பதிவு செய்த நாள்
31
ஜன
2012
05:01
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஃதாவது-சேரன் செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்று பத்தினித் தெய்வத்திற்குக் கல் எடுத்துவந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.
இதன்கண் அச் சேரமன்னன் முன்னரே கனகனும் விசயனும் என்னும் ஆரிய மன்னர்கள் தமிழ் அரசரை இகழ்ந்தனர் என்று வடதிசையிலிருந்து வந்த முனிவர் கூறக் கேட்டிருந்தானாதலின் இமயமலையில் எடுக்கும் கல்லை அவ்விரண்டு மன்னர் முடியிலும் ஏற்றிக்கொணர்வேன் என்று வஞ்சினம் கூறி நன்னாளிலே வாளையும் குடையையும் புறவீடு செய்து படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கி யானை முதலிய நாற்பெரும் பகைளோடே வஞ்சிசூடி வடதிசையை நோக்கிச் செல்பவன் முதலில் நீலகிரியில் தங்கினன். அவ்விடத்தே கூத்தர் ஆடிய கூத்துகளைக் கண்டு மகிழ்ந்து அவ்விடத்தே திறைகொணர்ந்து வணங்கிய மன்னர்களோடு அளவளாவி மகிழ்ந்தமையும் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுக் கங்கையாற்றை அடைந்தமையும் அவ்வாற்றை நட்பரசர் கொணர்ந்த ஓடங்களின் வாயிலாகக் கடந்து, அப்பால் பகையரசர் நாட்டின்கண் சென்று பாசறை அமைத்து அதன்கண் இருந்தமையும் இவன் வரவுணர்ந்த கனகவிசயரை உள்ளிட்ட மன்னர் பலர் வந்து போர்செய்யத் தொடங்கினராக, அப் போரின்கண் அப் பகைவர்களை வென்று அவர்களுள் கனகவிசயரென்னும் அரசர்களைக் கைப்பற்றி வைத்து அவ்விடத்தினின்றும் அமைச்சர்களை ஏவி இமயத்தில் கல் கொண்டு வரச் செய்தமையும் அக் கல்லைக் கனகவிசயர் முடித்தலைமிசை யேற்றிக் கொணர்ந்தமையும் ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.
அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
மன்னர்- மன்னன் வாழ்க! என்று ஏத்தி, 5
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10
நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்; 15
செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என-
ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், 20
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம், என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று, 25
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல் 30
எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த-
மீளா வென்றி வேந்தன் கேட்டு,
வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப; 35
இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40
தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க! என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி; 45
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர-
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி 50
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி 55
மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்- 60
குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், 65
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு 70
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-
மாகதப் புலவரும், வைதாளி கரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த; 75
யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும் 80
வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு; 85
ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த, 90
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும் என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து, 95
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய 100
நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன் என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க! என, 105
கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை, 110
கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற- 115
கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண் 120
கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!என்று ஓவர் தோன்ற-
கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின் 125
ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை 130
நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞாறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் 135
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞாற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப- 140
நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி, 145
ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது 150
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று,
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க! என- 155
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்:
பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி, 160
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம் என, 165
சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞாற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் 170
மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து; 175
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த 180
தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என, 185
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர் 190
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து 195
மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள், 200
களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய 205
சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட; 210
அடும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை, 215
ஒரு பகல் எல்லையின், உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய- 220
வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர், 225
பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர- 230
கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரி திரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி, 235
முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி; 240
பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், செங்கோல் கொற்றத்து 245
அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க! என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூ தாளரை, போற்றிக் காமின் என, 250
வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். 255
சேரன் செங்குட்டுவன் அரியணை ஏறியிருந்து தானைத் தலைவரை நோக்கிக் கூறியது
1-8: அறை பறை..........கூறும்
(இதன் பொருள்) அறை பறை எழுந்தபின் அரிமான் ஏந்திய முறை முதல் கட்டில் இறைமகன் ஏற-வள்ளுவர் அறைந்த முரசினது ஒலி நகரத்திலே யாங்கணும் எழுந்தபின்னர்ச் சிங்கத்தாற் சுமக்கப்பட்ட முறைமையினையும் தலைமைத் தன்மையினையும் உடைய அரசு கட்டிலின்கண் சேரன் செங்குட்டுவன் எழுந்தருளுதலும்; ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ-ஆசாரியனும் பெருமையுடைய நிமித்திகனும் தம் தொழிலில் அரிய ஆற்றலமைந்த அமைச்சரும் படைத்தலைவர்களோடு வந்து அரசவையின்கண் கூடி; மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி-வேந்தர் வேந்தன் நீடுழி வாழ்க என்று வாழ்த்தியபின்; முன்னிய திசையின் முறைமொழி கேட்ப-தத்தமக்கு என்று குறிப்பிடப்பட்ட திசைகளிலே நின்று அவ் வேந்தன் கூறுகின்ற மொழிகளை முறைமையினோடே கேளா நிற்ப ; வியம்படு தானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்து ஓங்கு வெள் குடை உரவோன் கூறும்-ஏவிய பணியில் நிற்கின்ற படையின் தலைவர்களாகிய வெற்றியையுடைய தலைவர்களுக்கெல்லாம் புகழால் மிகவும் உயர்ந்த கொற்ற வெண்குடையையுடைய மன்னன் சொல்வான் என்க.
(விளக்கம்) அரிமான்-சிங்கம் முதல் கட்டில்-முதன்மையுடைய அரசு கட்டில். அரசவைக்கணிவன் ஆதலின் பெருங்கணி என்றார் திறல்-அமைச்சுத் தொழில் ஆற்றல். முன்னிய-குறித்த. வியம் படுதல். ஏவிய பணி தலைநிற்றல் தலைவரை விறலோர் என்றார். அவர் தலைமைத் தன்மைக்கு அதுவே காரணமாதலின் ஏனை அரசர் குடையினும் சிறந்த குடை என்பது தோன்ற உயர்ந்தோங்கு வெண்குடை என்றார். உரவோன் செங்குட்டுவன்
செங்குட்டுவன் செப்பும் வஞ்சினம்
9-18: இமைய............ஆகென
(இதன் பொருள்) இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவது ஆயின்-இமயமலையினின்றும் வந்த துறவோர் எமக்கு இவ்விடத்தே அறிவித்த பொருந்தாத வாழ்க்கையையுடைய வட நாட்டரசர் வாய் காவாதுரைத்த மொழியானது நம்மிடத்தே மட்டும் கிடக்கும் ஒரு சொல்லாகிவிடின்; ஆங்கு அஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்-அவ்வழி அச் சொல் எம்மையொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு அரசர்களுக்கு எம்மிடத்தே இகழ்ச்சியைத் தோற்றுவிப்பதாம் ஆதலின்; வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலை கடவுள் எழுத ஓர் கல்கொண்டு அல்லது என் வாய்வாள் வறிது மீளும் ஆகில் அவ் வடதிசைக்கண் வாழ்கின்ற அம் மன்னருடைய முடித்தலையின்மேல் பத்தினிக் கடவுளுக்குப் படிவம் அமைத்தற்கு யாம் கொள்ளும் கல்லை ஏற்றிக்கொண்டு மீள்வதல்லது என்னுடைய வெற்றி வாய்ந்த வாள் வறிதே மீண்டுவருமாயின்; செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுக்காது-செறிந்த வீரக்கழல் கட்டிய போர் செய்தற்கியன்ற வெவ்விய கோலத்தோடே சென்று எனது பகை அரசர்களை அச்சத்தால் நடுங்கச் செய்யாமல்; பயம்கெழு வைப்பின் குடி நடுக்குறூஉங் கோலேன் ஆக என-உணவு முதலிய பயன்கள் பொருந்திய எனது நாட்டின்கண் வாழுகின்ற என்னுடைய நன்குடி மக்களைத் துன்பத்தால் நடுங்கச் செய்கின்ற கொடுங்கோல் மன்னன் ஆவேனாக; என்றான் என்க.
(விளக்கம்) தாபதர்-துறவோர். ஈங்கு-இங்கு வந்து தன் செற்றத்திற்கு ஆளானமையின் அவர் வாழ்விழத்தல் ஒருதலை என்பது தோன்ற அமையா வாழ்க்கை அரைசர் என்றான். வாய்காவாது உரைத்த மொழி என்பது தோன்ற மொழியென் றொழியாது வாய் மொழி என்றான். அப் பழமொழி மூவர்க்கும் பொதுவாயினும் நம்பால் கூறப்பட்டதாகலின் பின்னொரு காலத்தே இது கேட்டும் சேரன் அஞ்சிக்கிடந்தான்; யாமாயின் அப்பொழுதே சென்று அவ்வரசர் முடித்தலை கொய்வோம் எனச் சோழனும் பாண்டியனும் எம்மை இகழ்தற்கு இடம் தரும் என்றான் என்பது கருத்து. தமிழ் வேந்தராதலின் அவரை எம்போல் வேந்தர் என்றான். மன்னர் கனகனும் விசயனும் என்க. வாய்வாள்: வினைத்தொகை. நடுங்காது-நடுங்கச் செய்யாது. நடுக்குறூஉம்-நடுங்கச் செய்யும்.
ஆசான் கூற்று
19-24: ஆர் புனை.............கூற
(இதன் பொருள்) ஆசான்-அரசன் கூறிய வஞ்சினம் கேட்ட நல்லாசிரியன் அரசனை நோக்கி; ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோரல்லால்-ஆத்தி மலரால் தொடுத்த மாலையையும் மலர்ந்த வேப்பந்தாரையும் அழகு பொருந்திய தம்முடைய மணிமுடிக் கலனின்மீது அணிந்துள்ள சோழனையும் பாண்டியனையுமே இகழ்ந்ததல்லால்; இமயவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர்-இமயமலையை எல்லையாகவுடைய ஏந்தால் அவ் வடவாரிய மன்னர் நின்னை இகழ்ந்தாரல்லர்; நின் சினம் அமைக-ஆதலால் நின்னுடைய சினம் தணிவதாக; அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல் நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ எனக் கூற-நின்பால் அஞ்சிய பகைவர்க்கும் தஞ்சமளிக்கும் கொல்லும் போராற்றல் மிக்க அண்ணலே நீ கூறிய இவ் வஞ்சின மொழியைக் கேட்டு அஞ்சுவ தல்லது நின்னை எதிர்க்கின்ற மன்னர்தாமும் இவ் வையகத்தில் யாரும் இலர்காண் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.
(விளக்கம்) ஆர்-ஆத்திப்பூ. அலர்தார் வேம்பு-மாலையாகவே மலரும் வேப்பமாலை எனினுமாம். ஆர் புனைந்தவன் சோழன். வேம்பு புனைந்தவன் பாண்டியன்.
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றத னெஃகு (குறள். 773)
என்பது பற்றி மறச்சிறப்புக் கூறுவான், அஞ்சினர்க்களிக்கும் அடுபோரண்ணல் என்றான்.
