேட்கும்படி மான் ஊர்தியின்மீது அமர்ந்த கொற்றவையின் திருக்கோயிற் கதவம் பேரொலியோடு தானே திறந்து கொள்வதாயிற்று; யானை எருத்தத்து அணி முரசு இரீஇ - இச் செய்தி அறிந்தவுடன் மகிழ்ச்சியால் வள்ளுவரை வருவித்து நீவிர் இப்பொழுதே யானையின் பிடரின்கண் அழகிய அற முரசினை வைத்து; சிறைப்படு கோட்டம் சீமின் - சிறைக்கோட்டத் தலைவர்கள் சிறையிடப்பட்டுள்ள மாக்களைச் சிறைவீடு செய்யுங்கள் எனவும்; கறைப்படு மாக்கள் யாவதும் கறைவீடு செய்மின் - இறைப்பொருள் வாங்கும் பணியாளர்கள் எத்துணையும் இறைப்பொருள் கொள்ளாது இறைவீடு செய்யுங்கள்; இடுபொருளாயினும் படுபொருளாயினும் பெற்றவர்க்கு உற்றவர்க்கு உறுதி ஆம் என - பிறர் வழங்கிய பொருளாயினும் புதையல் எடுத்த பொருளாயினும் நிரலே ஏற்றுக்கொண்டவர்க்கும், கண்ணுற்றெடுத்துக்கொண்டவர்க்கும் உறுதிப் பொருள் ஆகும் எனவும் கூறி முரசு அறைமின் என்று பணித்து; கோல்முறை அறைந்த கொற்றவேந்தன் - தனது செங்கோன் முறைமையை மாந்தர்க் கறிவித்த வெற்றியையுடைய வேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; தான் முறைபிழைத்த தகுதியும் நீ கேள் - தானே செங்கோன் முறைமையில் பிழை செய்தற்குரிய காரணத்தையும் கூறுவன் நங்காய் இதனையும் கேட்கக் கடவாய் என்றாள் என்க.

(விளக்கம்) சிறைப்பணியாளர் சீமின் என வருவித்துக்கொள்க. கறைப்படுமாக்கள் என்றது இறைப்பொருள் கொள்ளும் பணியாளரை என்க. இறை கொடுக்கக்கடவ மாக்களுடைய எனினுமாம். கறை - கடமை. அஃதாவது-இறைப்பொருள். இடுபொருள் - வழங்கும்பொருள். படுபொருள் - புதையற் பொருள். இடுபொருள் பெற்றவர்க்கும், படுபொருள் உற்றவர்க்கும் ஆம் என எதிர் நிரல் நிறை ஆக்குக.

மதுரையும் மன்னனும் கேடுற்றமைக்குக் காரணம்

133-137: ஆடி ................ உண்டே

(இதன்பொருள்.) ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று -இந்த ஆடித் திங்களின்கண் பெரிய இருளையுடைய பகுதியின்கண் அழல்சேர் குட்டத்துக் கார்த்திகை விண்மீனின் குறையினையுடைய எட்டாம் நாளில்; வெள்ளி வாரத்து - வெள்ளிக்கிழமையன்று; ஒள்எரி உண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுஉறும் எனும் உரையும் உண்டு -ஒள்ளிய நெருப்புண்ணுதலாலே புகழமைந்த இம் மதுரை நகரத்தோடே அதனை ஆளும் மன்னனும் கேடெய்துவான் என்னும் ஒரு கணிவன் மொழியும் பண்டே கூறப்பட்டுளதுகாண், இக்காரணத்தினாலேதான் இவை நிகழ்ந்தன என்றாள், என்க.