கணிவன் கூற்று
25-31: ஆறிரு............ஏத்த
(இதன் பொருள்) ஆறு இரு மதியினும் காருக அடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து-ஒரு யாண்டின் கண்ணவாகிய பன்னிரண்டு திங்களினும் கோள்கள் நிற்கும் நிலையை ஆராய்ந்து நன்கு பயின்று கணித நூலுக்குரிய ஐந்து உறுப்புகளின் இலக்கணங்களையும் வல்லார்வாய்க் கேட்டு முடித்த பெருங்கணிவன் தானே எழுந்துநின்று கூறுபவன்; வெம்திறல் வேந்தே நின்கொற்றம் வாழ்க-வெவ்விய போராற்றல் வாய்ந்த வேந்தர் பெருமானே நின் வெற்றி நீடுழி வாழ்வதாக: இரு நிலம் மருங்கின் மன்னர் எல்லாம் நின் திருமலர்த் தாமரைச் சேவடிபணியும் முழுத்தம் ஈங்கு இது-பெரிய இந் நிலவுலகில் வாழுகின்ற மன்னரெல்லாம் நின்னுடைய திருமகள் வீற்றிருக்கின்ற மலராகிய செந்தாமரை மலரையொத்த சிவந்த திருவடிகளைப் பணிவதற்கு உரிய நல்ல முழுத்தம் இப்பொழுது நிகழ்கின்ற இம் முழுத்தமேயாகும்; முன்னிய திசைமேல் எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த ஆதலால் பெருமான் நினைத்த அவ் வட திசைமேல் படையெழுச்சி செய்யும் அப் பகுதியை உடையை ஆகுக என்று அறிவித்துக் கைகுவித்துத் தொழாநிற்ப என்க.
(விளக்கம்) ஆறிருமதி-சித்திரை முதலிய பன்னிரண்டு திங்கள். காருக அடி-கோள்கள் நிற்கும்நிலை. கோள்கள் இடையறாதியங்கலின் ஆறிருமதியினும் இடையறாது பயிலுதல் வேண்டிற்று. ஐந்து கேள்வி - ஐந்து உறுப்புகளைப்பற்றிய கேள்வி அறிவு. அவ்வுறுப்புகளாவன: திதிவாரம் நாள் (நட்சத்திரம்) யோகம் கரணம் என்பன. பஞ்சாங்கம் பார்த்தல் என்பதுமது. இனி நட்பு ஆட்சி உச்சம் பகை நீசம் என்னும் கோளின் தன்மை ஐந்தும் எனினுமாம். முழுத்தம்-நல்லபொழுது. பாலை-பகுதியையுடையை. இம்முழுத்தம் கழிந்தொழியின் இத்தகைய முழுத்தம் கிடைத்தலரிது என்பதுபற்றி இக் கணிவன் விதுவிதுப் புற்று, அரசன் தன்னை விளிக்கு முன்னரே எழுந்து நின்று அரசனுக்கு முழுத்தம் அறிவித்தல் முறைமையாகாது; முறை தவறியும் இக் கணிவன் இங்கு அரசனுக்குக் கூறுவது அரசனுடைய நலத்தில் அவன் கொண்டிருக்கின்ற விருப்ப மிகுதியை நமக்குப் புலப்படுத்தும்.
சேரன் செங்குட்டுவன் எழுச்சியின் ஆரவாரம்
32-47: மீளாவென்றி.............புகுதர
(இதன் பொருள்) மீளாவென்றி வேந்தன் கேட்டு வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்க என-தன்னைவிட்டு நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அப் பெருங்கணியின் சொற் கேட்டவுடன் படைத்தலைவரை நோக்கி அங்ஙனமாயின் இந் நன்முழுத்தத்திலேயே நமது வெற்றிவாளையும் கொற்ற வெண்குடையையும் வடதிசை நோக்கிப் புறவீடு செய்வீராக என்று பணிப்ப, அப்பொழுதே; உரவு மண் சுமந்த அரவுத்தலை பனிப்ப பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஆர்ப்ப-வலிமையுடைய இந் நிலவுலகத்தைச் சுமந்துள்ள ஆதிசேடன் என்னும் பாம்பினது ஆயிரம் தலைகளும் பொறை ஆற்றாது நடுங்கும்படி மறவர்கள் செய்யும் ஆரவாரத்தோடே வீரமுரசங்களின் முழக்கமும் எழுந்து ஆரவாரிப்ப; இரவு இடங்கெடுத்த நிரைமணி விளக்கின் விரிவுக்கொடி அடுக்கத்து நிரயத் தானையோடு-இரவினது இருள் உறைதற்கு உரிய இடம் இல்லையாம்படி செய்த நிரல்பட்ட அழகிய விளக்கொளியின்கண் கலந்த கொடி நெருங்கிய பகைவர்க்கு நரகத்தையொத்த படைகளோடு; ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும்-அமைச்சரையுள்ளிட்ட ஐம்பெரும் குழுவினரும் கரணத்தியலவரை உள்ளிட்ட எண் பேராயத்தினரும்; வெம்பரி யானை வேந்தற்கு ஓங்கிய கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும்-விரைந்து செல்லும் யானையையுடைய அரசனுக்குக் கண்போற் சிறந்தவராகிய சான்றோரும் காலம் கணிக்கும் தொழிலையுடைய கணிக மாக்களும் அரசியல் அறம் கூறுவோரும் படையிடத்துத் தொழில் செய்வோரும் ஆகிய இவரெல்லாம்; மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என-மண் திணிந்த நிலவுலகத்தை ஆள்கின்ற எம் அரசன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி; பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத்தின் மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் புறநிலைக் கோட்டப் புரிசையின் புகுத்தி-அரசன் பிண்டித்துக் கொடுத்த பிண்டத்தை உண்ணும் சிறப்புப் பெற்ற பெரியகளிறாகிய பட்டத்து யானையின் பிடரியின்மேல் மறப்பண்பு மிகுதற்குக் காரணமான வாளையும் மலர்மாலை சூட்டிய கொற்ற வெண்குடையையும் ஏற்றிவைத்து அரண்மனையின் புறத்தே நிற்கின்ற கொற்றவை கோயிலின் மதிலகத்தே புகவிடுத்து; புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர-குற்றமில்லாத வஞ்சிப் பூமாலையைத் தனக்குரிய பனம்பூ மாலையொடு ஒருசேரப் புனைகின்றவனான தம் அரசன் விளங்குதற்கிடனான அவையின்கண் தத்தமக்குரிய முறைமையோடே புகாநிற்ப என்க
(விளக்கம்) பனிப்ப, ஒலிப்ப, தானையோடு குழுவும் ஆயமும் நால்வகை வினைஞரும் ஆள்வோன் வாழ்கென வாழ்த்தி எருத்தின்கண் வானையும் குடையையும் புகுத்திப் பின்னர் அரசவையின்கண் புகாநிற்ப என இயையும்.
பொருநர்-போர்க்களம் பாடும் பொருநருமாம். நிரை மணி விளக்கின்............புகுத்தி என்றமையால் இந் நிகழ்ச்சிகள் அற்றை நாள் இரவின்கண் நிகழ்ந்தமை பெற்றாம். நிரையத்தானை. நரகின்கண் எமபடர் சித்திரவதை செய்யுமாறுபோலே பகைவரைச் சித்திரவதை செய்யும் படை மறவர் என்றவாறு. ஐம்பெருங்குழு-அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்றூதுவர் சாரணரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே எனுமிவர்.
எண்பேராயம்-கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப எனுமிவர்.
கரும வினைஞர்-சடங்கு செய்வோர். கணக்கியல் வினைஞர்-காலக்கணிதர். கணக்கு எழுதுவோருமாம். தரும வினைஞர்-அறங் கூறுவோர்; (நியாயாதிபதி) புறநிலைக் கோட்டம் என்றது கொற்றவை கோயிலை. மன்னர் நன்னாளிலே இவ்வாறு வாளையும் குடையையும் புறவீடு செய்யும் வழக்கத்தை, குடைநாட்கோள் வாள்நாட்கோள் எனவரும் புறத்திணைத் துறைகளால் உணர்க. வஞ்சி-போர்ப்பூ. போந்தை-அடையாளப்பூ அவையம். அவை
செங்குட்டுவன் வடதிசை யாத்திரை
48-60: அரும்படை..........ஏறினன்
(இதன் பொருள்) அரும்படைத்தானை அமர் வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-வெல்லுதற்கரிய படைக்கலன்களேந்திய மறவருக்கும் போரைப் பெரிதும் விரும்பி ஆரவாரித்த பெரிய நாற்பெரும் படைத்தலைவர்க்கும் தானே உடனிருந்து பெருஞ்சோற்று விருந்தளித்து; பூவா வஞ்சியிற் பூத்தவஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து-வஞ்சி நகரத்திலே மலர்ந்த வஞ்சிப்பூவால் தொடுத்த மாலையை வென்றிவாய்த்த வாளையுடைய பெரிய புகழையுடைய அவ்வேந்தர் பெருமான் தனது அழகிய முடியின்கண் அணிந்து; ஞாலங் காவலர் இறைபயிரும் நாள் காலை முரசம் கடைமுகத்து எழுதலும்-உலகத்தை யாளும் மன்னர்கள் தாம் செலுத்தக்கடவதிறைப் பொருளைக் கொணர்ந்து இறுத்தற்கு அழைக்கும் அறிகுறியாக விடியற்காலத்தே முழங்கும் முரசம் அரண்மனை வாயிலிலே முழங்காநிற்ப; நிலவுக்கதிர் நீள் இருஞ் சென்னி உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி-நிலவொளி பரப்பும்யிறையை அணிந்த நீண்ட பெரிய முச்சியினையும் உலகங்களை யெல்லாம் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கின்ற உருவத்தையும் உடைய ஏனைக் கடவுளரினும் உயர்ந்த முழுமுதல்வனாகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளை; மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு-மறப்பண்பு சேர்தற்கு அறிகுறியான வஞ்சி மாலையொடு ஒருசேர நெஞ்சின் நினைந்து புனைந்து பிறர் யாரையும் வணங்காத தன் தலையால் வணங்கி அவ்விறைவனை வலங்கொண்டு வந்து; மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல் அகம் வருத்த-அந்தணர் தம் கையின் ஏந்திவந்த ஆவுதியின் நறுமணம் கமழும் புகையானது தான் சூடிய தேன்பொருந்திய மலர்மாலையின் அழகிய இடத்தை வருத்தாநிற்ப; கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்-மதவெறியினையுடைய யானையினது பிடரின்கண் ஏறினன்; என்க.