(விளக்கம்) பேரிருள் பக்கம் என்றது தேய்பிறைப் பகுதியை. அழல் - கார்த்திகை நாள் (விண்மீன்); குட்டம் - குறை. கார்த்திகை நாளில் குறையுடைய எட்டாம் நாள் என்க. பேதைப் படுக்கும் இழவூழ் என்பவாகலின் எம் கொற்ற வேந்தன் இவ்வூழ் காரணமாகக் கோன்முறை பிழைத்தான் அல்லது அவனுக்கு அஃது இயல்பன்று எனவும், நிலமகள் போன்ற பொறையுடைய கற்புடைத் தெய்வமாகிய நீ இங்ஙனம் சீற்றம் எய்தி இந்நகரத்தை எரியூட்டியதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும் எனவும், அறிவுறுத்திக் கண்ணகியின் சினம் தணிவித்தபடியாம்.

கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் கூறுதல்

(137) நிரைதொடி என்பது தொடங்கி (178) வீடுகொண்ட பின் என்னுமளவும், மதுராபதி -கோவலன் கண்ணகி ஆகிய இருவருக்கும் எய்திய துயரங்களுக்குக் காரணமான அவர்தம் முற்பிறப்பில் செய்த பழவினையின் பரிசு கூறுதலாய் ஒரு தொடர்.

137-144: நிரைதொடி ................... பகையுற

(இதன்பொருள்.) நிரைதொடி யோயே - நிரல்பட்ட வளையலையுடைய பெண்ணணங்கே ஈதொன்று கேள்; கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் - நறுமணங்கமழும் பூம்பொழில் சூழ்ந்த கலிங்கம் என்னும் நல்ல நாட்டின்கண் உள்ள வடித்த வேலையுடைய பெரிய கையினை யுடைய வசுவென்பவனும் குமரன் என்பவனும் நிரலே; தீம்புனல் பழனத்துச் சிங்கபுரத்தினும் காம்பு எழுகானக் கபில புரத்தினும் - இனிய நீர்வளமுடைய கழனிகளையுடைய மருதப் பரப்பின்கண் உள்ள சிங்கபுரம் என்னும் நகரத்தினும் மூங்கில் வளருகின்ற காட்டினையுடைய முல்லை நிலத்தில் அமைந்த கபில புரம் என்னும் நகரத்தினும்; அரைசு ஆள் செல்வத்து நிரைதார் வேந்தர் - இருந்து அரசாளுகின்ற செல்வத்தையுடைய நிரல்பட்ட மலர்மாலை யணிந்த அரசர்களாயிருந்தனர்; வியாத்திருவின் விழுக்குடிப் பிறந்த தாயவேந்தர் தம்முள் பகையுற - கெடாத செல்வத்தையுடைய சிறந்த ஒரே குடியிற்பிறந்த தாயத்தார் ஆகிய அவ்வேந்தர் இருவரும் தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டிருத்தலாலே; என்க.