(விளக்கம்) பெருஞ்சோறு வகுத்தலாவது வேந்தன் போர் கருதிப் புறப்படும்பொழுது அப் போர் மறவரொடு தானும் உடன் உண்பான் போல அவரைப் பாராட்டுதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைத் தன் கையால் வழங்குதல். இதனை பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை எனவரும் தொல்காப்பியத்தால் உணர்க. (புறத் 8) பூவா வஞ்சி-வெளிப்படை. இறைவன் திருவடிகள் தன் தலைமேலனவாக நினைத்து வழிபாடு செய்தலை உயர்ந்தோன் சேவடி வஞ்சி மாலையொடு புனைந்து என்றார். இறைஞ்சாச் சென்னி என்றது இறைவனையன்றிப் பிறரை வணங்காச் சென்னி என்றவாறு. உயர்ந்தோன் என்றது, சிவபெருமானை. உலகத்திலுள்ள எல்லாப் பொருளும் தன்னுள் அடக்கி நிற்றலின் அவ்வாறு கூறினர், இதனை
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன
இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்
எனவரும் மணிமேகலையானும் (27....87. 95) அறிக. வேள்விச் சாலையினின்றும் மறையோர் ஏந்தி வந்த நறும்புகை என்பது கருத்து அதன் மிகுதி கூறுவார் மாலையின் நல்லகம் வருத்த என்றார்.
இதுவுமது
61-67: குடக்கோ............செலவுழி
(இதன் பொருள்) ஆடகமாடத்து அறி துயில் அமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர் குடக்கோக் குட்டுவன் கொற்றங்கொள்க என திருவனந்தபுரத்தில் பொன்னாலியன்ற திருக்கோயிலின் கண் பரப்பணைமிசை அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலுக்கு வழிபாடு செய்யப்பட்ட சேடத்தை அந்தணர் சிலர் கொணர்ந்து செங்குட்டுவன் முன்னின்று சேரநாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வெற்றி கொள்வானாக என வாழ்த்திக்கொடுப்ப; தெள்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச்சேவடி மணிமுடி வைத்தலின்-தெளிந்த கங்கை நீர் முழுவதும் மறைதற்குக் காரணமான சிவந்த சடையையுடைய இறைவனது அழகிய சிவந்த திருவடிகளை முன்பே தனது அழகிய முடியின்கண் சூட்டியிருத்தலால்; ஆங்கு அது வாங்கி அணி மணிப்புயத்துத் தாங்கினனாகித் தகைமையின் செல்வுழி-அத் திருமால் அடியார் வழங்கிய துளபமாலை முதலிய அச் சேடத்தை வாங்கித் தனது அணிகலன் அணிந்த தோளின்மேல் அணிந்து கொண்டவனாய்த் தனக்கியன்ற பெருந்தகைமையோடே அவ்விடத்தினின்றும் போம்பொழுது என்க.
(விளக்கம்) ஆடக-மாடம்-திருவனந்தபுரத்தில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம். அது பொன் மாடம் ஆதலின் ஆடக மாடம் எனப்பட்டது. சேடம்-ஈண்டுப் பிரசாதம்; அவை துளபமாலை முதலியன. சிலர் என்றது திருமால் அடியாரை. முன்னரே சிவன் திருவடி மலரை முடிக்கணிந்திருத்தலின் பின்னர்க் கொணர்ந்த திருமால் சேடத்தைத் தோளில் அணிதல் வேண்டிற்று என அடிகளார் ஏதுக் கூறினரேனும் செங்குட்டுவன் சைவ சமயத்தினன் என்பதும் வைணவ சமயம் முதலிய பிற சமயங்களை வெறுப்பவனல்லன் என்பதுமாகிய உண்மையையே அடிகளார் இங்ஙனம் நயம்படக் கூறுகின்றார் என்பதுணர்க.
இதுவுமது
68-73: நாடக.............ஆகென
(இதன் பொருள்) நாடகமடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் கூடையில் பொலிந்து-நாடகக்கணிகை மகளிர்தாம் ஆடுகின்ற அரங்குகள் எங்கும் கைகூப்பிப் பொலிவுடன் தோன்றி; கொற்ற வேந்தே வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு ஓடை யானையின் உயர்முகத்து ஓங்க-வெற்றியையுடைய வேந்தர் பெருமானே! வாகை மாலையும் தும்பை மாலையும் அழகிய இதழையுடைய போந்தை மாலையோடு முக படாஅம் அணிந்த நினது களிற்றியானையின் உயர்ந்த முகத்தின்கண் உயர்ந்து விளங்கும்படி; வெண்குடைநீழல் எம் வெள்வளை கவரும் கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-நீ அந்த யானை மிசைக் கொற்ற வெண்குடை நீழலில் வீற்றிருந்து மீண்டுவரும் பொழுது எம்முடைய சங்க வளையல்களைக் கவர்கின்ற எங்களுடைய கண்கள் கண்டு பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுதற்குக் காரணமான தோற்றம் உடையை ஆம் வந்தருளுக! என்று வாழ்த்தா நிற்ப, என்க.
(விளக்கம்) கூடை-இரட்டைக் கை. குவித்துக் கும்பிட்ட கை என்றவாறு. வாகை கூறியது, அரசர் சூடுவன யானைக்கும் சூட்டுதலின், வாகையும் தும்பையும் போந்தையோடு நின் யானை முகத்து ஓங்கித் தோன்ற என்றார். தும்பை பகை அரசனுடன் போர் செய்தலைக் கருதிச் சூடப்படும் பூ. வாகை பகைவனை வென்றபின் சூடுகின்ற பூ. ஆதலின் நீ முதலில் தும்பை சூடிப் பகைவரை வென்று வாகை சூடி மீண்டு வருவாயாக என்பார் வாகை தும்பை போந்தையோடு ஓங்க என்றார். ஓடை-முக படாஅம். வெள்வளை கவரும் காட்சியை எனவும் கண்களி கொள்ளும் காட்சியை எனவும் தனித்தனி கூட்டுக.
செங்குட்டுவன் நீலகிரியை எய்துதல்
74-85: மாகத........ஆங்கு
(இதன் பொருள்) மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த-மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்ல வெற்றி தோன்றுமாறு வாழ்த்தா நிற்ப; யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வலன் ஏத்த-யானை மறவரும் குதிரை மறவரும் வென்றி வாய்த்த வாள் மறவரும் வாளினால் உண்டாகும் வெற்றியைப் புகழா நிற்ப; தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன்போல வஞ்சி நீங்கி-அசுரர்மேல் போர் செய்தற்குத் தனது தலைநகரமாகிய அமராவதியினின்றும் புறப்பட்டுப் போகின்ற அமரர் கோமானைப்போலத் தன் தலைநகரமாகிய வஞ்சியினின்றும் புறப்பட்டு; தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெள்தலை புணரியின் விளிம்பு சூழ்போத-படைத்தலைவர்களும் முதன்மையுடைய தூசிப்படையும் வெள்ளிய தலையையுடைய கடலினது கரையின்மேல் சூழ்ந்து செல்லாநிற்ப; மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட உலகமன்னவன் ஒருங்கு உடன்சென்று-மலைகள் முதுகு நெளியும்படியும் சமநிலைபெற்ற நாடுகளிலே பெரிய வழிகள் உண்டாகும்படியும் இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அப் படைகளோடே கூடிச் சென்று; ஆலும் புரவி அணித்தேர் தானையொடு ஆங்கு நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு-ஆரவாரிக்கின்ற குதிரைப்படை அழகிய தேர்ப்படை முதலிய படைகளோடே அவ்விடத் தெதிர்ப்பட்ட நீலகிரியினது நெடிய பக்கத்திலே தங்கி அவ்விடத்தில் என்க.
(விளக்கம்) மாகதப் புலவர்-இருந்தேத்துவார்; வைதாளிகர் வைதாளி பாடுவோர் சூதர்-நின்றேத்துவார். இவுளி-குதிரை. தானவர்-அசுரர். வானவன்-இந்திரன் புணரி-கடல். விளிம்பு-கரை. மலை முதுகு நெளிய என்றதனால் நிலைநாடு சமமாக நிலை பெற்ற நாடு என்க. நீலகிரி-ஒரு மலை . இறுத்தல்-தங்கி இருத்தல்
இதுவுமது
89-91: ஆடியில்.............பின்னர்
(இதன் பொருள்) ஆடு இயல் யானையும் தேரும் மாவும் பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பின்-அசைகின்ற இயல்பினையுடைய யானையும் தேரும் குதிரையும், பெருங்குடிப் பிறந்த பெருமை மிக்க தொல்படை மறவரும் தத்தம் கடமையில் திரிபில்லாத காவலையுடைய; பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் இருநில மடந்தைக்குத் திரு அடி அளித்து ஆங்கு-படைவீட்டின்கண் நடுவுநிலையைப் பெரிதும் விரும்புகின்ற அம் மன்னவன் தன்னுடைய தேவியாகிய பெரிய நிலமகளுக்குத் தனது அழகிய அடிகளை வழங்கியபொழுது; அருந் திறல் மாக்கள் அடி ஈடு ஏத்தப் பெரும் பேரமளி ஏறியபின்னர்-பகைவரால் வெல்லுதற்கரிய பேராற்றல் பொருந்திய மறவர் தனது திருவடி பெயர்த்திடுந்தோறும் வணங்கி வாழ்த்தா நிற்பச் சென்று; பெருமைமிக்க பெரிய அரசு கட்டிலின்கண் ஏறி அமர்ந்தபின்னர் என்க.
(விளக்கம்) யானை நிற்கும்பொழுது அசைந்த வண்ணமே நிற்கும் இயல்புடையது ஆதலின் ஆடியல் யானை என்றார். மறவர்க்குப் பீடு மறக்குடிப் பிறத்தல். பாடி இருக்கை-கூடாரமிட்டுப் படைகள் தங்கி இருக்குமிடம். பகல்-நடுவு நிலைமை. அரசனைத் திருமாலாகக் கருதுதலின் நிலமகளைத் தேவியாகக் கருதித் தன் இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்றார். இங்ஙனமே கட்டுரை காதையின்கண் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனன் (121-22) எனப் பாண்டியனையும் ஓதுதலுணர்க. இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்பது ஊர்தியினின்றும் நிலத்தின்மேல் இறங்கி என்றவாறு பெரும் பேரமளி என்றது அரியணையை.