145-157 : இருமுக்காவத் .......... கொல்வுழி

(இதன்பொருள்.) இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - இவ்விரண்டு கோநகரங்களுக்கும் இடைப்பட்ட ஆறுகாவதத் தொலைவுடைய நிலத்தின்கண் எவ்விடத்தும்; செரு வில் வென்றியின் - அம் மன்னரிருவரும் தம்முட் போர்செய்து வலிய வெற்றி பெறுதல் காரணமாக இடையறாது போர் செய்துவந்தமையாலே; செல்வோர் இன்மையின் - வழிப்போவார் யாரும் இல்லாமையால் வறிதே கிடந்த அவ்விடை நிலத்தில்; சிங்கா வண்புகழ் சிங்கபுரத்தின் - குறையாத வளவிய புகழையுடைய சிங்கபுரத்தின்கண்; அரும்பொருள் வேட்கையின் பெறற்கரிய பொருளை ஈட்டும் விருப்பங் காரணமாக; பெருங்கலன் சுமந்து - பெருவிலை அணிகலன்களைச் சுமந்துகொண்டு; கரந்துறை மாக்களின் - ஒற்றர்களைப்போல மாறுவேடம் புனைந்து காதலி தன்னொடு -தான் வாழுகின்ற கபிலபுரத்தினின்றும் புறப்பட்டுத் தன் மனைவியோடு வந்து; அங்காடிப்பட்டு - கடைத்தெருவில் புகுந்து; அருங்கலன் பகரும் -பெறற்கரிய அணிகலன்களை விற்கின்ற; சங்கமன் என்னும் ஓர் வாணிகன் தன்னை -சங்கமன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனை; முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவன் - முற்பிறப்பிலே பசிய வளையலை யுடையோய் உன்னுடைய கணவனும்; வெந்திறல் வேந்தற்கு கோத்தொழில் செய்வோன் - வெவ்விய ஆற்றலுடைய வசு என்னும் அரசனிடத்தே அரசியற்பணி செய்பவனும்; பரதன் என்னும் பெயரன் - பரதன் என்னும் பெயரை யுடையவனும் ஆகியிருந்த; அக் கோவலன் - இப்பிறப்பில் நின் கணவனாய் ஈண்டுக் கொலைக்களப்பட்ட அக்கோவலன்; விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - அச் சங்கமன் கொல்லா விரதத்தினின்றும் விலகினமை காரணமாகத் தன்னால் வெறுக்கப்பட்டவனாயிருத்தலாலே; இவன் ஒற்றன் எனப் பற்றினன் -இவன் பகை நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஆவான் என்று சொல்லி அச் சங்கமனைப் பற்றி; கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - கொணர்ந்து வெற்றி வேலையுடைய வசுமன்னனுக்குக் காட்டி அச் சங்கமனைக் கொல்லும் பொழுது; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லி வாறோ வெனின்: நின் கணவன் முற்பிறப்பிலே கலிங்க நாட்டுச் சிங்கபுரத்தில் பரதன் என்னும் பெயருடையவனாய் இருந்தான். நீதானும் அவனுக்கு மனைவியாய் இருந்தாய். பரதனுக்குப் பகைவனாய் இருந்த சங்கமன் என்னும் வாணிகன் பகைவர் ஊரிலிருந்து மாறு வேடங்கொண்டு தன்மனைவியோடு சிங்கபுரத்திற் புகுந்து அணிகலன் விற்றுப் பொருளீட்டுவானாயினான். பரதன் என்பவன் அச் சங்கமனைத் தன் பகை காரணமாகப் பிடித்துக் கொண்டு போய் இவன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றன் என அரசனுக்குக் கூறினன். அரசன் அச் சங்கமனைக் கொல்வித்தான் என்றவாறு. பைந்தொடியென்றது : விளி. கரந்துறை மாக்கள் ..... ஒற்றர். சிங்கா - குறையாத. விரதம் நீங்கிய வெறுப்பு - கொல்லா விரதத்தையுடைய தன் சமயத்தினின்றும் நீங்கினமையால் உண்டான பகை. எனவே பகை காரணமாக ஒற்றன் எனப் பொய் சொல்லிக் கொல்வித்தான் என்றவாறாயிற்று.

158-166: கொலைக்கள ............ நின்றோள்

(இதன்பொருள்.) கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்போள் நிலைக்களங்காணாள் - இவ்வாறு கொலைக்களத்தே இறந்தொழிந்த சங்கமன் என்னும் வணிகனுடைய மனைவியாகிய நீலி என்பாள் தான் உயிரோடு நிலைத்து வாழ்தற்கு இடங் காணமாட்டாளாய்; அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - அரசர்களே என் கணவனைக் கொன்றது அறமோ? வணிகர்களே இஃது அறமோ? ஊரில் வாழும் மாந்தர்களே! நும் மன்னன் செய்தது அறமோ? தெருவில் உள்ளவர்களே! நும்மன்னன் செய்தது அறமோ? என்று சொல்லி; மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு - அந்நகரத்து மன்றங்களினும் தெருக்களினும் சென்றுசென்று அரற்றி இங்ஙனமே; எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்குநாள் கழிந்த பின்னர்; தொழு நாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - என் கணவனை யான் கண்டு வணங்குகின்ற நாள் இஃது என்று சொல்லி எல்லோரும் அறிய வாயால் தன் கணவனை வாழ்த்தி; ஓர் மால் விசும்பு ஏணியில் மலைத்தலை ஏறி - ஒரு பெரிய வானத்தின்கண் ஏறுதற்குரிய ஏணியைப் போன்ற நெடிய மலையின் உச்சியில் ஏறிப்போய் நின்று; கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - கொலையின்கண் பட்ட தன் கணவனைக் கூடுதற்கு அமைந்து நின்றவள்; என்க.