முனிவர் சேரன் செங்குட்டுவனைக் காண்டல்
92-104: இயங்குபடை.............பின்னர்
(இதன் பொருள்) இயங்குபடை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப எடுத்துச் செலவினையுடைய அப் படைகளின் முழக்கங்கள் ஒன்று கூடி எழுகின்ற பேரொலியானது வானத்தினும் சென்று ஒலித்தலாலே உணர்ந்த; விசும்பு இயங்கு முனிவர்-அந்தரசாரிகளாகிய முனிவர்கள்; வியல்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்று-அகன்ற நிலத்தை ஆளுகின்ற இந்திரனை யொத்த செல்வமிக்க சேரன் செங்குட்டுவனை யாமும் சென்று காண்பேம் என்னும் கருத்துடையராய்; அந்தரத்து இழிந்து ஆங்கு அரசுவிளங்கு அவையத்து மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற-விண்ணினின்றும் நிலத்தின்கண் இழிந்து அப் பாடியிருக்கையின்கண் அவ்வரசன் அரியணையிலிருந்து திகழுகின்ற அந் நல்லவையின்கண் மின்னலினது ஒளியையும் மழுக்கும் பேரொளி படைத்த திருமேனியோடு எழுந்தருளாநிற்ப; மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-அம் முனிவருடைய வரவுகண்டு மகிழ்ந்த சேரன் செங்குட்டுவன் அரியணையினின்றும் எழுந்து வணங்கி நின்கின்றவனை-அம் முனிவர்கள் நோக்கி; செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்-சிவந்த சடை முடியையுடைய சிவபெருமானின் திருவருளாலே சேரர்குலம் விளங்கும்படி வஞ்சி நகரத்திலே பிறந்த சேரமன்னவனே! யாம் உனக்குக் கூறுவதொன்றுளது அதனைக் கேட்பாயாக; மலையத்து ஏகுதும்-யாங்கள் இப்பொழுது இமயமலையினின்றும் பொதிய மலைக்குச் செல்கின்றோம்; வான் பேர் இமய நிலையத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்-உயரிய பெரிய இமயமாகிய மலை நிற்குமிடத்திற்குச் செல்லுதல் உன்னுடைய கருத்தாதலால்; ஆங்கு அருமறை அந்தணர் வாழ்வோர் உளர்-அவ்விமயமலையில் உணர்தற்கரிய மறைகளை ஓதி உணர்ந்த சிறப்புடைய அந்தணர் பலர் வாழுகின்றோர் உளர்; நெருநிலமன்ன பேணல் நின்கடன் என்று பெரிய நில உலகத்தை ஆளுகின்ற வேந்தனே நீ அங்குச் சென்ற பொழுது அவ்வந்தணர்களுக்குத் தீங்கு நேராவண்ணம் குறிக்கொண்டு பாதுகாத்தல் நினக்குரிய தலையாய கடமைகாண் இதுவே யாங்கள் உனக்குக் கூறக்கருதியதாம் என்று அறிவித்து ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-அவ்விடத்தினின்றும் அம் முனிவர் அரசனை வாழ்த்திப் போனதன் பின்னர் என்க.
(விளக்கம்) இயங்கு படையென்றது எடுத்துச் செலவினை மேற் கொண்டிருக்கின்ற படை என்றவாறு. யானையின் பிளிற்றொலியும் குதிரையின் கனைப்பொலியும் மறவர் ஆர்ப்பொலியும் ஒன்று சேர்ந்து எழுந்த பேரொலி என்பார் அரவத்தீண்டொலி என்றார். இசைப்ப என்னும் செயவென்னெச்சம் முனிவர் உணர்தற்கு ஏதுப் பொருட்டாய் நின்றது. முனிவர்-அந்தரசாரிகள். இந்திர திருவன்-இந்திரன் போன்ற செல்வமுடையவன். செஞ்சடை வானவன் அருளினில் தோன்றிய வானவ என்றது செங்குட்டுவன் இருமுதுகுரவரும் சிவபெருமான்பால் நோன்புகிடந்து வரமாகப் பெற்ற மகவு என்றுணர்த்தியவாறாம் அக்குலம் விளங்க என்க. வானவ என்றது சேரனே என்றவாறு மலையம்-பொதியில். வான்-வெண்மையுமாம். நிலையம் நிற்குமிடம் ஆண்டுப் போர் நிகழ்தல் கூடும் அந் நிகழ்ச்சியால் அங்கு வாழும் அந்தணர்க்குத் தீங்கு நேராவண்ணம் பேணுக என்று ஓம்படை செய்தபடியாம். இக் கடமை நினக்குரிய கடமையேயாம் ஆயினும் யாமும் நினைவூட்டுகின்றேம் என்பதுபட பெருநில மன்ன! எனவும் பேணல் நின் கடனெனவும் ஓதினர். ஆயின் ஓதாமையே அமையு மெனின் அஃ தொக்கும் ஆயினும் அங்கு அந்தணர் வாழ்வோர் உளர் என்பது செங்குட்டுவன் அறியானாதல் கூடுமாகலின் அறிவித்தல் வேண்டிற்று என்க.
செங்குட்டுவனைக் காணக் கொங்கணக்கூத்தரும் கன்னடக்கூத்தரும் வருதல்
105-115: வீங்குநீர்..........தோன்ற
(இதன் பொருள்) வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என-பெருகிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆள்கின்ற சேரர் பெருமான் நீடூழி வாழ்க என்று வாழ்த்தியவராய் கொங்கணக் கூத்தரும் கொடும் கருநாடரும் தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்-கொங்கண நாட்டுக் கூத்தரும் வளைவுடைய கன்னட நாட்டுக் கூத்தரும் தங்கள் தங்கள் குலத்திற்குக் கூத்த நூலில் ஓதப்பட்ட அழகமைந்த ஒப்பனையுடையராய்; இருள்படப் பொதுளிய சுருள் இருங்குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்-இருளுண்டாகும்படி செறிந்த சுருண்ட கரிய தமது தலைமயிரில் கண்டோர்க்கு வியப்புத் தோன்றும்படி பரப்பப்பட்ட தழைத்த மாலையை யுடையராய்; வடம்சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை கருங்கயல் நெடுங்கண் காரிகையாரோடு-தம்முடைய விறலியராகிய முத்துவடத்தைச் சுமந்துகொண்டு உயர்ந்தபின்னும் வளரும் இயல்புடைய இளைய அழகிய முலையினையும் கரிய கயல்மீன் போன்ற நெடிய கண்ணையும் உடைய அழகிய மகளிரோடே; அரும்பு அவிழ் வேனில் இருங்குயில் ஆல இன வண்டு யாழ்செய வந்தது-எம் காதலர் எமக்குக் குறிப்பிட்டுப் போன நாளரும்புகள் மலருகின்ற இளவேனில் பருவந்தானும் கரிய குயில்கள் கூவவும் தம்மனத்தோடுகூடிய வண்டுகள் யாழிசைபோன்று முரலா நிற்பவும் இதோ வந்துவிட்டது; காதலர் வாரார்-எம்முடைய காதலரோ இன்னும் வந்திலர் என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-என்னும் பொருளமைந்த மேன்மை தக்கிருக்கின்ற சிறப்பையுடைய காதற்பண்ணாகிய வரிப்பாடலைப் பாடியவாறு அரசன்முன் தோன்றா நிற்ப; என்க.
(விளக்கம்) வீங்கு நீர்-கடல். வளைந்த கன்னட நாடு என வளைவை நாட்டிற்கேற்றுக. குலக்கு-குலத்திற்கு தகை-அழகு. அணி-ஒப்பனை குஞ்சி-ஆண் மயிர். மருள்-வியப்பு. மயக்கம் என்பாரும் உளர். ஒலியல்-தழைத்தல். மாலையர் என்னுமளவும் கூத்தரில் ஆடவரைக் கூறியபடியாம். மேலே அவர் தம் விறலியரைக் கூறுகின்றார். விறலியர்-விறல்பட நடிக்கும் மகளிர் இருங்குயில் என்பது முதல் காதலர் என்பது ஈறாக அக் கூத்தர் பாடிக்கொண்டு வந்த வரிப் பாடல் என்க. அதன் பொருள் காதல் ஆதலின் மாதர்ப்பாணி என்றார். மாதர்-காதல் எனவே காதற் பாட்டு என்பதாயிற்று. வரி-நாடகத் தமிழ்ப் பாடல்; உரு என்பதுமது, இக்காலத்தார் உருப்படி என்பர்.
குடகக்கூத்தர் வருகை
116-121: கோல்வளை.......தோன்ற
(இதன் பொருள்) கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்-திரண்ட வளையலணிந்த எம்பெருமாட்டியே விரைந்து நீ நின்னை அழகு செய்துகொள்வாயாக அஃது எற்றுக்கெனின்; கார்கடிது இடித்து உரறி வந்தது-முகிலோ கடிதாக இவித்து முழங்கிக்கொண்டு உதோ வானத்தின்கண் வந்தது, ஆதலால்; காலம் காணாய்-இதுவே நம் பெருமான் மீண்டுவருவதாக நம்பால் கூறிச்சென்ற காலம் என்பதை நினைத்துப் பார்ப்பாயாக; செய்வினை முடித்து காதலர் ஏறிய தேர் வந்தது என-தாம் கருதிச் சென்ற செய்வினையைச் செய்துமுடித்து நம் காதலர் ஏறிய தேர்தானும் வந்துவிட்டது, ஆதலால் என்னும் பொருளமைந்த; கா அர்க் குரவையொடு-கார்ப்பருவத்தே முல்லை நிலத்து மகளிர் பாடுகின்ற குரவைப் பாட்டைப் பாடியவண்ணம் வருகின்ற; கருங்கயல் நெடுங்கண் கோல் தொடி மாதரோடு குடகர் தோன்ற-கரிய கயல்போன்ற நெடிய கண்ணையும் திரண்ட வளையலையும் உடைய விறலியரோடு குட நாட்டுக் கூத்தர்தாமும் அம் மன்னவன் முன்னர்வந்து தோன்றாநிற்ப என்க.
(விளக்கம்) கோல்-திரட்சி. கோலம்-ஒப்பனை. காலம்-நம் பெருமான் குறித்துச் சென்ற காலம் என்பதுபட நின்றது. இது கார்ப்பருவத்தே பிரிவாற்றாமையால் வருந்துகின்ற தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழியர் குரவைக் கூத்தாடுவார் கார் வரவும் தேர் வரவும் கண்டு தலைவிக்குக் கூறி ஆற்றுவித்ததாகப் பொருளமைந்த குரவைப்பாட்டு. இப் பாட்டினைப் பாடிய வண்ணம் வருகின்ற கூத்திய ரோடு குடகக் கூத்தர் வந்து தோன்றினர் என்க.
ஓவர் வருகை
122-124: தாழ்தரு............தோன்ற
(இதன் பொருள்) தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வான் வினைமுடித்து-கண்டோர் மனம் தம்மிடத்தே தங்கிக்கிடத்தற்குக் காரணமான ஒப்பனையையுடைய தம் மகளிரோடே மகிழ்ச்சியினால் சிறப்புற்று வாளால் செய்யும் போர்த் தொழிலை வெற்றியுடன் முடித்து; மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற-வீரவாளை ஏந்திய வேந்தன் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறியவராய் ஓவர்கள் செங்குட்டுவன்முன் வந்து தொழாநிற்ப என்க.
(விளக்கம்) காதலன் மனம் தம்பால் தாழ்தருதற்குக் காரணமான கோலம் என்க. ஓவர்-ஏத்தாளர் பாடற் கீழ் மக்களுமாம்.
செங்குட்டுவன் செயல்
125-127: கூத்துள்..........இருந்துழி
(இதன் பொருள்) கூத்து உள்படுவோன் காட்டிய முறைமையின் ஏத்தினர்-இவ்வாறு கொங்கணக் கூத்தர் முதலாக ஓவர் ஈறாகத் தன்னைக் காணவந்த கூத்தர்கள் தம்முள் ஒவ்வொரு குழுவினர்க்கும் உரிய ஆடலாசிரியன் கற்பித்த முறைமைப்படி தன்னைப் புகழ்ந்து பாடி ஆடிய அக் கூத்தர்களுக்கெல்லாம் பரிசிலாக அறியா இருங்கலன் நல்கி-அவர்தாம் பண்டு எவ்விடத்தும் பெற்றறியாத பேரணிகலன்களை வழங்கி; வேந்து இனம் நடுக்கும் வேலோன் இருந்துழி-பகைமன்னர்களைத் தம் இனத்தோடே நடுங்கச் செய்கின்ற வெற்றிவேலேந்திய அச் சேரன் செங்குட்டுவன் இனிது வீற்றிருந்தபொழுது என்க.