(விளக்கம்) நீலி மன்றினும் மறுகினுஞ் சென்று விசும்பிற்கிட்ட ஏணி போன்ற ஒரு நெடிய மலையுச்சியில் ஏறி நின்றவள் என்க. மகன் - கணவன், கூடுபு நின்றோள் - கூடுதற்கு அமைந்து நின்றவள் என்க.

167-176: எம்முறு ............. இல்லென

(இதன்பொருள்.) எம்உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இங்ஙனம் மிகவும் துன்பத்தினைச் செய்தவர் இதன் பயனாக, தாம் எய்தும் துன்பமும் இத்தகைய துன்பமே ஆகுக! என்று சொல்லி; விழுவோன் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - அம் மலைத் தலையினின்றும் விழுகின்றவள் இட்ட தப்புதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ஆதலால்; கட்டுரை நீ கேள் - ஆதலாலே யான் கூறுகின்ற உனக்கு உறுதி பயக்கும் என்னுடைய மொழியை இன்னும் நீ கேட்பாயாக; உம்மை வினை வந்து உருத்தகாலைச் செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் வந்து நேர்ந்தபொழுது செவ்விய உள்ளம் இல்லாதவர்களுக்குத் தாம் செய்த தவமானது அத்துன்பத்தைப் போக்குதற்குச் சிறிதும் உதவமாட்டாது ஆதலால்; வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு அடர்ந்த கூந்தலை யுடையோய் நீதானும் உன்னுடைய கணவனை அச் சங்கமன் மனைவியைப் போலவே; ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி - இற்றைநாள் தொடங்கிப் பதினான்கு நாள் முழுவதும் நீங்கிய பின்னர்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை - தேவர்களுடைய வடிவத்தோடே காண்பதல்லாமல்; ஈனோர் வடிவில் காண்டல் இல் என - இந்நிலவுலகத்தில் வாழ்கின்ற மக்கள் வடிவத்தில் காணுதல் இல்லையாம் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) உம்மை வினை - முற்பிறப்பிற் செய்த தீவினை. செம்மை - நடுவு நிலைமை. நல்லொழுõக்கமுமாம்: உம்மை இம்மை இரண்டிடத்தும் செய்த தவம் உதவமாட்டாது என்பார் செய்தவம் என இருமைக்கும் பொருந்தக் கூறினார். அஃதாவது பழவினை வந்து பயன் நுகர்விக்குங் காலத்தே பழைய நல்வினையும் இப்பொழுது செய்யும் நல்வினையும் சிறிதும் அந்நுகர்ச்சியைத் தீர்க்கமாட்டா என்றவாறு. அச் சங்கமன் மனைவி போன்றே நீயும் நின் கணவனை ஈரேழ் நாள் கழிந்தே காணல் கூடும் என்றவாறு. ஈனோர் - இந்நில வுலகத்தார். ஈண்டு மதுராபதி கண்ணகிக்குக் கூறுகின்ற கோவலனுடைய பழவினை வரலாறு மணிமேகலையின்கண், கண்ணகி மணிமேகலைக்குக் கூறுவாளாக இங்குக் கூறியபடியே கூறப்பட்டுள்ளது. (மணிமே 10-33.)

கண்ணகியின் செயல்

177-185: மதுரை .............. கொண்டாங்கு

(இதன்பொருள்.) மதுரைமா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்டபின் - மதுரை நகரத்துச் சிறந்த காவற் றெய்வமாகிய மதுராபதி ஊழ்வினையின் விளைவினைத் திருமாபத்தினியாகிய கண்ணகிக்குக் கூறுமுறையானே உளங் கொள்ளுமாறு கூறி அந் நகரத்தைத் தீயினாலெய்துங் கேட்டினின்றும் விடுதலை செய்த பின்னர் கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது - என் நெஞ்சத்தே நிலைபெற்றுள்ள என் கணவனைக் கண்கூடாகக்கண்ட பின்னர் இருத்தலன்றிக் காணுமளவும்; இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - எவ்விடத்தும் அமர்ந்திருப்பேனும் அல்லேன் நிற்றல்தானும் செய்கிலேன் என்று துணிந்து; கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து - அம் மதுரையிற் கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற திருக்கோயிலின் முன்றிலிடத்தே சென்று தன் கையிலணிந்திருந்த அழகிய வளையல்களை யெல்லாம் உடைத்துப் போகட்டு அத் தெய்வத்தை நோக்கிக் கூறுபவள்; கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு என - அன்னையே! அளியேன் இந்நகரத்துத் தலைக்கடைப் பெருவாயிலின்கண் என் ஆருயிர்க்காதலனோடு இனிது வாழக் கருதிப் புகுந்த யான் இப்பொழுது காதலனையும் இம்மை வாழ்வினையும் இழந்து சிறுமையுற்றேனாகி இந்நகரத்துப் புழைக்கடைவாயில் வழியே செல்வேன் காண்! இங்ஙனமிருந்தது என் பழவினைப் பயன் என்று தன்னையே நொந்துகூறி அவ்வாயில் வழியாகப் புறப்பட்டுச் செல்கின்றவள்; இரவும் பகலும் கையற்று மயங்கினள் - இரவும் பகலுமாகிய இரண்டு பொழுதுகளிலும் யாதொன்றுமறியாமல் செயலற்று மயங்கி; உறவு நீர்வையை ஒருகரைக் கொண்டு ஆங்கு - விரைந்தொழுகாநின்ற நீரையுடைய வையைப் பேரியாற்றினது ஒரு கரையினை வழியாகக் கொண்டு நிற்றலும் இருத்தலுமின்றிச் செல்லுங் காலத்தே; என்க.

(விளக்கம்) விதிமுறை - ஊழ்வினை வந்துருத்திய முறையை எனினுமாம். அழல்வீடு - தீப்பற்றி எரியாதபடி விடுதலை செய்தல். அழல்வீடு கொண்டபின் என்றமையால் கண்ணகியின் சினந்தணிந்தமையும் நகரத்தே தீ அவிந்தமையும் பெற்றாம். இவ்வுலகிலில்லாமையால் கருத்துறு கணவன் என்றாள். இருத்தல் - இளைப்பாறியிருத்தல். நிற்றல் - ஓய்ந்துநிற்றல். பெயர்கு - பெயருவேன். பெயர்கெனக் கொற்றவைக்குக் கூறி என்க. இரவென்றும் பகலென்றுமறியாமல் எனினுமாம். உரவு - விரைவு.

186-190: அவலவென்னாள் ....... ஏறி

(இதன்பொருள்.) அவலித்து இழிதலின் மிசைவைத்து ஏறலின் துன்பத்தாலே பதறி இறங்குதலானும் நினைவின்றி அடியினை உயர்த்திவைத்து ஏறுதலானும்; அவல என்னாள் மிசைய என்னாள் -செல்லும் வழியில் குழிகள் உள என்று பாராமலும் மேடுகள் உளவென்று பாராமலும் இறங்கியும் ஏரியும் செல்லா நிற்றலாலே; கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - கடலினது வயிற்றைக் கிழித்துக் குருகுப் பெயர்கொள் குன்றத்தினது நெஞ்சத்தைப் பிளந்து அப்பொழுதே அவுணர்களைக் கொன்று நூழிலாட்டிய ஒளிமிக்க இலையையுடைய நெடிய வேற்படையினை ஏந்திய புகழாலே நீண்ட செவ்வேள் எழுந்தருளிய குன்றத்தின் கண்ணே திருவடியை வைத்து ஏறிப்போய் என்க.