(விளக்கம்) கூத்துள் படுவோன்-ஆடலாசிரியன். வேலோன்-செங்குட்டுவன்
செங்குட்டுவனுக்கு நண்பராகிய நூற்றுவர் கன்னர் வரவிடுத்தவை
128-140: நாடக.......இசைப்ப
(இதன் பொருள்) நாடக மகளிர் ஈர்ஐம்பத்து இருவரும்-நாடகக் கணிகை மகளிர் ஒருநூற்று இருவரும்; கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மர்-ஒருங்கு குழுமிய குயிலுவக் கருவி இசைப்போர் இருநூற்று எண்மரும், தொண்னூற்று அறுவகைப் பாசண்டத் துறை நண்ணிய நகை வேழம்பர் நூற்றுவரும் தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரத் துறைகளை நன்கு கற்றுத்தெளிந்த நகைப்பைத் தோற்றுவிக்கும் வேழம்பர் ஒரு நூற்றுவரும்; கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும் கொடுஞ்சிறையையுடைய நூறு நெடிய தேர்களும்; கடுங்களி யானை ஓர் ஐஞ்னூறும்-மிக்க வெறியையுடைய ஐந்நூறு யானைகளும் ஐயீராயிரம் கொய்உளைப் புரவியும்-பதினாயிரம் கத்தரிகையால் கொய்து மட்டம் செய்யப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளும்; எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண் எழுத்துப் படுத் தன கைபுனை சகடமும்-யாண்டும் காணப்படாது வடநாட்டின்கண் மட்டும் தோன்றுகின்ற வளமான சரக்குகளை அவற்றின் பெயர் அளவு முதலியன குறிக்கப்பட்ட மூடைகளை ஏற்றி அழகு செய்யப்பட்ட இருபதினாயிரம் வண்டிகளும்; சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற கஞ்சுக முதல்வர் ஈர்ஐஞ்னூற்றுவரும்-சஞ்சயன் என்னும் தூதர் தலைவனையுள்ளிட்ட அரசவரிசையாகிய தலை அணி பெற்ற மெய்ப்பைபுக்க தலைவர்கள் ஓர் ஆயிரவரும்; சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே-ஏனைய கொடிகளினும் காட்டில் மிகவும் உயரத்தே பறக்கின்ற விற்கொடியையும் செங்கோன்மையையும் உடைய வேந்தர் பெருமானே; வாயிலோர் என வாயில்வந்து இசைப்ப-நம்முடைய பாடிவீட்டின் முற்றத்திலே வந்து நிற்கின்றனர் என்று வாயில்காவலன் வந்து அரசனுக்குக் கூறாநிற்ப என்க.
(விளக்கம்) குயிலுவர்-இசைக் கருவி வசிப்பவர். தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை-தொண்ணூற்று அறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை இதனைக் கனாத்திறம் உரைத்த காதையி(15ஆம் அடி) னும் விளக்கத்திலும் காண்க. நகை வேழம்பர்-நகைச்சுவைப்பட நடிக்கும் கூத்தர். எய்யாத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. வடவளம்-வடநாட்டில் விளையும் உணவுப்பொருள். தலைக்கீடு-அரசியலில் இன்ன தொழிலைச் செய்பவர் என்பதற்கு அறிகுறியாகிய தலைப்பாகை போன்ற அணி. கஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) வாயில்: ஆகுபெயர். வாயில்காவலன் என்க.
சஞ்சயன் செங்குட்டுவனைக் காணுதல்
141-145: நாடக..........ஏத்தி
(இதன் பொருள்) நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடு இசை குயிலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கு என-அதுகேட்ட மன்னவன் நாடக மகளிரும் ஏனைய கலை நலங்கெழுமிய மக்களும் பொருந்திய இசைக் கருவியாளர்களும் சஞ்சயனோடு வருவாராக இப்பொழுதே என்று கூறாநிற்ப; செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையத்து சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி-செங்கோன்மையுடைய வேந்தனது பணிபெற்றபின் திருமகள் விளங்காநின்ற அவ்வரசவையின்கண் சஞ்சயன் என்னும் அத் தூதர்குழுத் தலைவன் புகுந்து அரசன் அடியில் வீழ்ந்து வணங்கி அவனுடைய பலவேறு புகழ்களையும் எடுத்தோதிய பின்னர் என்க.
(விளக்கம்) வாயிலோன் உரைத்தமை கேட்ட அரசன் அவரெல்லாம் இங்கு வருக என அவ் வாயிலோன் அச் செய்தியைத் தன்பால் வந்து அறிவிக்கக் கேட்ட சஞ்சயன் அவையத்துப் புகுந்து தாழ்ந்து ஏத்தினன் என்க.
சஞ்சயன் கூற்று
149-155: ஆணை..........வாழ்கென
(இதன் பொருள்) ஆணையில் புகுந்த ஈர்ஐம்பத்திருவரொடு மாண் வினையாளரை வகைபெறக் காட்டி-அரசனுடைய கட்டளை பெற்றுத் தன்னோடு வந்து புகுந்த நாடகமகளிர் ஒரு நூற்றிருவரோடே மாட்சிமை மிக்க கலைத்தொழிலாளர்களை மன்னனுக்கு வகை வகையாக இன்னின்ன கலையில் இன்னின்னவர் வல்லுநர் என அறிவித்தபின்னர் அரசனை நோக்கி; கோல் தொழில் வேந்தே-செங்கோன்மைத் தொழிலில் திறமிக்க சேரவேந்தனே; வேற்றுமையின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும்-ஒரு சிறிதும் மனவேற்றுமை இல்லாமல் நின்னோடு நட்புக்கொண்டுள்ள நூற்றுவர் கன்னரும் நினக்குக் கூறுமாறு பணித்த செய்தி ஒன்று உளது. அதனைக் கேட்டருளுக என்று கூறுபவன்; வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவுள் எழுத ஓர் கற்கு ஆகின்-வடக்கு நோக்கிச் சேரமன்னன் செல்லுவது பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் பண்ணவேண்டிய கல்லின் பொருட்டே எனின்; யாம் ஓங்கி இமயத்து கல் கால்கொண்டு வீங்குநீர் கங்கை நீர்ப்படை செய்து-யாங்களே உயர்ந்த அவ்விமய மலைக்குச் சென்று அதன்பால் கல்லை அடிச்செய்து கைக்கொண்டு வந்து பெருகிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றின்கண் அதனை நீர்ப் படுத்தும் சடங்கினையும் செய்து முடித்து; ஆங்குத் தரும் ஆற்றலம் என்றனர்-பெருமானே நினது நாட்டிற்கே கொணர்ந்து தருகின்ற வலிமையை உடையேம் என்று இக் கருத்தினை நின்பால் அறிவித்திடுக என்று என்னை ஏவினர்; என்று வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என-என்று அச் சஞ்சயன் வேந்தனுக்குக் கூறிக் கடல்சூழ்ந்த நில உலகம் முழுவதையும் ஆளுகின்ற பெருமானே நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபின் என்க.
(விளக்கம்) ஐம்பத்திருவர் என்றது முன் கூறப்பட்ட நாடக மகளிரை மாண் வினையாளர் என்றது ஏனைய கலைஞரை. நூற்றுவர் கன்னர் என்போர் செங்குட்டுவனோடு கேண்மை பூண்டு ஒழுகும் வடநாட்டு மன்னர் என்க. வானவன்-சேரன். கற்கேயாயின் என்புழி ஏகாரம் பிரிநிலை. கல்லின் பொருட்டேயானால் பெருமான் அங்குப் போதல் வேண்டா, யாமே சென்று அக் கல்லைக் கொணர்ந்து தருவேம் என்பது இதனால் போந்த பொருள்.
செங்குட்டுவன் சஞ்சயனுக்குக் கூறுதல்
156-163: அடல்வேல்..........தாமென
(இதன் பொருள்) அடல்வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் கடல் அம் தானை காவலன் உரைக்கும்-கொலைத்தொழிலையுடைய வேல் ஏந்துகின்ற பகை மன்னருடைய மீண்டும் பெறுதற்கரிய உயிரைப் பருகுகின்ற கடல்போலும் பெரிய அழகிய படைகளையுடைய சேரன் செங்குட்டுவன் சஞ்சயன் கூறிய செய்திகேட்ட பின்னர்ச் சொல்லுவான்; ஆங்கு பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவின் கனகனும் விசயனும்-தூதுவனே நம் படை யெழுச்சி கல்கோள் மட்டும் கருதியது அன்று, பின் எற்றுக் கெனின் அவ் வடநாட்டின்கண் பாலகுமரன் என்னும் ஓர் அரசனுடைய மக்கள் இருவர் உளர், மற்று அவர் தாமும் தமது நாவினைக் காத்துக்கொள்ளும் அறிவின்மை காரணமாகக் கனகனும் விசயனும் ஆகிய அவ் இருமடவோரும்; விருந்தின் மன்னர் தம் மொடுங் கூடி-புதுவோராகிய மன்னர் சிலரோடு கூடியிருந்து அளவளாவுங்கால்; அருந் தமிழ் ஆற்றல் அறிந்திலர் என-பிறரால் வெல்லுதற்கரிய தமிழ் மன்னருடைய பேராற்றலை இன்னும் அறிந்துகொள்ளாதவராய் இருக்கின்றனர் என்பது அவர் சொல்லட்டத்தால் தெரியவந்தது, ஆதலால், இச் சேனை கூற்றுங் கொண்டு செல்வது-அம் மடவோர்க்கு அருந்தமிழ் ஆற்றலை அறிவித்தற் பொருட்டு இத் தமிழ்ப்படை கூற்றத்தைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போவதாம், என்றான் என்க.
(விளக்கம்) அடல்-கொல்லுதல் மன்னர்-பகை மன்னர் காவலன்: செங்குட்டுவன். பால குமரன் மக்கள் இருவர் உளராம் கனகனும் விசயனும் என்பது அவர் பெயராம் அவர் தாம் விருந்தின் மன்னரொடு கூடி அளவளாவும் பொழுது அவர் கூறிய கூற்றுகளால் தமிழாற்றல் அறிந்திலர் என்பது தெரிய வந்தது என்றவாறு. எனவே தமிழ் மன்னரை அவர் இகழ்ந்தமையை மறைத்துப் பிறிதொரு வாய் பாட்டால் கூறினான் ஆயிற்று. எனவே இதற்கு யாமே போதல் வேண்டும் என்பது இதனாற் போந்த பயன் என்க.
இதுவுமது
164-165: நூற்றுவர்..............தாமென
(இதன் பொருள்) நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி தூதனே இச் செய்தியை நீ சென்று என் நண்பராகிய நூற்றுவர் கன்னர்க்கு அறிவித்து மேலும்; ஆங்குக் கங்கைப் பேரியாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை தாம் செய்க என-அவ்விடத்திலுள்ள கங்கையாகிய பெரிய யாற்றினை நமது இப் பெரும் படை கடந்து அக்கரை சேர்தற்கு வேண்டியனவாகிய ஓடங்களின் பெரிய வரிசையை அந் நூற்றுவர் கன்னர்செய்து தருவராக என்று கூறா நிற்ப என்க.