(விளக்கம்) அவலித்திழிதலின் அவல என்னாள் என மாறுக. ஈண்டுக் கண்ணகியார் தாம் நெடுவேள் குன்றத்து ஏறுதல் வேண்டும் என்று நினைந்தேறினார் அல்லர், அவர் செல்லும் வழியிடத்தே எதிர்ப்பட்டது நெடுவேள் குன்றம் ஆதலால் பள்ளம் என்றும் மேடு என்றும் பாராது செல்லுமவர் தானே எதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்து அடிவைத் தேறினர் என்பதும், இதுதானும் அவர்தம் சிறப்பிற்கேற்றதொரு வாய்ப்பே ஆயிற்று என்பதும் தோன்ற அவல என்னாள் மிசைய என்னாள் மிசைவைத் தேறலின் நெடுவேள் குன்றத்து அடிவைத்தேறி எனப் பாராமல் அடியிட்டேறுதலை ஏதுவாக்கினார்.

இனி, அக் குன்றந்தானும் அத் திருமாபத்தினி அடிவைத்தேறி அமரர்க் கரசன் தமர் வந்தேத்தி அவரை வரவேற்றற்குத் தகுந்ததோர் இடமேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு கடல்வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் எனப் பெரிதும் விதந்தோதுவாராயினர். என்னை? பண்டு கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து அவுணரைக் கடந்த நெடுவோலோடு முருகவேளும் அக் குன்றத்தே அமரர்க்கரசன் தமர்வந் தீண்ட அடிவைத்தேறி யமர்ந்தனன். இன்னும் இக்கண்ணகித் தெய்வம் தன் வேல் போலும் கண் உகுக்கும் நீராலே பாண்டியன் நெடுஞ்செழியனுடைய நெஞ்சு பிளந்து அவனது மதுரையாகிய கடல்வயிறு கலக்கி வந்து அடிவைத் தேறுதற்கும் அமரர்க்கரசன் தமர் வந்தீண்டுதற்கும் அக் குன்றஞ் சாலச்சிறந்த தொன்றாதலுணர்க.

அவல மிசைய - பள்ளங்களையுடையனவும் மேடுகளையுடையனவுமாகிய நெறிகள்.

191-200: பூத்த ........ கண்ணகிதான்என்

(இதன்பொருள்.) பூத்த பொங்கர் வேங்கைக் கீழ் யான் ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளை யுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று (அவ்விடத்தே தன்னைக் கண்டு நீவிர் யாவிரோ என்று வினவிய குறமகளிர்க்கு) யான் ஒப்பற்ற தீவினையுடையேன் என்று கூறி ஏங்கி நிற்ப; அமரர்க்கு அரசன் தமர் - அப்பொழுது தேவேந்திரனுடைய அமைச்சர் முதலிய சுற்றத்தார்தாம்; இது எழுநாள் இரட்டி சென்றபின் தொழுநாள் என - இந்த நாள்தான் கண்ணகி கணவனை இழந்தவள் பதினான்கு நாள் கழிந்த எல்லையிலே தன் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் ஆகும் என்றுணர்ந்து; தோன்ற வாழ்த்தி - அக் குறிப்புக் கோவலனுக்குப் புலப்படுமாறு அவனையும் வாழ்த்தித் தம்முடன் அழைத்துக்கொண்டு; ஆங்கு வந்து பீடு கெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி - வானுலகத்தினின்றும் இழிந்து கண்ணகி நிற்கும் அவ்விடத்தே வந்து பெருமை பொருந்திய கண்ணகியினது பெரிய புகழை எடுத்தோதி; வாடா மாமலர் மாரி பெய்து - வாடாத சிறப்பினையுடைய கற்பக மலர்களை மழைபோன்று மிகுதியாகக் கண்ணகியின் மேற்பொழிந்து; ஏத்த - கைகுவித்துத் தொழாநிற்ப; கோநகர்ப் பிழைத்த கோவலன் தோன்ற வாழ்த்தி - பாண்டியன் தலை நகரத்தே மறைந்த கோவலன்றானும் அவ்வமரரோடு தன்முன் வந்து தோன்றா நிற்ப அவனை வணங்கி வாழ்த்தி; கோவலன் தன்னொடு - அக் கோலனோடே ஒருசேர; கான் அமர் பூங்குழல் கண்ணகிதான் - நறுமணங் கமழுகின்ற அக் கண்ணகி நல்லாள் தானும்; வான ஊர்தி ஏறினள் மாதோ - வானவூர்தியின்கண் ஏறி விண்ணவரோடு வானுலகம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று குறமகளிர்க்குக் கூறி என்க. என்னை? கண்ணகியார் அவ்வாறு குறமகளிர்க்குக் கூறுதலை வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில் விரித்தோதுதலை ஆண்டுக் காண்க. அமரர்க்கரசன் தமர் ........... இது எனக் கோவலனுக்குந் தோன்ற அவனை வாழ்த்தி அவனையும் அழைத்துக் கொண்டு வந்து ஏத்த என இசையெச்சத்தாலே சில சொற்கள் விரித்துக் கூறுக.