(விளக்கம்) வங்கப் பெருநிரை-ஓடங்களின் பெரிய வரிசை. பெரும் படை கங்கையைக் கடக்க வேண்டுதலின் வங்கங்களின் வரிசையும் நீளமாக இருத்தல் வேண்டும் என அறிவித்தவாறாம் தாம் என்றது நூற்றுவர் கன்னரை.
தென்னவர் திறைப்பொருள் உய்த்தல்
166-172: சஞ்சயன்......பின்னர்
(இதன் பொருள்) சஞ்சயன் போனபின்-சஞ்சயன் அரசன்பால் விடைபெற்றுச் சென்றபின்னர்; எஞ்சா நாவினர் கஞ்சுக மாக்கள் ஈர் ஐஞ்ஞாற்றுவர்-தாம் கூறவேண்டிய கூற்றைக் குறை கிடப்பக் கூறாத நல்ல நாவன்மையை யுடையவராகிய மெய்ப்பை புக்க ஓராயிரம் தூதுவர்; தென்னர் இட்ட சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் திறையொடு கொணர்ந்து-தென்னாட்டு மன்னவர் இறுத்த சந்தனக் குறட்டின் குவியலும் கடல்முத்தும் பிற திறைப் பொருளோடே கொணர; காவல் வேந்தன் கண் எழுத்தாளர்-காத்தல் தொழிலையுடைய வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனுடைய திருமந்திரவோலை எழுதும் எழுத்தாளர் அவை பெற்றுக்கொண்டமைக்கு; மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து ஆங்கு-இலச்சினையிடப்பட்ட திருவோலையை அத் தென்னாட்டு மன்னவருக்கு அளித்தபொழுதே; ஆங்கு அவர் ஏகியபின்னர்-அவ்விடத்தினின்றும் அக் கஞ்சுக மாக்கள் சென்ற பின்னர் என்க.
(விளக்கம்) தென்னர்-சேரநாட்டுத் தென்பகுதியை ஆளுகின்ற மன்னர் எனினுமாம். இனிப் பாண்டிய மரபிலுள்ள மன்னர் எனினுமாம். தாழ் நீர் முத்து-கடலின்கட் படும் முத்து. கண்ணெழுத்தாளர் திருமந்திர ஓலை எழுதுவோர். வேந்தன்: செங்குட்டுவன். மன்னவர் தென்னர், அவர்-அக் கஞ்சுமாக்கள்.
செங்குட்டுவன் நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கங்கையைக் கடந்து வடநாட்டில் புகுதல்
172-181: மன்னிய........தன்முன்
(இதன் பொருள்) மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல்வலன் ஏத்த-நிலைபெற்ற கடல்சூழ்ந்த உலகத்தை ஆள்பவனாகிய செங்குட்டுவன் வளத்தால் உயர்ந்த நாடுகள் பலவற்றையும் ஆள்கின்ற அரசர்கள் தனது சிறந்த வெற்றியைப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப் பேர்யாற்றுக் கன்னரின் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி-தான் வீற்றிருந்த படைவீட்டினின்றும் புறப்பட்டுச் சென்று கங்கை என்னும் பெரிய யாற்று நீரை நூற்றுவர் கன்னரால் பெறப்பட்ட ஓடங்களின்மேல் ஏறிக்கடந்து அக் கங்கையின் வடகரையை அடைந்து; ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்து ஆங்கு ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ-அவ் வடகரையின்கண் அந்நூற்றுவர் கன்னர் தன்னை எதிர்கொண்டு சிறப்புச் செய்யப் பின்னர் அந்த நாட்டையும் கடந்துபோய் அப்பாலுள்ள பெருகுகின்ற நீரையுடைய மருதப் பரப்பினையுடைய வடநாட்டினை எய்தி; பகைப்புலம் புக்கு-அப்பாலுள்ள பகைவருடைய நாட்டின்கண் புகுந்து; பாசறை இருந்த தகைப்பு அருந்தானை மற்வோன் தன்முன்-அவ்விடத்தே பாசறை அமைத்துத் தங்கியிருந்த பிறரால் தடுத்து நிறுத்துதல் அரிய படைகளையுடைய மற மன்னனாகிய அச் செங்குட்டுவன் முன்னர்; என்க.
(விளக்கம்) ஞாலமாள்வோன்: செங்குட்டுவன். வலன்-வெற்றி. பாடியிருக்கை-படை வீடு கன்னர்-தன் நண்பராகிய நூற்றுவர் கன்னர். கன்னரால் அமைத்துத் தரப்பெற்ற வங்கத்தின் மிகுதி தோன்ற வங்கப் பரப்பின் என்றார். அவர்-நூற்றுவர் கன்னர். நீர் வேலி-நீர் சூழ்ந்த மருதப் பரப்பு என்க.
செங்குட்டுவன் பகைமன்னர் வந்து எதிர்த்தல்
182-187: உத்தரன்.........மேல்வர
(இதன் பொருள்) உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்-உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் என்னும் பெயரையுடைய அவ் வடதிசையின்கண் உள்ள பல்வேறு நாடுகளையும் ஆளுகின்ற அரசர் எல்லாம் ஒருங்கு குழுமி; கனக விசயர் கலந்த கேண்மையின் யாம் தென் தமிழ் ஆற்றல் காண்குதும் என-கனகனும் விசயனும் ஆகிய இரண்டு மன்னரோடும் பொருந்திய நட்புடைமை காரணமாக யாமெல்லாம் கூடிச்சென்று தென்றிசைக் கண்ணதாகிய தமிழ் மன்னனுடைய போராற்றலை அவனுடன் பொருது அளந்து காண்போம் என்று துணிந்து; நிலம் திரைத்தானையொடு நிகர்த்து மேல்வர-நிலவுலகத்தைச் சுருங்கிய தாக்குகின்ற பெரிய நாற்பெரும் படையொடு தம்மூள் ஒத்துச் செங்குட்டுவன்மேல் போருக்கு வர என்க.
(விளக்கம்) உத்தரன் முதலியவர் வடநாட்டு அரசர்கள்; கனக விசயரின் நண்பர்கள்; தென் தமிழ்: ஆகுபெயர்; தமிழ் அரசன் என்றவாறு. நிலம் திரைத்தானை-நிலத்தைச் சுருக்கிக் காட்டும் அளவு பெருகிய படை என்றவாறு. இதனோடு
பார் சிறுத்தலிற் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமு மில்லையே
எனவரும் கலிங்கத்துப் பரணிச் (348) செய்யுளையும் ஒப்பு நோக்குக. நிகர்த்து-மானம் ஊக்கம் இவற்றால் கனக விசயரை ஒத்து என்க நேர்வர எனினுமாம்.
செங்குட்டுவனின் போர்த்திறம்
(இதன் பொருள்) இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமா கரிமாப் பெருநிரைகண்டு உளம் சிறந்து பாய்ந்த பண்பின்-பகைமன்னர் வரவுகண்டு இரை தேர்தற்பொருட்டு வேட்கைக்கு எழுந்து வந்த ஒரு சிங்கமானது தன் எதிரே வருகின்ற யானையினது பெரிய வரிசையைக் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து அவ்வியானைக் கூட்டத்தின்மேலே பாய்ந்த தன்மைபோல விரைந்து சென்று; பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப-பலவாகிய வேலையுடைய அவ்வரசர்களால் கொணரப்பட்ட எதிரூன்றிய அப் படைகளோடே சேரன் செங்குட்டுவன் தன் படைகளோடு சென்று போராற்றா நிற்ப என்க.
(விளக்கம்) அரிமா-சிங்கம். கரிமா-யானை. உளம் சிறந்து ஊக்கம் மிகுந்து எனினுமாம். மன்னர் என்றது உத்தரன் முதலியோரை காஞ்சித் தானை-எதிர் வந்து போர் செய்யும் படை. உட்காது எதிர் ஊன்றல் காஞ்சி, எனவரும் பழம் பாடலும் நோக்குக.
இதுவுமது
192-103: வெயிற்கதிர்........செறிய
(இதன் பொருள்) துகிற்கொடிப் பந்தர் வெயில் கதிர் விழுங்கிய இரு திறத்துப் படைகளினும் உயர்த்தப்பட்ட துகிலாலியன்ற கொடிகளின் பந்தல்கள் ஞாயிற்றின் வெயில் ஒளியை மறைத்தொழித்தன; வடித்தோல் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமோடு மாதிரம் அதிரவடித்த தோல் டோர்க்கப்பட்ட வளைந்த போர்ப்பறையும் வெள்ளிய சங்கும் நீண்ட கொம்பும் இடிபோன்று முழங்கும் போர் முரசமும் இழும் என்னும் ஓசையையுடைய கஞ்சக் கருவியும் உயிராகிய பலியை உண்ணுகின்ற இடிபோலும் ஒலியையுடைய மயிர் சீவாது போர்த்த கண்ணையுடைய வீரமுரசமும் ஆகிய இவையெல்லாம் ஒருங்குகூடி எட்டுத் திசைகளும் அதிரும்படி முழங்காநிற்பவும்; சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் கறைத்தோல் மறவர் கடுந்தேர் ஊருநர் வெண்டோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் மண்கண் கெடுத்த மாநிலப் பெருந்துகள்-வில்லையுடைய தேளையுடைய மறவரும் போர்வேலை ஏந்திய பெரிய கையையுடைய மறவரும் கருங்கடகுபற்றிய மறவரும் விரைந்தியங்கும் தேரின்கண் ஏறி ஊர்கின்ற மறவரும் வெள்ளிய மருப்புக்களையுடைய யானை ஊர்ந்துவரும் மறவரும் விரைந்த செலவினையுடைய குதிரை ஊர்ந்துவரும் மறவரும், மண்ணினது இடத்தைக் கிண்டிக் கொடுத்தலாலே இந்தப் பெரிய நிலத்தினின்றும் எழும் மிக்க துகள்கள்; களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கு இசை நாவும்-களத்தில் புகுந்த போர்யானைகளுக்குக் கொடியிற்கட்டிய மிக்க இசையையுடைய சங்குகளின் நாக்களும்; நடுங்குதொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள்செறிய-அசைந்து ஒலிக்கும் தொழில் ஒழிந்து ஒடுங்கும்படி அவற்றினுள்ளே புகுந்து நிறையா நின்ப என்க.