வாடா மலர் - கற்பகமலர், கோநகரின் கண் (பிழைத்த) தன்கண் காணாவகை மறைந்த கோவலன் என்க. மாது, ஓ: அசைச் சொற்கள்.

வெண்பாவுரை

தெய்வம் ................. விருந்து

(இதன்பொருள்.) மண்அகத்து மாதர்க்கு அணி ஆய கண்ணகி - இந்நிலவுலகத்தே மகளிராய்ப் பிறந்தோரெல்லாருக்கும் பேரணிகலனாகத் திகழா நின்ற கண்ணகி நல்லாள் தானும்; தெய்வம் ஆய் விண் அக மாதர்க்கு விருந்து - மக்கட் பிறப்பினோடே தெய்வத்தன்மையுடையளாய் வானுலகத்து மகளிர்க்கெல்லாம் எஞ்ஞான்றும் எதிர்கொண்டு பேணுதற்குரிய நல்விருந்தாயினள்; தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுவாளை - பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுதெழுமியல்புடைய கற்புடைய மகளை; தெய்வம் தொழுந்தகைமை திண்ணிது - தெய்வமும் வணங்கும் தன்மை இக்கண்ணகி வரலாற்றினால் உறுதியாயிற்று என்க.

(விளக்கம்) 
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்றோதிய தெய்வப் புலவர் திருவாக்கு இக்கண்ணகியால் திண்ணிய வாக்காயிற்று எனினுமாம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பதும் இக்கண்ணகியால் திண்ணிதாயிற்று எனவும் கொள்க.