(விளக்கம்) கொடிப் பந்தர் கதிரை விழுங்கின என்றவாறு. வடித்தோல்-வடித்த தோல்; பதம் செய்த தோல் என்றவாறு. பறை-போர்ப்பறை. வளை-வெற்றிச் சங்கு. வயிர்-கொம்பு. முரசம்-போர் முரசம் என்பார் இடிக்குரல் முரசம் என்றார். பாண்டில்-வெண்கலத்தால் செய்த தாளம். அதன் ஒலி இழுமென்றிருக்கும் என்க. மயிர்க் கண் முரசம்-மயிர் சீவாது போர்த்த முரசம் என்க. மந்திரம்-திசை. சிலை-வில். கறைத்தோல்-ஒரு வகைக் கடகு. மண்கண் கெடுத்த என்பதற்கு மண்ணுலகத்தில் வாழும் உயிர்களின் கண்ணை அவித்த(துகள்) எனினுமாம். நந்தின் இசைநா என்றமையால் வெண்கலத்தால் சங்கு வடிவமாகச் செய்யப்பட்ட ஒரு வகை மணியின் நா எனக்கொண்டு இம் மணி கொடியின்கண் கட்டப்படும் ஆதலின் கொடி நந்தின் நா என்றார் எனக் கோடல் தகும். நந்து-சங்கு. துகள் செறிதலால், மணிகளின் நா இயக்கமின்றி உள் ஒடுங்கின என்க.
இதுவுமது
204-212: தாகும்......குவித்து
(இதன் பொருள்) தாரும் தாரும் தாம் இடைமயங்கத் தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய-இருதிறத்துத் தூசிப்படைகளும் ஒன்றனூடு ஒன்று புக்குத் தம்முள் கைகலந்து போர் ஆற்றுதலாலே தோள்களும் கால்களும் துணிக்கப்பட்டு வேறுபட்டுக் கிடக்கின்ற; சிலைத்தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து-வில்லையுடைய தோளையுடைய அம் மறவருடைய உடற்சுமைகளாலியன்ற மலைகளிலே ஏறி; எறிபிணம் இடறிய குறை உடல் கவந்தம் முன்னரே ஏறண்டுகிடக்கின்ற பிணங்களிலே கால் இடறுண்ட தலையற்ற உடலாகிய கவந்தங்கள்; பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட-பறைபோன்ற கண்களையுடைய பெண் பேய்கள் தம் கையாலே புடைக்கின்ற தாளத்திற் கிணங்கக் கூத்தாடா நிற்பவும்; பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில் கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பிணங்களைச் சுமந்து கொண் டியங்குகின்ற நிணமாகிய நுரைகளையுடைய குருதிப் பேரியாற்றின்கண் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ள பெண் பேய்கள் தமது கூந்தலைத் தாழ விட்டு நீராடி மகிழா நிற்பவும்; அடுந்தேர்த்தானை ஆரிய அரசன் கடும்படை மாக்களைக் கொன்று களம் குவித்து-பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய தேர் முதலிய நாற்பெரும் படைகளையும் உடைய அவ் வடவாரிய மன்னருடைய கடிய படைமறவர்களையெல்லாம் கொன்று அவர் தம்முடலைப் போர்க்களத்தின்கண்ணே குவித்தமையாலே என்க.
(விளக்கம்) தார்-தூசிப்படை. உடற் பொறை-உடலாகிய சுமை தோளும் தாளும் வேறாகிய உடற் பொறை, எனவும் மறவர் உடற் பொறை எனவும் தனித்தனி கூட்டுக. அடுக்கம்-மலை எறி-பிணம்-வெட்டுண்ட பிணம். தலை துணிபட்ட பின்னரும் இயங்கும் கவந்தங்கள் பிணம் இடறுதலாலே தடையுண்டு நின்று ஆடின அவ்வாட்டம் களித்து ஆடும் பேய் மகளிர் கை கொட்டுகின்ற தாளத்திற் கியைந்தன என்றவாறு. பேய் மகளின் கண்ணுக்குப் பறையுவமை இதனோடு பேய்க் கண்ணன் பிளிறுகடி முரசம் எனவரும் பட்டினப் பாலையையும் நினைக. (234) நிணமாகிய நுரைபடு குருதியாகிய நீரில் என்க. இகுத்தல்-தாழ்த்துதல்; முழுகுவித்து என்றவாறு. குவித்து குவித்தலாலே, (217) ஆரிய அரசர் அறிய என இயையும்.
இதுவுமது
213-218: நெடுந்தேர்......வேந்தன்
(இதன் பொருள்) நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற்று எருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட-தம்முடைய மறவர் வீற்றிருந்த நெடிய தேரின்கண் இருக்கையாகிய கொடுஞ்சியும், கடிய களிற்றியானையின் பிடரும் மறவர்களால் செலுத்தப்பட்டுப் பின்னர் அவர் வீழ்ந்தமையாலே தாமே செல்லும் செலவினையுடைய குதிரைகளின் முதுகும் பாழ்பட்டுக் கிடக்கும்படி; எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது-வருமையாகிய கடிய குதிரையை ஊர்ந்து வருகின்ற கூற்றுவன் உயிர்த் தொகுதிகளை ஒரு நாள் ஒரு பொழுதின் அளவிலே உண்டொழிப்பன் என்னும் உண்மையை; ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய-கனகனும் விசயனும் முதலிய அவ் வாரியவரசர் அப் போர்க்களத்திலே நன்கு அறிந்துகொள்ளுமாறு; நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந்தன்-கொன்று குவிப்பதாகத் துணிந்து வீரக்கழல் அணிந்த மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன்; என்க.
(விளக்கம்) படை மாக்கள்-படை மறவர்; கொடுஞ்சி-தேரின் கண் தாமரை மலர் வடிவாகச் செய்தமைத்த இருக்கை. கொடுஞ்சியும் களிற்றெருத்தமும் குதிரை வெரிநும் தம் மேலிருந்த மறவர் இறந்து பட்டமையின் பாழ்பட்டன என்க. எருமையாகிய பரியூர்வோன்-கூற்றுவன். தமிழ்ப்படை கொணரும் கூற்றுவன்.........அறிய என்றவாறு. என்னை! அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் எனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது என்றானாதலின் அக் கூற்றமாகிய எருமைக்கடும் பரியூர்வோன் என்பதே கருத்தாகக் கொள்க.
நூழில் ஆட்டிய-கொன்று குவிக்கக் கருதிய வேந்தன் என்க.
219-224: போந்தை.........படுதலும்
(இதன் பொருள்) போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலய-தன் அடையாளப் பூவாகிய பனம்பூவோடே விரவிக்கட்டிய செவ்வியையுடைய தும்பைப் பூவை மிகவும் உயர்ந்த தன் தலைமிசைச் சூட்டிக்கொண்டவளவிலே; வாய் வாளாண்மையின் வண் தமிழ் இகழ்ந்த காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்-தம் நாவையடக்கி வாளா திருக்கமாட்டாமையாலே வளவிய தமிழ் மன்னரின் போராற்றலை இகழ்ந்தவராகிய பகைவரைக் கொல்லும் வேலேந்திய பெரிய கையையுடைய கனகன் என்பவனும் விசயன் என்பவனுமாகிய ஆரிய மன்னரிருவரும்; ஐம்பத்து இருவர் கடுந்தேராளரொடு செங்குட்டுவன்தன் சினவலைப் படுதலும்-தம் நட்பினராகிய ஐம்பத்திரண்டு மறவர் கடிய செலவினையுடைய தேரினையுடைய யாரொடு வந்தவர் அப் போர்க் களத்தே செங்குட்டுவனுடைய சினமாகிய வலையினுள்ளெய்துதலும்; என்க.
(விளக்கம்) பருவத் தும்பை-செவ்வியையுடைய தும்பைப்பூ. தும்பைப்பூ போர்க்கறிகுறியாகச் சூடப்படும் இதனை
தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப
என வருந் தொல்காப்பியத்தான் உணர்க.
ஈண்டுத் தம் மைந்து பொருளாக அருந்தமிழ் ஆற்றல் அறியா நிகழ்ந்து போர்செய்தற்கு வந்து எதிர்ந்த வேந்தரைச் செங்குட்டுவன் சென்று அவர்தம் தலைமை அழித்தலுணர்க. வாய்வாளாண்மை-வாய்வறிது இராமை என்பது அரும்பதவுரை வாயாகிய வாளின் ஆண்மை எனப் பொருள் கூறிப் பின்னும்; வாய் வாளாமை என்பது ஒன்றும் பேசாதிருத்தலாதலின் இச் சொல் அதனின் வேறாகும் என்பர் திரு நாட்டாரவர்கள்.
கனகனும் விசயனும் தமக்குத் துணையாகக் கடுந்தேர் மறவர் ஐம்பத்திருவருடன் வந்தெதிர்ந்தாராயினும் அவன் சினத்திற்காளான பொழுதே அஞ்சித் தப்புதற்குச் செய்த உபாயங்களை இனி அடிகளார் கூறுகின்றனர் தப்பிய போதலரிதாதலின் சினத்தை வலை என்றார்.
கனகவிசயர் முதலியோர் நிலைமை
225-230: சடையினர்...........படர்தர
(இதன் பொருள்) சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன்பாளர் பாடு பாணியர் பல் இயத்தோளினர் ஆடுகூத்தர் ஆகி-சடையை உடையவரும் துவராடை முதலிய துறவோர்க்கியன்ற ஆடைகளை உடுத்தவரும் சாம்பல் முதலிய சமயக் குறியீடுகளை மேற்கொண்டவரும் தருப்பை மான் தோல் முதலிய துறவோர் இருக்கைகளை யுடையவரும் மயிற்பீலியையும் உண்ணா நோன்பு முதலிய பெரிய நோன்புகளையும் உடைய பல்வேறு இன்னிசைக் கருவிகளையுடைய தோளையுடையவருமாகிய கூத்தாடுகின்ற கூத்தரும் என்று கூறப்பட்ட பல்வேறு கோலங்களையும் பூண்டவர்களாய்; ஏந்துவாள் ஒழியத் தாம் துறைபோகிய விச்சைக்கோலத்து வேண்டுவயின் படர்தர-தாம் போர்க்கு வந்தபொழுது தாம் ஏந்திவந்த வாள் முதலிய போர்க் கருவிகள் ஒழியத் தாம் தாம் பண்டு கற்றுவல்ல வித்தைகட்கேற்ற கோலங் கொண்டவராகித் தாம் தாம் வேண்டிய விடத்திற்குச் செல்லா நிற்ப. என்க.
(விளக்கம்) கனகவிசயருடன் வந்த அரசராகிய உத்தரன் முதலிய மன்னரும் அவர்தம் போர்மநவரும் போரிற்பட்டவர் கிடப்ப எஞ்சியவரெல்லாம் தாம் தாம் கொணர்ந்த போர்க் கருவிகளைக் கைவிட்டுச் சடை முதலியவற்றையுடைய துறவோரும் பாணரும் கூத்தரும் ஆகிய இன்னோரன்ன கோலம் புனைந்து அப் போர்க்களத்தினின்றும் தாம் விரும்பிய விடத்திற்கு ஓடிப்போயினர் என்றவாறு. இனி இக் காட்சியோடு கலிங்கத்துப்பரணியில் வருகின்ற வரைக்கலிங்கர் தமைச் சேர மாசை ஏற்றி, வன்தூறு பறித்த மயிர்க்குறையும் வாங்கி. அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் எனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே, எனவும் வேடத்தாற் குறையாது முந்நூலாக வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப் போந்தகப் பட்டேம் என்றே அரிதனைவிட்டுயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே எனவும்வருந் தாழிசைகள் ஒப்பு நோக்கற்பாலன.
இனி, கம்பநாடர் தாமும் தம் காப்பியத்திற்கிணங்க-மீனாய் வேலையை யுற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறு மேய்வுற்றார் ஊனார் பறவையின் வடிவுற்றார் சிலர் சிலர் நான்மறையவ ருருவானார் யானார் கண்ணிள மடவா ராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றாரானார் சிலர் சிலர் ஐயா! நின் சரணென்றார் நின்றவரரியென்றார் என வோதுதலும் ஈண்டு ஒப்புக் காணத்தகும்.
பீடிகை-முனிவர் இருக்கை (தருப்பை மான்றோல் முதலியன) விச்சை-வித்தை பீலிப் பெருநோன்பாளர்-சமணத் துறவோர் பாடு பாணியர்-பாணர். பல்லியத்தோளினர் என்றது-கூத்தரை துறைபோதல்-கற்றுமுதிர்தல்
வாளேருழவன் மறக்களம் வாழ்த்திப் பேயாடு பறந்தலை
231-241: கச்சை........பறந்தலை
(இதன் பொருள்) கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப் பூட்டி வாள் கோலாக-கழுத்தின்கண் கயிற்றை உடைய யானைகளை உடைய படை மன்னர்கள் அச்சத்தால் நடுங்கும்படி மருப்புக்களை உடைய களிற்றியானைகளை எருமைக் கடாக்களாகப் பூட்டி வாளைக் கையின்கண் அக் கடாவைத் தூண்டும் கோலாகக் கொண்டு; ஆள் அழி வாங்கி அதரி திரித்த வாள் ஏருழவன் மறக் களம் வாழ்த்தி-பகை வீரர்களாகிய வைக்கோலை இழுத்துக் களத்திலே விட்டுக் கடாவிட்ட வாளாகிய ஏரை உடைய உழுதொழிலாளனாகிய சேரன் செங்குட்டுவனுடைய போர்க்களத்தின்கண் அவனது வெற்றிப் புகழை வாழ்த்தி; பேய் தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி முடிஉடைக் கருந்தலை முந்துற ஏந்தி-பிணந்தின்னும் பேய்ப் பெண்டிர் வீர வலையம் அணிந்த மறவர்களுடைய நீண்ட கைகள் தூங்கும்படி தம்கையால் தூக்கி முடிக்கலன் அணிந்த கரிய மயிர் செறிந்த அம் மறவருடைய தலை முற்பட்டுத் தோன்றும்படி தம் கையில் ஏந்திக்கொண்டு அம் மகிழ்ச்சி காரணமாக; கடல் வயிறு கலக்கிய ஞாட்புங் கடல்அகழ் இலங்கையில் எழுந்த சமரமுங் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி அவன் பண்டு திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது உண்டான போர்ச் சிறப்பினையும் நான்கு திசைகளிலும் கடல்களையே அகழியாகக் கொண்ட இலங்கையின்கண் உண்டான அரக்கர்களின் போர்களத்தில் உண்டான வெற்றிப் புகழையும் கடல்போன்ற நில நிறமுடைய கண்ணபெருமான் விசயனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து நிகழ்த்திய பாரதப் போரினது சிறப்பினையும் பாடிக்கொண்டு; பேரிசை முதல்வனை முன்தேர்க் குரவை வாழ்த்தி-இவ்வாறு மூன்று பெரும்புகழையும் உடைய திருமாலாகிய சேரன் செங்குட்டுவன் என்னும் தலைவனுடைய தேரின் முன்னின்று குரவைப் பாட்களாலே வாழ்த்தி; பின் தேர்க்குரவை ஆடு பறந்தலை-மீண்டும் வாகைசூடிய அம் மன்னவனுடைய தேர் இயங்கும்பொழுதும் அதன்பின் நின்று அப் பேய்கள் குரவைக் கூத்தாடுதற்கிடனான அவ் வடநாட்டுப் போர்களத்தின்கண் என்க.
(விளக்கம்) கேட்டுமா-யானை. காவலர்-பகை மன்னர். ஆள்-வீரன். அழி-வைக்கோல். அதரி திரித்தல்-கடாவடித்தல் வாளேருழவன் என்றது செங்குட்டுவனை. பேய்தொடியுடைய எனக் கூட்டிக் கொள்க. தொடி-வீரவலையம் எனக் கொண்டு மறவர்கை எனக்கோடலே சிறப்பு. பேய் மறவர் உடலைத் தூக்குங்கால் அம் மறவர் கைகள் தூங்கவும் தலைமுந்துறவும் தூக்கின என்பது கருத்து. செங்குட்டுவனைத் திருமாலாகக் கருதி அவன் கடல் கலக்கிய புகழ் முதலிய மூன்று புகழையும் பாடி என்றவாறு. கடல்வண்ணன் தேரூர் செரு என்றது பாரதப்போரினை. இங்ஙனம் பாடுவது, பூவைநிலை என்னும் ஒரு புறத்துறை இதனை,
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை
என வெட்சித்திணைப் புறனடையிற் கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை என்பன, தும்பைத் திணையில் வருகின்ற துறைகள்.
மறக்கள வேள்வி
242-247: முடித்தலை.............குட்டுவன்
(இதன் பொருள்) மறப்பேய் வாலுவன் முடித்தலை அடுப்பின் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு-வீரமுடைய பேயாகிய மடையன் வீரமன்னர்களுடைய முடியணிந்த தலைகளை அடுப்பாகக் கோலி அவ்வடுப்பின் மேல் வீரர்களுடைய தொடியணிந்த கைகளை அகப்பைகளாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாகிய சோற்றினை வயின் அறிந்து ஊட்ட-செவ்விதெரிந்து பேய்களுக்கு ஊட்டும்படி சிறப்பு ஊன் கடியினம் செங்கோல் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-இவ்வாறு சிறப்பான ஊனாகிய உணவினை உண்டு மகிழ்ந்த அப் பேய்க்கூட்டங்கள் தனது செங்கோன்மை பிறழாவண்ணம் செய்த வெற்றியினாலே மறக்களமாகிய போர்க்களத்தையும் எமக்கு விருந்தூட்டி அறக்களமாகச் செய்தவனாகிய செங்குட்டுவன் நீடூழி வாழ்வானாக! என்று வாழ்த்தும்படி மறக்களம் முடித்த வாய்வாள் குட்டுவன்-வடநாட்டின்கண் தனது மறக்கள வேள்வியைச் செய்துமுடித்த வெற்றிவாய்த்த வீரவாளை ஏந்திய சேரன் செங்குட்டுவன் என்க.
(விளக்கம்) முடித்தலை............ஊட்ட என்னும் இப் பகுதியோடு
ஆண்டலையணங்கடுப்பின், வய வேந்த ரொண் குருதி. சினத்தீயிற் பெயர்பு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பிற் றொடித் தோட்கை துடுப்பாக ஆடுற்றவூன் சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர, (மதுரைக், 29-38) எனவரும் பகுதியை ஒப்பு நோக்குக. முடித்தலை என்றது பகை மன்னர் தலையை அடுப்பிற்கு வன்மை வேண்டுதலின் முடித்தலை எனல் வேண்டிற்று. தாழி-பானை. வாலுவன்-சமையற்காரன்; மடையன் என்பதும் அது. வயின் அறிதல்-செவ்விதெரிதல்;(பதம் பார்த்தல்) சிறப்பூண்-விருந்துணவு. கடி-பேய். பேய்கள் போர்களத்தையும் தங்களுக்கு ஊன் சோறு வழங்கு மாற்றால் அறக்களமாகச் செய்தான்; என்று வாழ்த்தின என்ற படியாம்.
செங்குட்டுவன் கல் கால் கொள்ளுதல்
248-254: வடதிசை..............காவலனுங்கென்
(இதன் பொருள்) வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல்வேல்தானைப் படை பல ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடே அவ் வடவாரிய மன்னர் பலரையும் போர் செய்து வென்று தாம் மேற்கொண்டு சென்ற வினையையும் முற்று வித்த பலவாகிய வேல் முதலிய படைக்கலங்களையுடைய மறவர்களோடே தேர் முதலிய படைகள் பலவற்றையும் செலுத்தி; கால் தூதாளரை-மேலும் காற்றுப்போல விரைந்து செல்லும் தூதுவர்களை அழைத்து நீவிர் விரைந்துபோய்; வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை போற்றிக் காமின் என-வடதிசையின் கண் இமயமலைச் சாரலிலே வாழ்கின்ற தமக்குரிய நான்கு மறைகளையும் ஓதி அவ்வாறு ஒழுகுமாற்றால் உலகத்திலுள்ள மன்னுயிர்களை நன்கு பாதுகாக்கின்ற அந்தணர்களது வேள்விக் குழியின்கண் வளர்கின்ற வேள்வித் தீயானது ஒருபொழுதும் அவியாத குளிர்ந்த பெரிய வாழ்க்கையை நம்மனோர் இடையூறு செய்யாவண்ணம் பேணிக் கொள்ளுமின் எனவும் சொல்லிவிட்டமையால்; காவலன் ஆங்கு பொன்கோட்டு இமயத்து-சேரமன்னனாகிய செங்குட்டுவன் பொன்னிறமாக மின்னுகின்ற கோடுகளைஉடைய இமயமலையின் கண்; பொரு அறு பத்தினிக் கல்கால் கொண்டனன்-தனக்குவமை யில்லாத திருமா பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குத் திருவுருச் சமைத்தற்கு வேண்டிய கல்லை அடித்து எடுத்துக் கைப்பற்றினன் என்க.
(விளக்கம்) வில்லவன் கோதை என்பான், செங்குட்டுவனுக்கு முதலமைச்சன் ஆவான் என்பது, காட்சிக் காதையினும்(151) கண்டாம். வென்று வினை முடித்த தானை என்றது கனகவிசயர் முதலிய வடநாட்டரசரை வென்று தனது வஞ்சினத்தை முடித்த பேராற்றல் படைத்த தானை என்பது தோன்ற நின்றது.
இனி, நீலகிரியின் பக்கத்தில் தான் பாடி வீட்டின்கண் வீற்றிருந்த பொழுது விசும்பில் சென்ற சாரணர் தன் முன் வந்து தன்பால் அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்னன் காத்தல் நின்கடன் என்று ஓம்படை செய்தமையை நினைவு கூர்ந்து தன் படை மறவரால் அவ்வந்தணருக்குத் தீங்கு நேராவண்ணம் தூதரை ஏவினன் என்றவாறு. இதனால் செங்குட்டுவனுடைய நினைவாற்றலும் கடமையுணர்ச்சியும் பொச்சாப்பின்மையும் ஆகிய நற்பண்புகள் விளங்குதல் உணர்க. பொருவது பத்தினி என்றது. உலகிலுள்ள பத்தினி மகளிருள் வைத்தும் தனக்குவமையாவார் ஒருவரும் இல்லாத திருமாபத்தினி என்பதுபட நின்றது.
பா-நிலமண்டில ஆசிரியப்பா
கால்கோட் காதை முற்றிற்று.