கட்டுரை

முடிகெழு ........ முற்றிற்று

(இதன்பொருள்.) முடி உடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய பாண்டியர் சேரர் சோழர் என்னும் மூவேந்தருள் வைத்து; படை விளங்கும் தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - படைக்கலந் திகழாநின்ற பெரிய கையையுடைய பாண்டியர் தம் குலத்திற்பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும்; மறனும் - மறச்சிறப்பும்; ஆற்றலும் -வன்மைச் சிறப்பும்; அவர் தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவர்தம் பழைய வெற்றியையுடைய முதிய மதுரை என்னும் ஊரினது அறப்பண்பு மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவுமலி சிறப்பும் - அவ்வூரின்கண்ணே திருவிழாக்கள் மிக்கு நிகழுகின்ற சிறப்பும்; விண்ணவர் வரவும் - வானவர் அங்கு வருகின்றதனாலுண்டாகின்ற சிறப்பும்; ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவருடைய நாட்டில் வாழுகின்ற குடிகளின் சிறப்பும் உணவுப் பொருளின் மிகுதிப்பாடும்; அவர் தம் வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - அவருடைய வையை என்னும் பெரிய யாறு தனது நீராலே பல்வேறு வளங்களையும் உண்டாக்கி மன்னுயிரை ஊட்டி ஓம்புமியல்பும்; பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும் - அவர் தம் செங்கோன்மை காரணமாக எஞ்ஞான்றும் பொய்த்தலின்றி முகில்கள் புதிய மழைநீரைப் பொழிகின்ற வியல்பும்; ஆரபடி சாத்துவதி என்று இருவிருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்று- ஆரபடியும் சாத்துவதியும் என்னும் இருவகை விருத்திகளும் தம்பால் நிகழும்படி தோன்றுகின்ற; வரிக்கூத்தும் குரவைக் கூத்தும் என்று ஈண்டுக் கூறப்பட்ட இவை அனைத்தும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - இப் பொருள்களோடே அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; வடவாரியர் படை கடந்து தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் - வடநாட்டு ஆரிய மன்னர்களுடைய படையை வென்று வாகை சூடி நாவலந் தண்பொழிலின் தெற்குப் பகுதியிலமைந்த மூன்று தமிழ்நாட்டினும் வாழ்வோரெல்லாம் தன் செங்கோன்மைச் சிறப்பினை ஒருங்கே கண்டு மகிழுமாறு குற்றந்தீர்ந்த கற்பினையுடைய தன் பெருந்தேவியாருடனே; அரைசு கட்டிலின் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு - தான் எழுந்தருளிய அரசு கட்டிலிடத்தேயே வல்வினை வளைத்த கோலைச் செங்கோலாக்கி நிலமடந்தைக்குக் காட்டற் பொருட்டு உயிர்நீத்தருளிய அரசர் பெருமான் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பினோடே; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த ஒரு தன்மையாகத் தனதுட்கோளாக நோக்கியியன்ற ...... மதுரைக் காண்டம் முற்றிற்று என்க.

(விளக்கம்) பாண்டியர் அறச்சிறப்பு - புறஞ்சேரி இறுத்த காதைக்கண் (5) கோள்வல் உளியமும் .......... செங்கோல் தென்னவன் காக்கும் நாடு என்னும் பகுதியானும் கட்டுரை காதைக்கண் மதுராபதித் தெய்வத்தின் கூற்றானும் பிறாண்டும் உணர்க. மறச்சிறப்பு, காடு காண் காதைக்கண் மாங்காட்டு மாமுது முறையோன் (15) வாழ்க எங்கோ என்பது தொடங்கி (39) மன்னவன் வாழ்கென என்பதீறாகக் கூறுமாற்றாலுணர்க. மூதூர் பண்புமேம்படுதலை ஊர்காண் காதையினும் பிறாண்டும் அறிக. குடியும் கூழின் பெருக்கமும் ஊர்காண் காதை முதலியவற்றாலுணரலாம். வையைப் பேரியாறு வளஞ் சுரந்தூட்டுதலைப் புறஞ்சேரி இறுத்த காதைக்கண் 151 முதல் - 170 வரையில் குரவமும் ............ வையை என்ற பொய்யாக் குலக் கொடி எனவரும் பகுதியாலுணர்க. ஆரபடி சாத்துவதி என்பன கூத்தினுள் விலக்குறுப்பாகிய விருத்தியின் விகற்பம். இவற்றை அரங்கேற்று காதைக்கண் (13) பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தும் என்புழி விலக்கு என்பதன் விளக்கவுரை நோக்கியுணர்க.

தனிக்கோள் என்றது அடிகளார் இக் காப்பியத்திற்குக் கருப் பொருளாகத் தம்முட் கொண்ட, அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாதலும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதுமாகிய மூன்றுமாம். இம்மூன்றும் இக்காண்டத்திலேயே சிறப்பாக அறிவுறுத்தப்பட்டமையும் உணர்க.

பிறபொருள் என்றது இவற்றைச் சார்ந்து வருகின்ற பல்வேறு வகைப்பட்ட பொருள்களையும் என்க.

கட்டுரைக் காதை முற்றிற்று.

மதுரைக் காண்டம் முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar