பதிவு செய்த நாள்
31
ஜன
2012
05:01
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஃதாவது செங்குட்டுவன் இமய மலையினின்றும் எடுத்துக் கொணர்ந்த கல்லைக் கங்கைப் பேரியாற்றின்கண் நீர்ப்படை செய்தல் என்னும் சடங்கினை நிகழ்த்திய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.
இதன்கண் செந்தமிழ் நாட்டரசர் ஆற்றலறியாது இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் ஆகிய இரண்டு அரசர்களின் முடிமேல் பத்தினிக்கல்லை ஏற்றுவித்துக் கங்கையாற்றின்கண் நீர்ப்படை செய்தலும் கங்கையின் தென்கரையில் வந்து படை வீட்டில் வீற்றிருந்து, நிகழ்ந்த போரின்கண் விழுப்புண் பட்டுத் துறக்க மெய்திய மறவர்களுடைய மைந்தர்களுக்குப் பொன்னாலியன்ற வாகைப்பூக்களை வழங்கி இருத்தலும், அங்கு வந்த மாடலன் என்னும் பார்ப்பனனால் தமிழ் நாட்டில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து கொள்ளுதலும் அப் பார்ப்பனனுக்குத் துலாபாரம் புகுதல் என்னும் பெருந்தானத்தைச் செய்தலும் தான் சிறை பிடித்து வந்த கனக விசயரைத் தன்னோடொத்த தமிழரசராகிய சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வருமாறு தன் கோத்தொழிலாளரொடு அம் மன்னரைப் போக்குதலும் பின்னர்த் தன் தலை நகரத்திற்குச் செல்லுதலும் பிறவும் கூறப்படும்
நீர்ப்படை என்பது, புறத்திணைத்துறைகளுள் ஒன்று. அது போரின்கண் புறங்கொடாது நின்று விழுப்புண் பட்டு விண்ணகம் புக்க வீரர்களை வழிபடுதற் பொருட்டுக் கல் எடுத்து அக் கல்லினைப் புண்ணிய நீரின்கண் மூழ்குவித்துத் தூய்மை செய்தலும், பின்னர் அக் கல்லின்கண் அவ் வீரருடைய பெயரும் பீடும் எழுதி நிறுத்தி மங்கல நீராட்டுதலும் ஆம்.
வீர மறவர்க்கியன்ற இம்முறை வீர பத்தினியாகிய கண்ணகிக்கும் பொருந்துமென்று கருதிச் செங்குட்டுவன் தனது பேராண்மை தோன்ற இமயத்தினின்றும் கொணர்ந்த அக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்தனன் என்றுணர்க.
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 5
அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள; 10
வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுளை 15
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும், 20
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து, 25
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; 30
குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய, 35
தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோர்; 40
நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
வருக தாம் என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து, 45
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்;
மாடல மறையோன் வந்து தோன்றி,
வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல் - பாணி கனக- விசயர்- தம் 50
முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க! என-
பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு? என- 55
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்:
கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன் 60
மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள். 65
இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்
மா முனி பொதியின் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின் 70
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; 75
அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ? என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் 80
போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
என்னோடு இவர் வினை உருத்ததோ? என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு 85
என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச்,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி, 90
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; 95
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்; 100
தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு. நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் 105
கணிகையர் கோலம் காணாதொழிக என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்; 110
மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு! என-
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என- 115
நீடு வாழியரோ, நீள் நில வேந்து! என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்; 120
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து, 125
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி, 130
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட 135
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- 140
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க, 145
அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன்,
எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க! என்று ஏத்த- 150
நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155
சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு 160
செங்கோல் தன்மை தீது இன்றோ? என-
எம் கோ வேந்தே, வாழ்க! என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்; 165
குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லற் காலையும், 170
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-
பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், தன் நிறை 175
மாடல மறையோன் கொள்க என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க என்று ஏவி-
தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்; 180
சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை, 185
பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞாற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190
இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி, 195
குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து 200
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய, 205
மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம் 210
அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; 215
நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக என-
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த, 220
வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக் 225
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும் 230
தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235
முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து,
வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர் என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ, 240
கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்துக்
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து 245
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம் எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் 250
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, 255
உரை
செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது
1-13: வடபேரி..............செங்குட்டுவன்
(இதன் பொருள்) செறிகழல் வேந்தன்-செறியக் கட்டிய வீரக்கழலை உடைய மன்னனாகிய சேரன் செங்குட்டுவன்; வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின் கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்-வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையின் கண் மழை தருவதற்கியன்ற பெருஞ் சிறப்பினை உடைய கடவுளாகிய வீரபத்தினிக்குப் படிவம் சமைத்தற்கு வேண்டிய கல்லை வரை செய்து கைக்கொண்ட பின்னர்; சினவேல் முன்பின் செருவெம் கோலத்துக் கனகவிசயர்தம் கதிர்முடி-ஏற்றி-வெகுளுதற்குக் காரணமான வேற்படையையும் ஆற்றலையும் போர் செய்தற்குரிய வெவ்விய கோலத்தையும் உடைய கனகனும் விசயனுமாகிய அவ்வரசர் ஒளிபொருந்திய முடிக்கலனணிந்த தலையின்மேல் ஏற்றிவைத்து; செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக-கொலைத்தொழிலை உடைய பழையவனாகிய கூற்றுவன் தான் செய்துவருகின்ற அக் கொலைத் தொழில் மிகும் படி; உயிர்த்தொகை உண்ட-இவ்வுலகத்து உயிர்க்கூட்டங்களை உண்டொழித்த போர்கள்; ஒன்பதிற்று இரட்டி என்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் கூட்டி ஈண்டு நீர் ஞாலம் எண் கொள-பதினெட்டு என்று ஓர் எண்ணை நிறுத்தி அதனோடு யாண்டினையும் திங்களையும் நாளையும் நாழிகையையும் கூட்டிக் கடல்சூழ்ந்த இவ்வுலத்திலுள்ள மாந்தர்கள் எண் குறிக்கும்படி; தென் தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை-தென் திசைக்கண்ணதாகிய தமிழகத்து மறவர்களுடைய பேராற்றலின் சிறப்பினை அறியாமையால் அக் கனகவிசயருக்குத் துணையாக வந்து போர்புரிந்த உத்தரன் முதலிய வடவாரிய மன்னரும்; வருபெருந்தானை உயிர்த்தொகை மறக்கள மருங்கின் ஒரு பகல் எல்லை உண்ட செங்குட்டுவன்-அம் மன்னரோடு வந்த நாற்பெரும் படைகளும் ஆகிய உயிர்க் கூட்டங்களைப் போர்களத்தின்கண் ஒரு நாளினது ஒரு பகலினுள்ளும் பதினெட்டும் நாழிகைக்குள் கொன்று குவித்த சேரன் செங்குட்டுவன் என்க.
(விளக்கம்) பேரிமயம்-மலைகளுள் வைத்துப் பெரிய மலையாகிய இமயம் என்றவாறு. வான்: ஆகுபெயர்; மழை என்க. துறக்கம் தரும் சிறப்பு என்பது சிறப்பின்று. கனகவிசயர் முடியின்மேல் கல்லேற்றி வருகுவல் என்பது தான்செய்த வஞ்சினமாதலின் அவ்வாறே அவ்வரசர் முடிமேல் கல்லேற்றினன் என்பது கருத்து. தமிழாற்றல்-தமிழ் மறவர் போராற்றல்-ஆரியமன்னரும் அவரொடு வருபெரும்-தானையும் ஆகிய உயிர்தொகையை உண்ட என்க. திருமாலாகிய செங்குட்டுவன் கூற்றுவன் தொழில் பெருகும்படி உயிர்த்தொகையை உண்ட போர்கள் நான்கு. அவற்றுள் முதலாவது பதினெட்டு யாண்டுகளிலும், இரண்டாவது பதினெட்டுத் திங்களினும், மூன்றாவது பதினெட்டு நாளினும், நான்காவது பதினெட்டு நாழிகையினும் நிகழ்ந்தன என்று உலகத்தார் கூறும்படி வடவாரியரோடு செய்த போர் பதினெட்டு நாழிகையில் முடிவுற்றது என்பது கருத்து, எனவே இது பூவை நிலை என்னும் ஒருபுறத்திணைத்துறை என்றுணர்க, செயிர்த்தொழில் முதியோன் என்றது கூற்றுவனை திருமால் செய்த போர்களாவன :
1-மோகினியாகித் தேவாசுரப் போரை மூட்டி நிகழ்த்தியது.
2-இராமனாகி இலங்கையில் அரக்கரோடு செய்த போர்.
3-கண்ணனாகி நிகழ்த்திய பாரதப்போர்.
4-செங்குட்டுவனாகி வடவாரியரோடு செய்த போர். இவை நிரலே பதினெட்டு யாண்டும் திங்களும் நாளும் நாழிகையும் ஆகிய காலத்தில் நிகழ்ந்தன என்பது கருத்து.
செங்குட்டுவன் பத்தினிக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்து தென்கரை எய்துதல்
13-24: தன்சினவேல்............புக்கு
(இதன் பொருள்) தன்சின வேல் தானையொடு கங்கைப் பேர்வாற்றுக் கரை அகம் புகுந்து-(செங்குட்டுவன்) தனது வெகுளி மிக்க வேல் ஏந்திய போர் மறவர் முதலிய பெரும் படையோடு அவ் வடதிசையினின்றும் மீண்டு கங்கை என்னும் பேரியாற்றினது கரையகத்தே வந்தெய்தி; பத்தினிக் கடவுளை நூல் திறன் மக்களின் நீர்ப்படை பால்படு மரபின் செய்து-திருமாபத்தினிக்குச் சமைத்த கடவுள் படிமத்தை மெய் நூற் கல்வித்திறன் மிக்க அந்தணர்களைக் கொண்டு நீர்ப்படுத்தும் பகுதியின்பாற்பட்ட முறைமையோடே தெய்வத் தன்மைமிக்க அக் கங்கையாற்றிலேயே நீப்படுத்துதலாகிய மக்கலச் சடங்கினைச் செய்து முடித்துப் பின்னர்; மன் பெருங்கோயிலும் மணிமண்டபங்களும் பொன்புனை அரங்கமும் புனைபூம் பந்தரும்-மன்னன் கொலுவீற்றிருத்தற்குரிய பெரிய அத்தாணி மண்டபமும் அழகிய பிறநண்டபங்களும் பொன்னால் அழகு செய்யப்பட்ட கலை அரங்கங்களும் அழகு செய்யப்பட்ட பூங்கொடிப் பந்தர்களும்; உரிமைப் பள்ளியும் விரிபூஞ்சோலையும் திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும்-அரசர்குரிய துயில்கொள்ளும் பள்ளி யாரையும் அவர் விளையாடுதற்குரிய பரந்த பூம்பொழிலும் நீராடுதற்குரிய தாமரை மலரை உடைய நீர்நிலையும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தற்குரிய மன்றமும்; பேர்இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்-பெரும்புகழ் பெற்ற மன்னர் தங்கியிருத்தற்கு வேண்டுவனவாகிய பிறவும்; ஆரிய மன்னர் அழகுஉற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை ஆங்கண்-தன்பால் நட்புரிமை உடைய ஏனைய ஆரிய மன்னர்கள் ஒருங்கு குழுமித் தன் பொருட்டாக அழகுமிகும்படி அமைத்து வைத்துள்ள தெளிந்த நீரை உடைய அக் கங்கையாற்றினது தென்கரையாகிய அவ்விடத்தே; வெள்ளிடைப்பாடி வேந்தன் புக்கு-ஒரு வெட்டவெளியின் கண்ணதாகிய படவீட்டின்கண்ணே அச் சேரன் செங்குட்டுவன் புகுந்தருளி, என்க.
(விளக்கம்) நீர்ப்படை பாற்படு மரபின் செய்து எனக் கூட்டுக. நூற்றிறன் மாக்கள் என்றது சடங்கறிந்த அந்தணரை. பெருங்கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை. மணிமண்டபங்கள் என்றது அரசர்க்கு வேண்டிய பிற மண்டபங்களை. அரங்கம் என்றது இசை இயல் முதலிய கலைமன்றங்களை. உரிமைப்பள்ளி என்றது அரசன் புறப் பெண்டிர் பணிசெய்யுமாறு துயிலும் பள்ளி அறையை. போர்மேற் சென்ற அரசர்க்குப் புறப்பெண்டிர் பணிசெய்தலை முல்லைப் பாட்டில் காண்க, வரிகாண் அரங்கம்-கூத்தாடல் காணும் இடம். ஆரிய மன்னர் செங்குட்டுவனோடு கேண்மை ஆரிய மன்னர்கள் வெள்ளிடைப்பாடி-வெட்டவெளியிலே கட்டி அமைத்த படவீடுகள் (கூடாரங்கள்)
செங்குட்டுவன் போரில் விழுப்புண் பட்டு மடிந்த மறவர் மைந்தர்க்குப் பரிசில் நல்குதல்
25-34: நீணில.......மைந்தர்
(இதன் பொருள்) நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து வானவ மகளிரின் வதுவை சூட்டயர்ந்தோர்-நெடிய நில உலகத்தை ஆளுகின்ற பகை மன்னருடைய நெஞ்சின்கண் செருக்கினை யொழித்து அப் பகைவருடைய படைக்கலன்களால் விழுப்புண் பட்டு உயிர் நீத்து வீரமறவர்க்குரிய துறக்கமெய்தி ஆங்கு வானவர் மகளிரால் மணமாலை சூட்டப்பெற்ற மறவரும்; உலையா வெம்சமம் ஊர்ந்து அமர் உழக்கித் தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர்-புறங்கொடாத வெவ்விய பகைவருடைய போர்க் களத்தின்கண்ணே தமியராய் முன்னேறிச்சென்று தம் போராற்றலாலே பகைவரைப் பெரிதும் கலக்கி அப் பகைவருடைய வாளேறுண்டு தம் தலையும் தோளும் துணியுண்டு அவை விலைபெறும்படி களத்திலே மாண்டு கிடந்த மறவரும்; நாள் விலைக் கிளையுள் நல் அமர் அழுவத்து வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்- தமது வாழ்நாளைப் புகழுக்கு விலையாகக் கொடுக்கின்ற தம்மை ஒத்த மறக்குடிப் பிறந்த தம் உறவினராகிய மறவர்களோடே கூடிப் பெரிய போர்க்களத்தினூடே புகுந்து வாட்போரை வெற்றியோடே செய்து முடித்து வீரத்தோடே புறக்கிடாது நின்று உயிர்துறந்த மறவோரும்; குழி கண் பேய்மகள் குரவையில் தொடுத்து வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்-உள்குழிந்த கண்ணையுடைய பேய்மகளிர் மகிழ்ந்து ஆடுகின்ற குரவைக் கூத்தின்கண் தாம் பாடுகின்ற பாட்டிற்குப் பொருளாகும்படி தம் புகழைப் புனைந்து தம் கால்வழித் தோன்றல்களையும் வாழ்த்தும்படி கைவாளினோடு போர்க்களத்திலே மடிந்தொழிந்த மறவர்களும்; கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்-தம் சுற்றத்தாரோடு ஒளிர்கின்ற அணிகலன் அணிந்த உடம்பினோடு வளையலணிந்த தம் காதலிமாரும் இறந்தொழியும்படி போர்க்களத்திலே மடிந்த மறவருடைய மைந்தரும் என்க.
(விளக்கம்) மன்னர்-பகை மன்னர். புகல்-செருக்கு. போர்க்களத்திலே புறமிடாது நின்று பட்ட மறவரை வானவர் மகளிர் பெரிதும் காதலித்து மணமாலை சூட்டி வரவேற்பர் என்பதுபற்றி இறந்துபட்ட மறவரை வானவ மகளிரின்..........அயர்ந்தோர் என்றளர். உலையா-புறங்கொடாத. ஊர்ந்தமர் உழக்குதல்-அமரில் முன்னேறிச் சென்று பகைவரைக் கலக்குதல். புறக்கிடாமையால் மறத்தொடு முடித்தோர் என்றார், தாம் மடிந்தமை கேட்டால் அப்பொழுதே தம் கிளைஞரும் காதலிமாரும் மடிவர் என்பது அறிந்திருந்தும் அவர் பொருட்டுப் புறக்கிடாமல் வீரத்தின் பொருட்டு மடிந்த மறவருடைய மைந்தர் என்றவாறு.
இதுவுமது
35-47: மலைத்து............இருக்கையின்
(இதன் பொருள்) மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர்-போர்க்களத்தின்கண் தம்மோடு எதிர்த்து முன்னேறிவந்த பகை மறவர் தமது வாளோடு மடிந்து வீழும்படி போர் செய்து தூசிப்படையிலேயே வாகை மாலையைத் தம் முடியில் அணிந்துகொண்ட மறவரும்; திண்தேர்க் கொடுஞ்சியொடு தேரோர்வீழப் புண்தோய் குருதியில் பொலிந்த மைந்தர்-திண்ணிய தமது தேரினது இருக்கையின் கண் இருந்தவாறே பகைவராகிய தேர்மறவர் தமது வாளேறு பட்டுத் தலை துணிப்புண்டு வீழ்தலாலே அம் மறவருடைய புண்ணினின்றும் குதித்த குருதி படுதலாலே பொலிவுற்றுத் திகழ்ந்த மறவரும்; மாற்று அருஞ் சிறப்பின் மணிமுடிக்கருந் தலைக் கூற்றுக் கண்ணோட அரிந்து களங்கொண்டோர்-விலையிடுதற்கரிய சிறப்பினை உடைய மணிகள் அழுத்தப்பெற்ற முடிக்கலன அணிந்த மாற்றரசருடைய கரிய தலையைக் கையாற் பற்றிக் கூற்றுவனும் இரங்கும்படி தம் கைவாளால் அரிந்து போர்களத்தின்கண் தம் கையிற் கொண்டுவந்த மறவரும் நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம் பெறவந்த போர்வாள் மறவர்தாம் வருக என-பகைவர் படைக்கலன்பட்டு நிறம் சிதைந்தொழிந்த கவசத்தினூடே மார்பிற்பட்ட புண் மிகவும் ஆழ்ந்து தம் முதுகிலே தோன்றும்படி போர் செய்து மீண்டு வந்த போர்வாள் ஏந்திய மறவரும் ஆகிய இவர் தாம் வருவாராக என்று அழைத்து; வாகைப் பொலந்தோடு-அவர் பெற்ற வெற்றிக்குப் பரிசிலாகப் பொன்னால் செய்யப்பட்ட வாகைப் பூமாலைகளை; பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து-சிறப்பு நாளிலே பரிசில் வழங்குதற்கென வரையறை செய்தபொழுது கழிந்த பின்னரும் நெடும்பொழுது இருந்து வழங்கி; தோடு ஆர்போந்தை இதழ் நிரம்பிய பனம்பூ மாலையைத் தும்பைப்பூ மாலையோடு ஒருசேர அணிந்து புலவர் பாடுதற்கு ஏற்ற போர்த்துறையின் வினைகளைச் செய்து முடித்த வெற்றியை உடைய அச் செங்குட்டுவன் வீற்றிருந்த ஆடுகொள் மார்போடு அரசு விளக்கு இருக்கையின்-வெற்றிகொண்டு பொலிந்த மார்பினோடு தனது அரசுரிமையும் இனிது விளங்காநின்ற தனது கொலுவிருங்கைப் பொழுதில் என்க.
(விளக்கம்) தலைத்தாள் வாகை-தூசிப்படையில் நின்றே பகை வரைப் புறங்கண்டு வாø சூடி வருதல். கொடுஞ்சி-தாமரைப்பூ வடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டின் நடுவண் நிறுத்திய இருக்கை . தேர் மறவர் இதன்கண் இருத்தல் மரபு. தேரோர்-தேர் மறவர். மணிமுடிக் கருந்தலை என்றது அரசர் தலை என்றற்கு. கூற்றும் கண்ணோட-எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்காது. தலையை அரிந்து களத்தில் வெற்றி கொண்டோர் என்க. நிறம் இரண்டனுள் முன்னது வண்ணம்; பின்னது மார்பு. பொலம்-பொன். அமயம் பொழுது. புலவர் பாடும் போர்த்துறை என்க. ஆடு-வெற்றி.
மாடலன் வருகை
48-55: மாடல.....ஈங்கென
(இதன் பொருள்) மாடல மறையோன் வந்து தோன்றி-மாடலன் என்னும் பெயரை உடைய அந்தணன் அச் செங்குட்டுவன் முன்னர் வந்து தோன்றி; வாழ்க எம்கோ-நீடூழி வாழ்வானாக எங்கள் மன்னர் பெருமான் என் வாழ்த்தி அரசனை நோக்கிக் கூறுபவன்; முதுநீர் ஞாலம் அடிப்படுத்தாண்ட அரசே-கடல்சூழ்ந்த நில உலகத்தை முழுவதும் வென்று அடிப்படுத்திக்கொண்டு அருளாட்சி செய்த அரசனே ஈதொன்று கேள்; மாதவி மடந்தை கானற்பாணி கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது-மாதவி என்னும் இளமையுடைய நாடகக் கணிகையானவள் கடற்கரையினிடத்துப் பண்டொருநாள் பாடிய கானல்வரிப் பாட்டானது இதோ இங்கிருக்கின்ற கனகனும் விசயனுமாகிய இவ்வரசருடைய முடிகணிந்த தலையை நேரித்தது நினைக்கும்பொழுது எனக்கு வியப்பூட்டுவதொன்றாய் இருந்தது, நீ நீடூழி வாழ்க என்று கூறா நிற்ப; அது கேட்ட செங்குட்டுவன் மாடலனை நோக்கி நான் மறையாள் பகைப்புலத்து அரசர்பால் அறியாநகைத்திறம் ஈங்குக் கூறினை-நான்கு மறைகளையும் கற்றுணர்ந்த அந்தண, நீ நம் பகை நாட்டரசர் பலரும் அறிந்திலாத நகைச்சுவை உடைய தொரு செய்தியை இவ்விடத்தே கூறினாய்; ஈங்கு நீ கூறிய உரைப்பொருள் யாது என-இவ்விடத்தே நீ சொன்ன அச் சொற்றொடரின் பொருள் தான் என்னையோ நீயே கூறுவாயாக என்று அம் மன்னவன் கூற என்க.
(விளக்கம்) கானற்பாணி-கடற்கரையிலிருந்து பாடிய பாட்டு முதுநீர்-கடல். ஒரு மடந்தை பாடிய கானல்வரிப் பாட்டு அரசருடைய முடித்தலையை நெரித்தது, என்ற மாடலன் கூற்று பேதைமையுடையது போல் தோன்றி நகைச்சுவை யுடைத்தாதலுணர்க. இது பிறன் பேதைமை நிலைக்களனாகத் தோன்றிய நகை என்க.
மாடலன் விடை
56-65: மாடல.......ஏறினன்
(இதன் பொருள்) மாடல மறையோன் மன்னவர்க்கு உரைக்கும் அது கேட்ட மாடலன் என்னும் அந்தணன் அச் செங்குட்டுவனுக்குச் சொல்வான்; குடவர் கோவே-சேர நாட்டார் தம்முடைய செங்கோல் வேந்தனே; கானல் அம்தண் துறை கடல் விளையாட்டினுள் மாதவி மடந்தை வரிநவில் பாணியொடு-சோழ நாட்டுக் கடற்கரைச் சோலையையுடைய அழகிய குளிர்ந்த துறையின்கண் நிகழ்ந்த கடல் விளையாட்டின்கண் மாதவி என்னும் நாடகக் கணிகை இசைப்பாட்டாகப் பாடிய கானல்வரிப் பாட்டுக் காரணமாக ; ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ-நிகழ்ந்த ஊடற்பொழுதின்கண் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது பயனளிப்பதாக அவன் உள்ளத்தே எண்ணமாகிய உருவத்தைக்கொண்டு எழுதலாலே; கூடாது பிரிந்து-மீண்டும் அம் மாதவியுடன் கூடாமல் அவளைத் துவரத்துறந்து; குலக்கொடி தன்னுடன் மாடமூதூர் மதுரை புக்கு-உயர்ந்த குலப் பிறப்பாட்டியாகிய தன் மனைவியாகிய கண்ணகியுடன் மாடமாளிகை களையுடைய பழைய நகரமாகிய மதுரையின்கண் வந்து புகுந்து; ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்த-அந் நகரத்தின்கண் இலை விரவிப் புனைந்த வேப்பந்தாரை அணிந்த பாண்டியனாகிய நெடுஞ்செழியன் அழகிய வானுலகத்தே புகும்படி; கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-கொலைக்களத்திலே இறந்தொழிந் கோவலன் என்னும் வணிகனுடைய வாழ்க்கைத் துணைவியாகிய அக் கண்ணகி; நின்நாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்-நினக்குரிய சேர நாட்டிலே வந்து புகுந்து வானவர் எதிர்கொள வான் உலகின்கண் ஏறியதன்றியும் தான் தெய்வமாய் வடநாட்டை ஆளுகின்ற கனகனும் விசயனுமாகிய இம் மன்னர்களுடைய அழகிய முடியின்மீதும் கல்லின்கண் திருவுருவம்கொண்டு ஏறினள் அல்லளோ இதுவே யான் குறித்துரைத்த பொருள், என்றான் என்க.
(விளக்கம்) கடல் விளையாட்டு என்றது பூம்புகார் இந்திரவிழாவினிறுதியில் நிகழ்ந்த கடல் விளையாட்டை, வரிநவில்பாணி-வரிப்பாட்டாகப் பாடிய பாட்டு, வடவாரிய மன்னர் அறியாமைப்பொருட்டு நெடுஞ்செழியன் செய்தியைப் பெரிதும் மறைத்து இலைத்தார் வேர்தன் எழில்வான் எய்த என இவ்வேந்தணன் உரைக்கும் நலமுணர்க.
மாடலன் தன் வரலாறு செங்குட்டுவனுக்கு மொழிதல்
66-71: இன்னும்........சென்றேன்
(இதன் பொருள்) இகல் வேல் தடக்கை மன்னர் கோவே இன்னும் யான் வரும் காரணம் கேட்டு அருள்-வெற்றி வேலேந்திய பெரிய கையையுடைய வேந்தர் வேந்தே இன்னும் யான் இங்கு வருவதற்கு அமைந்த காரணம் வியத்தகும் ஒன்றேயாம், ஆதலால் அதனையும் கூறுவேன் திருச்செவி ஏற்றருளுக; ஊழ்வினைப் பயன்கொல்-அக் கோவலனுக்குப்போல எனக்கும் வந்தெய்திய பழவினையின் பயனேபோலும்! யானும்; மாமுனி பொதியின் மலை வலங்கொண்டு குமரியம் பெருந்துறையாடி மீள்வேன் சிறந்த-அகத்திய முனிவன் உறைகின்ற பொதிய மலையை வலம் வந்து வணங்கிக் குமரி என்கின்ற அழகிய பெரிய கடல்துறையிலே நீராடி மீண்டுவருவேன் எமது நாடுநோக்கிச் செல்லாமல்; உரைசால் சிறப்பின் வாள்வாய் தென்னவன் மதுரையிற் சென்றேன்-புகழ்மிக்க சிறப்பினையுடைய வென்றி வாய்த்த வாளையுடைய பாண்டிய மன்னனுடைய தலைநகரமாகிய மதுரையின்கண் சென்றேன், என்றான் என்க.
(விளக்கம்) குமரியில் நீராடி மீளுகின்ற நான் நேரே என்னூருக்கே சென்றிருக்கலாமல்லவோ, யான் செய்த ஊழ்வினை காரணமாக அங்ஙனம் செல்லாமல் மதுரைக்குச் சென்றேன் என இம்மறையோன் தன்னையே நொந்துகொள்கின்றான்.
மதுரை சென்றதனால் தனக்கும் தீவினை பல வந்துற்றமை கருதிக் கோவலனுக்கு ஊழ்வினை வந்தமையாலே மதுரைக்கு வந்தான் என்று கூறியவன் அந்நினைவு காரணமாக ஊழ்வினைப் பயன் கொல்யானும் மதுரையிற் சென்றேன் என்கின்றான்.
இதுவுமது
72-78: வலம்படு...........புக்கதும்
(இதன் பொருள்) வலம்படு தானை மன்னவன் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்-வெற்றியுடைய படையையுடைய பாண்டிய மன்னனைத் தனது ஒற்றைச் சிலம்பினைச் சான்றுகாட்டி வழக்குரைத்து வெற்றிபெற்றாள் கண்ணகி என்னும் செய்தி கேட்டபொழுதே; தாது எரு மன்றத்து மாதரி எழுந்து கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்-பூந்தாதுகளே எருவாகிக் கிடக்கும் ஊர் மன்றத்தின்கண் இருந்த மாதிரி என்னும் இடைக்குல மடந்தை துன்பம் பொறாளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து அந்தோ என் மகன் கோவலன் ஒரு சிறிதும் தீது செய்திலன் என்பது யான் நன்கறிவேன். நம் அரசன் மகனே செங்கோன் முறைமையின் தவறினான் என்பது தேற்றம்; இடைக்குல மாக்காள் குடையும் கோலும் பிழைத்த-தீதறியாத இடைக்குலத்தில் பிறந்த மக்களாகிய ஆயர்களே பண்டொரு காலத்தும் பிழை செய்தறியாத நம் மன்னவனுடைய வெண்கொற்றக் குடையும் வெம்மை செய்தது, செங்கோலும் வளைந்தொழிந்தது அவையேயன்றி; ஓ அடைக்கலமிழந்தேன் என-அந்தோ அடிச்சியும் பேணுதற்குரிய பெரியோர் தந்த அடைக்கலப் பொருளை இழந்துவிட்டேனே இனி யான் உயிர் வாழ்கில்லேன் என்று கதறி; இடையிருள் யாமத்து எரி அகம் புக்கதும்-அற்றைநாள் நள்ளிரவிலேயே தீயினுட் புகுந்து நன்றந்ததும்; என்க.
(விளக்கம்) பண்டொரு காலத்தும் தோல்வி கண்டறியாத மன்னவன் இன்று தோற்றனன் என்று இரங்குவான் வலம்படுதானை மன்னவன் என்றாள். கண்ணகியின் கற்பின் திறத்தை வியப்பாள் அத்தகைய மன்னனைக் சேயிழை சிலம்பின் வென்றாள் என்றான். தாதெரு மன்றம் என்பது குரவைக் கூத்து நிகழ்ந்த இடத்தை பேணுதற்குரிய அடைக்கலத்தைப் பேணாது இழந்தேன் ஆதலின் கெடுக என் ஆயுள் என மாதிரி எரியகம் புக்கதும் என்க.
இதுவுமது
79-83: தவந்தரு...........பெயர்ந்தேன்
(இதன் பொருள்) தவந்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்-இங்ஙனமே தவத்தின் பயனை எல்லாம் தனது ஒழுக்கத்தினாலே காட்டித் தருகின்ற சிறப்பினை உடைய கவுந்தியடிகளாருக்கு, (கண்ணகி கோவலன் நெடுஞ்செழியன் மதுரைமாநகர் ஆகிய இவர்க்கெல்லாம் நிகழ்ந்தமை தெரிந்தபொழுது கண்ணகிக்கும் கோவலனுக்கும் உற்ற துன்பம் காரணமாக) எழுந்த வெகுளியை; நிவந்து ஓங்கு செங்கோல் நீள்நில வேந்தன் போகு உயிர் தாங்க-மிகவும் உயர்ந்து திகழ்கின்ற செங்கோன் முறைமையினையுடைய நீண்ட பாண்டிய நாட்டினை ஆளுகின்ற நெடுஞ்செழியனுடலினின்றும் தானே புறப்பட்டுப்போன அவனது உயிரின் பெருமை தணித்துவிட்டமையாலே தணிந்த; அப் பொறைசால் ஆட்டி என்னோடு இவர் வினை உருத்ததோ என-அந்தப் பொறுமை என்னும் சால்பினை ஆளுதலையுடைய கவுந்தியடிகளார் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இக் கண்ணகி கோவலருடைய பழவினை உருக்கொண்டுவந்து ஊட்டிற்றுப்போலும், ஆகவே அவர் துயரத்திற்கு யானும் ஒரு காரணமாகின்றேன் என்று வருந்தி; உண்ணத நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்-உண்ணத நோன்போடு இருந்து தம்முடம்பினின்றும் உயிரை அகற்றியதும்; பொன் தேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு உற்றதுமெல்லாம்-பொன்னாலியன்ற தேரை உடைய பாண்டியனுடைய மதுரை மாநகரத்தைத் தீயுண்டமையும் பிறவும் ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும்; ஒழிவு இன்று உணர்ந்து ஆங்கு என்பதிப் பெயர்ந்தேன்-ஒன்றும் ஒழிவில்லாமல் தெரிந்துகொண்டு பின்னர் யான் என் ஊருக்குச் சென்றேன் என்றான் என்க.
(விளக்கம்) கவுந்தியடிகளாரின் சினம் பாண்டியன் தன்தவற்றினை உணர்ந்தபொழுதே உயிர் நீத்தமை கேட்டு அவன்பால் இரக்கமாக மாறி விட்டமையின் அவனது உயிர் தாங்க என்றார். ஆயினும் கோவலனுடைய துன்பத்திற்குத் தானும் ஒரு கருவியானமையின் அத் துன்பத்திற்குரிய தீவினையென்று தன்பாலும் இருத்தல் வேண்டும் என்று கருதி அத்தீவினைக்குக் கழுவாயாக அடிகளாரும் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார் என்றுணர்க. என்னை? நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்(குறள்-320) என்பது திறவோர் காட்சி ஆதலின் என்க.
இதுவுமது
86-97: என்துயர்...........விடவும்
(இதன் பொருள்) என் துயர் போற்றி-வேந்தர் பெருமானே! மதுரையின்கண் என் ஆருயிர் நண்பனாகிய கோவலன் முதலியோருக்கு நிகழ்ந்த துன்பம் பற்றி என் நெஞ்சில் தோன்றிய துன்பத்தை யான் ஒருவாறு தணித்துக்கொண்டேனாய் செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க-யான் சோழனுடைய பழைய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் சிறந்தவராகிய அவருடைய இருமுது குரவரும் ஏனையோருமாகிய உறவினர்களுக்கும் கூறாநிற்ப; கோவலன் தாதை மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு-இவ்வாற்றால் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவான் என்னும் வணிகர் பெருமகன், மகனாகிய கோவலனுக்கு எய்திய துன்பத்தையும் மருகியாகிய கண்ணகிக்கு எய்திய துன்பத்தையும் இவர்கள் வாயிலாய்ச் செங்கோன்மை தவறாத பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த அழிவினையும் கேள்வியுற்று; கொடுந்துயர் எய்தி-ஆற்றொணாத பெருந் துன்பத்தை அடைந்து; வான் பொருள் மாபெருந்தானமா ஈத்து ஆங்கு-தான் அறநெறி நின்று ஈட்டிய தனது சிறந்த பொருள் முழுவதனையும் உத்தம தானமாக வழங்கிவிட்டு அப்பொழுதே இல்லாம் துறந்துபோய்; இந்திர விகாரம் ஏழுடன் புக்கு-அந் நகரத்திலுள்ள இந்திரனால் அமைக்கப்பட்ட ஏழு அரங்குகளை உடைய தவப் பள்ளியில் புகுந்து; ஆங்கு அந்தர சாரிகள் பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று துறந்தோர் ஆறு ஐம்பதின்மர் தம்முன்-அப் பள்ளியின்கண் விசும்பின்கண் திரிகின்ற வித்தை கைவந்தவரும் தாம் பிறந்துள்ள இவ் வுடம்பிலிருந்தபடியே இனிப் பிறப்பு அற்றுப்போம்படி முயற்சி செய்து இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தவருமாகிய முந்நூற்றுவர் முனிவர்களுடைய முன்னிலையிலே தானும் துறவறத்தை மேற் கொள்ளா நிற்பவும்; துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாள் இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும்-அங்ஙனம் துறந்த மாசாத்துவான் மனைவியாகிய கோவலன் தாயும் தன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய் எல்லையற்ற துன்பத்தை எய்தி வருந்தி உடம்பினை நீத்து இறந்தொழியவும் என்க.
(விளக்கம்) செம்பியன்-சோழன். மூதூர்-காவிரிப்பூம்பட்டினம் சிறந்தோர்-நெருங்கிய சுற்றத்தார்-செங்கோல் வேந்தன் என்றது நெடுஞ்செழியனை. இந்திர விகாரம்-இந்திரனால் அமைக்கப்பெற்ற அரங்குகள். துறவி-துறவறம். இறந்த துயர்-எல்லைகடந்த துன்பம்.
இதுவுமது
98-102: கண்ணகி..............விடவும்
(இதன் பொருள்) கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணல் அம் பெருந்தவத்து ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து அறங்கொள்ளவும்-இங்ஙனமே கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன்றானும் துறவோர்க்குரிய கோலம் பூண்டு பெருமை மிக்க அழகிய பெரிய தவத்தையுடைய ஆசீவகர் பள்ளியுட்புகுந்து அவர் முன்னிலையில் தன் பொருளை எல்லாம் புண்ணியம் பயக்கும் தானமாக வழங்கி அவர்தம் அறத்தை மேற்கொள்ளா நிற்கவும்; தானம் புரிந்தோன் தன்மனைக்கிழத்தி நாள் விடூஉ நல்லுயிர் நீத்து-அவ்வாறு புண்ணியதானம் புரிந்தவனாகிய மாநாய்கனுடைய மனைவி தானும் இத் துயரம் பொறாளாய்த் தானே வாழ்நாளை விடுகின்ற தனது நல்லுயிரைத் துறந்து இறந்துபடா நிற்கவும் என்க.
(விளக்கம்) கண்ணகி தாதை-மாநாய்கன். கடவுளர் கோலம்-துறவோர் கோலம். ஆசீவகர்-சமண மதத்தில் ஒரு வகுப்பினர் இவர்க்குத் தெய்வம் மறகலி எனவும் நூல் நவகதிர் எனவும் கூறுவர். இம் மதத்தின் இயல்பை மணிமேகலை இருபத்தேழாம் காதையினும் நீலகேசியில் ஆசீவக வாதச்சருக்கத்தினும் (13) விரிவாகக் காணலாம். தானம் புரிந்தோன் மனைக்கிழத்தி என்றது கண்ணகியின் தாயை. துன்ப மிகுதியால் அவள் உயிர் அவள் முயற்சி இன்றியே புறப்படுதலின் நான் விடூஉ நல்லுயிர் என்றும் அதற்கு அவள் பெரிதும் உடன்படுதலின் நீத்து எனவும் ஓதினர்.
இதுவுமது
103-111: மற்றது......ஈங்கென
(இதன் பொருள்) மற்று அது கேட்டு மாதவி மடந்தை-கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த அச் செய்தியைக் கேள்வியுற்று மாதவியாகிய நாடக மடந்தை தானும்; நல் தாய் தனக்கு நல்திறம் படர்கேன்-தன்னை ஈன்ற தாயாகிய சித்திராபதிக்கு அன்னாய் யான் இனி நன்னெறியிலே செல்லத் தொடங்கி விட்டேன் அஃது எற்றுக்கெனின்; மணிமேகலையை வான் துயர் உறுக்குங் கணிகையர் கோலங் காணாது ஒழிக என-என் மகள் மணிமேகலையை மாபெரும் துன்பம் தருகின்ற பொல்லாத இந்த நாடகக் கணிகையர் கோலத்தின்கண் வைத்துக் காணாதொழியும் பொருட்டேயாம் என்றறிவுறுத்து; கோதை தாமம் குழலொடு களைந்து-தான் அணிந்திருந்த கோதையாகிய மலர் மாலையினைக் கூந்தலோடே ஒருசேரக் கலைந்துவிட்டு; போதித்தானம் புரிந்து; அறம் கொள்ளவும்-துறவறத்தை மேற்கொள்ளா நிற்பவும்; என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்-வேந்தர் பெருமானே! கோவலன் கண்ணகிக்கு நிகழ்ந்த இச் செய்தியை என் வாய்மொழி வாயிலாகக் கேட்டவர்களில் இறந்தொழிந்தோரும் பலர் இருத்தலால் அவர் இறப்பிற்குக் காரணம் என் வாய்மொழியே ஆதல் பற்றி அத் தீவினைக்கு யானும் ஒரு காரணமாகி அதனால் எனக்கு வந்தெய்திய தீவினையைப் போக்குதற் பொருட்டு; நல்நீர் கங்கை ஆடப் போந்தேன் புண்ணிய தீர்த்தமாகிய இக் கங்கைப் பேரியாற்றின்கண் நீராடுதற் பொருட்டு இப்பொழுது யான் இங்கு வந்துள்ளேன்; மன்னர் கோவே ஈங்கு வாழ்க என-வேந்தர் வேந்தே! இந் நில உலகத்தின்கண் நீடூழி வாழ்வாயாக! என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.
(விளக்கம்) நற்றாய்-மாதவியை ஈன்ற தாய்; சித்திராபதி நற்றிறம்-நன்னெறி; அஃதாவது துறவறம். கணிகையர் கோலம் தனக்கும் பெருந்துன்பம் விளைத்தமையால் இக் கோலம் என்னோடு முடிக. மணிமேகலைக்கு இவ் வாழ்க்கை வேண்டா என்னும் கருத்தால் இங்ஙனம் கூறினள். மணிமேகலை அருந்தவப்படுதல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் என மணிமேகலையினும் (2:55-7) மாதவி ஓதுதல் உணர்க. குழல்-கூர்தல். மாசாத்துவான் மனைவி முதலியோர் இறப்பிற்குத் தான் கூறிய செய்தியே காரணமாதல் பற்றி இத் தீவினையில் தனக்கும் பங்குண்டு என்று இம் மாடல மறையோன் கூறுகின்றான். எனவே இவன் தீவினைக்குப் பெரிதும் அஞ்சுதல் அறிக.
செங்குட்டுவன் மாடலனை வினாதல்
112-115: தோடார்................உரையென
(இதன் பொருள்) தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை-இதழ் நிரம்பிய பனம்பூவைத் தும்பைப்பூவோடு அணிந்த வஞ்சி மாநகரத்துச் சேரர் குலத் தோன்றலாகிய பெருந்தகைமையையுடைய அச் செங்குட்டுவன் அம் மறையோன் வாயிலாகச் சோழ நாட்டுச் செய்தி கேட்டவன் பாண்டிய நாட்டுச் செய்தியையும் கேட்க விரும்பி நான்மறையாளனே மதுரையின்கண்; மன்னவன் இறந்தபின் வளம் கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என-பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சிய பின்னர் வளம் பொருந்திய சிறப்பினையுடைய அப் பாண்டியனுடைய நாட்டின்கண் நிகழ்ந்த செய்தியை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கேட்ப என்க.
(விளக்கம்) வாடாவஞ்சி-வஞ்சி நகரத்திற்கு வெளிப்படை வானவர்-சேரர். மன்னவன் என்றது நெடுஞ்செழியனை நாடு ஆகுபெயர். நாடு செய்தது உரை என்றது நாட்டின்கண் நிகழ்ந்தவற்றைக் கூறுக என்றவாறு.
மாடல மறையோன் செங்குட்டுவனுக்குப் பாண்டியனாட்டுச் செய்தி கூறுதல்
116-126: நீடு வாழியரோ............கேட்டருள்
(இதன் பொருள்) நீள் நில வேந்து நீடு வாழி அரோ என-அது கேட்டு நெடிய இந் நிலவுலகத்தை ஆட்சி செய்கின்ற வேந்தர் பெருமான் நீடூழி வாழ்க என்று அம் மன்னனை வாழ்த்திய; மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்-மாடலன் என்னும் அந்தணன் செங்குட்டுவனுக்குச் சொல்லுவான்; நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்-பெருமானே! நின் மைத்துனனாகிய சோழன் பெருங்கிள்ளியொடு பொருந்தாமையினாலே தம்முள் ஒத்த ஒன்பது மன்னர்களும்; இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்-அப் பெருங்கிள்ளியின் கீழ்த் தரம் இளவரசராக இருத்தலைப் பொறாதவராய் அக் கிள்ளிவளவன் ஏவலையும் கேளாதவராய் நாட்டினுள் கலகம் விளைத்து, அவனுடைய வளம் பொருந்திய நாட்டினை அழித்தலையே தமக்குப் பெருமையென்று கொள்பவர் ஆதலாலே; ஒன்பது குடையும் ஒரு பகலொழித்து அவன் பொன்புனை திகிரி ஒரு வழிப்படுத்தோய்-அப் பகை மன்னர்களுடைய ஒன்பது குடையையும் ஒரு பகற்பொழுதிலேயே அழித்து நின் மைத்துனனாகிய அக் கிள்ளிவளவனுடைய பொன்னால் அழகு செய்யப்பட்ட ஆமைச்சக்கரத்தை ஒரு நெறியுருட்டச் செய்து வாழ்வித்தருளிய வள்ளலே; பழையன் காக்கும் குழை பயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்-பழையன் என்னும் அரசனால் பாதுகாக்கப்பட்டிருந்த தளிர் மிகுந்த நெடிய கொம்புகளையுடைய அவனது காவல் மரமாகிய வேம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய உயர்ந்த வாள் வெற்றியை உடைய பனம்பூ மாலையைப் புனைந்த மலைநாட்டார் கோமானே கேட்டருளுக என்றான் என்க.
(விளக்கம்) மைத்துன வளவன்கிள்ளி என்பவனை, பெருங்கிள்ளி எனவும் பெருநற்கிள்ளி எனவும் வரலாற்று நூலாசிரியர் கூறுவர் பொருந்தாமையால் ஒத்த பண்பினர் என்க. இவ்வொன்பதின்மரும் இளவரசராயிருத்தலைப் பொறார் ஏவல் கேளார், எனவே இவர்கள் கிள்ளிவளவனுக்கு நெருங்கிய தாய்த்தார் என்பது பெற்றாம். இவர் தாயம் வேண்டிக் கலகமுண்டாகி நாட்டின் வளத்தை அழித்தனர் என்பதும், செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்கு மைத்துனனாதலின் தானே நேரிற் சென்று அவ்வொன்பதின்மரையும் அழித்து அக் கிள்ளிவளவனுக்கு அரசுரிமையை நிலைநாட்டினன் என்பதும் பாண்டிய மரபினனாகிய பழையன் என்பானுடைய காவல் மரத்தைச் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினன் என்பதுமாகிய பழைய வரலாற்றுண்மைகள் இம் மாடல மறையோன் மொழியால் பெற்றாம்.
இதுவுமது
127-140: கொற்கை......பெரிதென
(இதன் பொருள்) பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர்-பொன்னால் பணிசெய்யும் பொற்கொல்லன் ஓராயிரவர் நம்முள் வைத்து ஒரு பொற்கொல்லன் தீமை செய்தமையால் நம் பழங்குடி பழிபூண்டது என்று நாணி; ஒரு முலை குறைத்த திருமாபத்தினிக்கு-ஒரு முலையைத் திருகி எறிந்த கண்ணகியாகிய அத்திருமா பத்தினித் தெய்வத்திற்கு; ஒரு பகல் எல்லை உயிர்பலி ஊட்டி-ஒரு பகற் பொழுதிலேயே தம் தலையைத் தாமே அரிந்து உயிர்ப்பலி ஊட்ட; உரை, செல வெறுத்த மதுரை மூதூர்-இப்பொற் கொல்லருடைய செயலால் உண்டான புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரையாகிய அப் பேரூர்; அரசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை-அரசனை இழந்து சுழலுகின்ற அத் துன்பப் பொழுதிலே; கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன்-கொற்கைப் பட்டினத்தில் இருந்து செங்கோலோச்சிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரையுடைய பாண்டியன்; தென்புல மருங்கின் தீது தீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறை-தென்னாட்டின்கண் குற்றம் தீர்ந்த சிறப்பையுடைய மக்களினத்தைக் காக்கும் முறைமை நெடுஞ்செழியனுக்குப் பின்னர்த் தனக்கே உரித்தாதலின்; முதற்கட்டிலின்மேல்; நிரை மணி ஓர் ஏழ் புரவி பூண்ட ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை-நிரல்பட்ட அழகிய ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற ஒரு சிறந்த உருளையையும் கடவுள் தன்மையையும் உடைய தேரின் மேல்; காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என-தனக்குரிய பொழுதாகிய விடியற் காலத்திலே சிவந்த கதிர்களையுடைய ஞாயிறாகிய கடவுள் ஏறித் தோன்றினாற்போல்; மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்-மாலைப் பொழுதிலே தோன்றும் முறைமையினையுடைய திங்கள் குலத் தோன்றலாகிய அவ் வேந்தன் ஏறாநின்றனன்; ஊழிதோறு ஊழி உலகங்காத்து எங்கோ வாழ்க பெரிது வாழியர் என-ஊழிகள் பலவும் இந் நிலவுலகத்தைக் காவல் செய்து எங்கள் அரசர் பெருமான் வாழ்வானாக மிகவும் வாழ்வானாக என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.
(விளக்கம்) இதன்கண் வெற்றிவேற்செழியன் மதுரை மூதூர் அலம்வரும் அல்லற்காலைக் கட்டிலின் ஏறினன் என இயையும். பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர் ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலிப்யூட்டி உரை செலவெறுத்த மதுரை மூதூர் எனக் கொல்லரின் செயல் மதுரைக்கு அடைமொழியாக வந்தது. இவை வெற்றிவேற்செழியன் என்னும் எழுவாய்க்கும் முடிக்குஞ் சொல்லாகிய ஏறினன் என்பதற்கும் இடையே வருகின்ற மதுரைக்கு அடைமொழியாய் வந்தது. இக் கருத்தறியாதார் வெற்றி வேற்செழியன் அரியணை ஏறவந்தவன் ஏறுதற்கு முன்னர்க் குற்றம் சிறிதும் இல்லாத ஆயிரம் பொற்கொல்லர்களைப் பிடித்துக்கொணர்ந்து கண்ணகித் தெய்வத்திற்கு உயிர்ப்பலியாக வெட்டிக் கொன்று அரியணையில் ஏறினன் என்பர். இங்ஙனம் பொருள் கொண்டவரே இந்நூல் முகத்திலுள்ள உரை பெறு கட்டுரையின்கண்(1) அன்று தொட்டு.........துன்பமும் நீங்கியது என அவலம் சிறிதுமின்றி வரைவாராயினர். அடிகளாரே இங்ஙனம் கருதியிருப்பார் எனின் அவர் தாமும் குளிக்கப்போய்ச் சேரு பூசிக்கொண்டவரே என்பது தேற்றம். என்னை? ஒரு பொற்கொல்லன் செய்த ஒரு வஞ்சகச் செயலால் அந் நாடு பட்டபாட்டினை வெற்றிவேற்செழியன் அறிந்திலன் என்று யாரே சொல்லத் துணிவர்? ஒரு பொற்கொல்லன் செய்த குற்றத்திற்காகக் குற்றம் சிறுதுமில்லாத ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றவன் எத்துணை அறிவிலியாதல் வேண்டும்? ஈண்டு எம்முரையே அடிகளார் கருத்தாதல் வேண்டும். அஃது என்னையோ வெனின் தம் குடிப்பிறந்த ஒரு பொய்வினைக் கொல்லன் செய்த தீவினையால் அம் மதுரைக்கும் மன்னன் முதலியோருக்கும் எய்திய துன்பத்தையும் தமது பொற்கொல்லர் குடிக்கு எய்திய பழியையும் பொறாத மானப் பண்புமிக்க பொற்கொல்லர் எண்ணிறந்தோர் தம்மைத்தாமே உயிர்ப்பலியாகக் கண்ணகியை நினைந்து உயிர்நீத்தனர். இவ்வருஞ்செயல் பற்றியும் மதுரைக்குண்டான புதுப்புகழ் உலகெல்லாம் பரந்தது. அத்தகைய மதுரையின்கண் வெற்றிவேற்செழியன் காலைக்கதிரவன் தேர்மிசை ஏறுதல்போல அரியணை ஏறினன் என்பதேயாம் என்க.
காலக்கணிவன் செங்குட்டுவனுக்குக் கூறுவது
141-150: மறையோன்........ஏத்த
(இதன் பொருள்) மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்-இவ்வாறு நான்மறையாளனாகிய அம் மாடலன் கூறிய தமிழகத்துச் செய்தியை எல்லாம்; இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள்-வேந்தனாகிய செங்குட்டுவன் கூர்ந்து கேட்டுணந்து அப்படி வீட்டின்கண் இருந்த பொழுது; அகல்வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க பகல் செலமுதிர்ந்த படாகூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க-அகன்ற இடத்தையுடைய உலகத்தை நிறைந்த இருள் விழுங்கிக்கொள்ளும்படி பகற்பொழுது கழிந்து விட்டமையாலே முற்றிய துன்பம் மேலும் மிகும்படி அந்திவானம் என்னும் செந்நெறுப்புப் பரவிய மேலைத் திசையினது முகம் விளக்கமுறும்படி; அந்திச் செக்கர் வெண்பிறை தோன்ற பெருந்தகை பிறை ஏர் வண்ணம் நொக்க-அவ்வந்திப் பொழுதின்கண் செல்வானத்தினிடையே வெள்ளிய இளம்பிறை தோன்றுதலாலே அரசர் பெருந்தகையாகிய செங்குட்டுவன் அப் பிறையினது எழுச்சியுடைய அழகினைக் கூர்ந்து நோக்காநிற்ப; இறையோன் செவ்வியின் கணியெழுந்து உரைப்போன்-அவ் வேந்தனுடைய கூர்ந்த நோக்கத்தின் குறிப்பறிந்த கணிவன் அம் மன்னனுடைய திருமுகச் செவ்வி பெற்றவுடன் எழுந்து கூறுபவன், மண் ஆள் வேந்தே வஞ்சி நீங்கியது எண் நான்கு மதியம் வாழ்க என்று ஏத்த-நில உலகத்தை ஆளும் எம் வேந்தனே! யாம் நமது வஞ்சி நகரத்தினின்றும் வடநாட்டின்கண் வந்தபின்னர்க் கழிந்த காலத்தின் அளவை முப்பத்து இரண்டு திங்கள்கள் ஆம். எம்பெருமான் நீடூழி வாழ்க என்று தொழாநிற்ப என்க.
(விளக்கம்) அகல்வாய்-அகன்ற இடம். பகல்-ஞாயிறுமாம். படர்-காம நோய். காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய் எனவரும் திருக்குறளும் (1227) நினைக. மாலையாகிய செந்தீ என்க. செக்கர்-செவ்வானம். ஏர் எழுச்சி. பெருந்தகை: செங்குட்டுவன். நோக்கத்தின் குறிப்பறிந்து தான் கூறுதற்கு நீங்கியது: சாதியொருமை எனினுமாம்.
செங்குட்டுவன் மாடலனை அழைத்துச் சோழன் நிலைமையை வினாதல்
151-161: நெடுங்காழ்.........ஓவென
(இதன் பொருள்) நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதில் கொடித்தேர் வீதியுள்-நெடிய கழிகளுடனே சேர்த்தமைந்த கண்டத்திரையை வரிசையாக அமைந்த வளைந்த படாஅம் ஆகிய நெடிய மதில் அமைந்த கொடி உயர்த்திய தேரோடும் வீதியின்கண்; குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன-குறுகிய வடிவுடையனவும் நீண்ட வடிவமைந்தனவும் ஆகி மலைகளைப் பார்த்தாற் போன்றனவும் ஆகிய; உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி-இல்லங்களமைந்த குறிய தெருவின் ஒரு பக்கத்தே சென்று; வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் சித்திர விதானத்துச் செம்பொன் பீடிகை-ஓவியப் புலவருடைய கைத் தொழிலாலே விளக்கமுற்ற கோட்பாட்டினையுடைய ஓவியப் பந்தலின் கீழ் அமைந்த செம் பொன்னால் இயன்ற பீடமாகிய; கோயில் இருக்கைக் கோமகன் ஏறி-அரண்மனைக்குரிய இருக்கையாகிய அரசு கட்டிலின் மேல் அவ்வரசர் பெருமான் எழுந்தருளி இருந்து, வாயிலாளரின் மாடலன் கூஉய் இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீது இன்றோ என-வாயில் காவலாளரை ஏவி மாடல மறையோனை அழைப்பித்து அவ்விருவரும் தமியராய் இருந்துழிச் செங்குட்டுவன் மாடலனை நோக்கி அந்தணனே! சோழ நாட்டின் கண் கலாம் விளைத்த இளவரசர் ஒன்பதின்மரும் இறந்தொழிந்த பின் வளம் பொருந்திய அழகிய சோழ நாட்டு மன்னவனாகிய என் மைத்துன வளவன் கிள்ளியின் வெற்றியும் செங்கோலின் தன்மையும் தீதிலவாக இருக்கின்றனவோ? என வினவ என்க.
(விளக்கம்) நெடுங்காழ்க் கண்டம்-நெடிய குத்துக்கோல்களுடனே பல நிறத்தால் கூறுபட்ட திரைச்சீலை; கண்டம்-கூறுபாடு கண்டம் குத்திய மண்டப எழினி எனவும் பிற சான்றோரும்(பெருங்கதை, சீவக) கூறுவர். உறையுள்-வீடு முடுக்கர்-குறுந்தெரு. வித்தகர்-புலவர். கோயிலிருக்கை என்றது அரசு கட்டிலை. தமிழ் மன்னரின் செய்தியை வடவாரியமன்னர் அறியலாகாது என்னும் கருத்தால் செங்குட்டுவன் தனி இடத்தே சென்றிருந்து மாடல மறையவனை அழைத்து வினவிய படியாம். இளங்கோ வேந்தர் என்றது முன்னர்(118) மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் என்றவரை. கொற்றம்-வெற்றி. கொற்றமொடு கூடிய செங்கோற்றன்மை என்றலின் தீதின்றோ என்முடிந்தது.
மாடலன் விடை
162-172: எங்கோ.........கேட்டே
(இதன் பொருள்) மங்கல மறையோன் மாடலன் எங்கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி உரைக்கும்-மங்கலத் தன்மை மிக்க மறையவனாகிய அம் மாடலன் அது கேட்டு எம் வேந்தர் பெருமானே நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்திக் கூறுவான்:-வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்-வெயில் போன்று ஒளி வீசி விளங்குகின்ற மணியாரம் பூண்ட அமரர்களும் வியக்கும்படி விசும்பில் தூங்கும் மூன்று மதில்களையும் எறிந்து தொலைத்த போர் வேலினது வெற்றியும்; குறு நடைப் புறவின் நெடுந்துயர் தீர எறி தரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்து உடம்பு இட்டோன் அறம் தருகோலும்-குறு குறு நடக்கும் நடையையுடைய ஒரு புறாவினது நெடிய துன்பம் தீரவும் அப் புறாவினைக் கொல்லுதற்குத் துரத்தி வந்த பருந்தினது பசித்துன்பம் ஒருங்கே நீங்கவும் தானே அரிந்து தனது உடம்பின் தசையைத் துலையின்கண் இட்டவனாகிய அச் சோழ மன்னனுடைய உலகிற்கு அறத்தை வழங்குகின்ற செங்கோலின் தன்மையும்; திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ-தம் தன்மையில் வேறுபட்டுப் போகும் காலமும் ஒன்று உண்டாகுமோ; உண்டாகாதன்றே; செல்லல் காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டு-போகூழால் துன்பம் வந்துற்ற காலத்தும் காவிரிப் பேரியாற்றின் நீரால் பாதுகாக்கப்படுகின்ற அச் சோழ நாட்டிற்கு அரசுரிமை பூண்ட அம் மன்னவனுக்குத் தீது ஒரு சிறிதும் இல்லைகாண் என்று உணர்தற்கரிய நான்கு மறைகளையும் ஓதி உணர்ந்த முதல்வனாகிய மாடலன் என்னும் அந்தணன் கூறக் கேட்டு மகிழ்ந்தபின் என்க.
(விளக்கம்) மங்கலம்-ஆக்கம். எயில்-வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று மதில்கள். அவற்றைப் பண்டொரு காலத்தே ஒரு சோழ மன்னன் நுறுக்கி வீழ்த்தினன் என்பது வரலாறு. இதனை 195: தூங்கெயின் மூன்றெறிந்தசோழன் (சிலப். 29 (17) ஒன்னாருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயிலறிந்த நின் னூங்கணோர் (புறநா, 395-6) வீங்குதோட்செம்பியன் சீற்றம் விறல் விசும்பல் தூங்குமெயிலுந் தொலைத்தலால் (பழ-69) ஒன்னா, ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை, நாடாநல்லிசை நற்றோச் செம்பியன் (மணி1:4) தேங்குதூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன்(மணி1:4) தேங்கு தூங்கெயிலெறிந்தவனும்(கலிங்க. இராச 17) வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத, தூங்கும் புரிசை துணித்த கோன் (இராசராச,13) தூங்குமெயிலெறிந்த சோழனும் (விக்கரம, 9) எனப் பல்வேறிடங்களிலும் வருவற்றாலறிக. புறவின் துயர் தீரவும் பருந்தின் இடும்பை நீங்கவும் உடம்பு அரிந்து இட்டோன சிபி என்னும் ஒரு சோழனாவான்.
செங்குட்டுவன் செயல்
173-178: பெருமகன்...............ஏவி
(இதன் பொருள்) பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு ஆடகப் பெருநிறை ஐ ஐந்து இரட்டி-அரசர் பெருமகனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அருமறை முதல்வனாகிய அம் மாடல மறையோனைப் பெரிதும் பாராட்டி அப்பொழுது அவ்வந்தணனுக்குப் பொன் கட்டியாகிய பெரிய நிறையையுடைய ஐம்பது துலாம் அளவிற்றாகிய; தன்னிறை-தன் உடம்பின் நிறையாகிய பொற்பரிசிலை; தோடு ஆர் போந்தை வேலோன் மாடல மறையோன் கொள் கென்று அளித்து-இதழமைந்த பனம்பூ மிலைந்த வேலேந்திய அச் செங்குட்டுவன் இத் தானத்தை மாடல் மறையோன் கொள்வானாக என்று வழங்கிப் பின்னர்; ஆங்கு ஆரிய மன்னர் ஐ இருபதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்க என்று ஏவி-அப் பாடிவீட்டின்கண் தன்னோடு இருந்த நண்பராகிய ஆரிய மன்னர் நூற்றுவரையும் சிறப்புப் பொருந்திய அவருடைய நல்ல நாட்டிற்குப் போதுக என்று விடை கொடுத்த பின்னர் என்க.
(விளக்கம்) ஐம்பது துலாம் பொன் ஆகிய தனது உடம்பின் நிறையைஉடைய ஆடகம் என்க-ஆடகம்-பொன். இங்ஙனம் வழங்கும் தானத்தை துலாபாரம் புகுதல் என்பர். ஐயிருபதின்மர் என்றது நூற்றுவர் கன்னரை. அவரவர் நன்னாட்டிற்கு என்க.
இதுவுமது
179-191: தாபத...........ஏவி
(இதன் பொருள்)தாபத வேடத்து உயிருய்ந்து பிழைத்த மாபெருந்தானை மன்ன குமரர்-போரின்கண் புறங் கொடுத்துத் துறவோர் வேடம் புனைந்து அவ்வாற்றால் உயிருடன் தப்பிப் பிழைத்த மிகப் பெரிய படைகளோடு வந்தவராகிய அரசர் மக்களையும்; சுருள் இடு தாடி மருள் படு பூங்குழல் அரி பரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெள் தோடு வெள் நகைத்துவர்வாய்-சுருண்டிருக்கின்ற தாடியையும் மயக்கமுண்டாக்குகின்ற அழகிய கூந்தலையும் செவ்வரி பரவி ஓடிய வளவிய கயல்மீன் போன்ற நீண்ட கண்ணையும் மலர்ந்த வெள்ளிய மலர்மாலையினையும் வெள்ளிய பற்களையும் பவழம் போன்ற வாயையும்; சூடக வரிவளை ஆடு அமைப் பணைந்தோள் வயர் இள வன முலைத் தளரியல் மின் இடை-சூடகம் என்னும் வரிகளை உடைய வளையல்களையும் அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் வளருகின்ற இளைய அழகிய முலையையும் தளருகின்ற நடையினையும் மின்னல் போன்ற இடையினையும் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு-சிலம்பணிந்த சிறிய அடிகளை உடைய ஆரிய நாட்டுப் பேடியுடனே; எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞாற்றுவர்-மறப்பண்பு ஒழியாத பகை மன்னருடைய மேலான மொழியையும் மறுத்துரைக்கும் மன வலிமையோடே கூடிய மெய்ப்பை புகுந்த தலையாய தூதுவர் ஓராயிரவரை; அரியின் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை-பகை மன்னர்களுள் வைத்துப் பனம்பூச் சூடி வருகின்ற அரிய தமிழ் மறவருடைய போராற்றும் திறமையைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் எதிர்த்து வந்து போராற்றிப் புறமிட் டோடிய கனகனும் விசயனுமாகிய ஆரிய மன்னர் இருவரையும்; இருபெருவேந்தர்க்குக் காட்டிட ஏவி-தன்னோடொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு முடி வேந்தர்களுக்கும் காட்டிக் கொணருமாறு கட்டளையிட்டு என்க.
(விளக்கம்) தாபத வேடம்-துறவோர் வேடம். மாபெருந்தானை மன்ன குமரர் என்றது இகழ்ச்சி. அரி-செவ்வரி. நகை-பல். துவர்-சிவப்புமாம். கஞ்சுகமுதல்வர்-
தூதர். தூதர் என்பதற்கு அறிகுறியான மெய்ப்பை அணிந்திருத்தல் பற்றி இவர்களைக் கஞ்சுகி மாக்கள் என்பர். சஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) இருபெரு வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும்.
செங்குட்டுவன் கண்படை நிலை
192-199: திருந்து.........தானையொடு
(இதன் பொருள்) திருந்து துயில் கொள்ளா அளவை-வடவாரிய மன்னரை வென்று கண்ணகித் தெய்வத்திற்கு கற்கொண்டு பெயர்ந்த செங்குட்டுவன் சினந் தணிந்து பாடிவீட்டின்கண் இன்துயில் கொள்ளும் பொழுது; யாங்கணும் பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடை எவ்விடத்தும் பரந்து பாய்கின்ற நீரையுடைய கங்கையாற்றின் மருங்கமைந்த பழனங்களிலே பசிய இலையையுடைய; இளந்தாமரை பயில் பல் வண்டு யாழ் செய இளமையுடைய செந்தாமø நாள் மலர்களில் பயிலுகின்ற பலவாகிய வண்டுகள் யாழ்போன்ற இனிய இசையைப் பாடும் படி; வெயில் இளம் செல்வன் விரிகதிர் பரப்பி-வெயில் ஒளியையுடைய காலைக் கதிரவன் விரிகின்ற ஒளியைப் பரப்பி-குணதிசைக் குன்றத்து உயர்மிசை தோன்ற-கிழக்குத் திசையின்கண் உள்ள உதயகிரி என்னும் மலையினது உயர்ந்த உச்சியின் மேல் வந்து தோன்றா நிற்ப; குடதிசை ஆளுங் கொற்ற வேந்தன்-தமிழ் கத்து மேற்றிசையிலுள்ள நாட்டை ஆளுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவன் என்னும் அரசன்; வடதிசைத் தும்பை வாகையொடு முடித்து-வடதிசைக்கண் சென்று வடவாரிய மன்னருடைய போர்களத்தின்கண் தும்பைப் பூச் சூடிப் புகுந்து போராற்றி வென்று வாகைப்பூச் சூடுதலோடே அப் போரினை முடித்து; தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-தனக்குரிய தென் திசையை நோக்கி மீண்ட வெற்றியை யுடைய நாற்பெரும் படையோடு என்க
(விளக்கம்) திருந்து துயில் என்றது கண்படை நிலை என்னும் வாகைத் திணைத்துறை அஃதாவது மண்கொண்ட மறவேந்தன் கண்படை நிலை மலிந்தன்று எனவரும்( புறப்-வெண்பாமாலை-வாகை-29) கொளுவான் உணர்க.
செங்குட்டுவன் வஞ்சியை நோக்கி வருதல்
200-நிதி துஞ்சு என்பது முதலாக 256-குட்டுவனென் என்னுந்துணையும் ஒரு தொடர்
200-206: நிதிதுஞ்சு..........கட்டில்
(இதன் பொருள்) நிதி துஞ்சு வியல் நகர் நீடுநிலை நிவந்து கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை-பல்வேறு வகைப் பொருள்களும் குவிந்து வாளா கிடக்கின்ற அகன்ற கருவூலத்தோடே நெடிய நிலைகளோடே உயர்ச்சி பெற்று ஞாயிற்று மண்டிலத்தின் இயக்கத்தைத் தடுப்பதுபோன்று உயர்ந்த பொன்னால் இயன்ற மாளிகையாகிய உவளகத்தின்கண்; முத்து நிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய-முத்துக்களைக் கோத்த நிரல்பட்ட சல்லியும் தூக்குமாகிய தொடராலே முழுவதும் வளைக்கப்பட்ட; சித்திர விதானத்து-சித்தரங்கள் எழுதப் பெற்ற மேற்கட்டியினை உடைய; செய்பூங்கைவினை இலங்கு ஒளி மணிநிரை இடை இடை வகுத்த-திறம்படச் செய்யப்பட்ட பொலிவுடைய கைத்தொழில் அழகுடனே விளங்குகின்ற மாணிக்கங்களை வரிசை வரிசையாக இடை இடையே பதிக்கப்பட்ட, விலங்கு ஒளி வயிரமொடு பொலந்தகடு போகிய-பக்கத்திலே பாய்கின்ற ஒளியை உடைய வயிரம் இழைக்கப் பெற்ற பொற்றகட்டினைத் தைத்த; மடையமை செறுவின் வான் பொற்கட்டில்-மூட்டுவாய் நெருங்கும்படி கடாவிய உயரிய பொன்னால் இயன்ற கட்டிலாகிய என்க.
(விளக்கம்) நிதி-பொன்மணி முதலியன. அவை மிக்குக் கிடத்தலின் நிதி துஞ்சும் நகர் என்றார். நகர் ஈண்டுக் கருவூலம். அரண்மனை மாளிகையின் உயர்ச்சியை விதப்பார் கதிர் செலவொழித்த கனக மாளிகை என்றார். மாளிகை ஈண்டு உவளகம். வளைஇய-வளைத்த பொலந்தகடு-பொற்றகடு.
இதுவுமது
207-213: புடை.......வாழ்த்த
(இதன் பொருள்) புடை திரள் தமனியப் பொன்கால் அமளிமிசை-பக்கந்திரண்டுள்ள பொற்குடம் அமைந்த அழகிய கால்களையுடைய படுக்கைக் கட்டிலின் மேல்; இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அணைப் பள்ளி-தன் சேவல் அன்னத்தோடே புணர்ந்த பெடை அன்னம் புணர்ச்சி இன்பத்தால் உள்ளம் உருகி உதிர்த்து விட்ட மெல்லிய தூவிகளைத் திரட்டிப் பஞ்சாக அடைத்த காதல் துணைவர் தம்முள் ஒருவரை ஒருவர் முயங்குவதற்கு இடனான அணைகளையுடைய பள்ளியின் மேல்; துயில் ஆற்றுப் படுத்து-துயிலைப் போக்கி; ஆங்கு எறிந்து களங்கொண்ட இயல் தேர்க் கொற்றம் அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்-அவ் வட நாட்டின்கண் வடவாரிய மன்னரைக் கொன்று குவித்து அப் போர்களத்திலே பெற்ற இயங்குகின்ற தேரினது வெற்றியை உள்ளவாறு உணர்ந்து சொல்லிச் சொல்லிப் பழகிய கூட்டமாகிய செவிலித்தாயார்; தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக எனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த-நீ இத் துணை நாளும் நினது தோளுக்குப் பொருந்திய நின் வாழ்க்கைத் துணைவியைத் துறந்திருந்தமையாலே உண்டான துன்பத்தை இப்பொழுது தவிர்ந்து இன்புறுக என்று தாம் பாடுகின்ற பாட்டோடு இணைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தா நிற்பவும் என்க.
(விளக்கம்) துணைபுணர் அன்னத்தூவியில் செறிந்த இணை அணை மேம்படத் திருந்து துயில் என அந்திமாலைச் சிறப்பச்செய் காதையினும் வந்தமை அறிக(67-8) ஆற்றுப் படுத்துதல்-போக்கிவிடுதல்.
இதுவுமது
214-224: சிறுகுறு.......பாணியும்
(இதன் பொருள்) சிறு குறுங்கூனும் குறளும் சென்று-அரண்மனையின்கண் பெருந்தேவி மாளிகையில் குற்றேவல் புரியும் சிறிய குறிய கூனுருவமுடையோரும் குறள் உருவமுடையோரும் கோப்பெருந்தேவி இளங்கோ வேண்மாள் முன்னிலையில் விரைந்து சென்று தேவீ; பெருமகன் வந்தான் பெறுகநின் செவ்வி-நம் பெருமான் வடதிசை நோக்கி ஆள்வினை மருங்கின் பிரிந்து சென்றவன் மீண்டு வந்துற்றனன் ஆதலால் அவனை வரவேற்கத்தகுந்த நின்னுடைய செவ்வியை நீ பெறுவாயாக; நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுக என-நினது நறிய மலரையுடைய கூந்தலானது நாட்காலத்திலே செய்கின்ற ஒப்பனையைப் பெறுவதாக எனவும்; அமைவிளை தேறல் மாந்தியகானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட-மூங்கிற்றண்டின்கண் பெய்து முதிர்வித்த தேறலைப் பருகிய குறவன் கவண் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கைவிட்டமையாலே அச் செவ்வி நோக்கி; வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த-விளைடு பெருகிய தன்மையை உடைய யானையானது தினை உண்ணுதலைக் கைவிட்டு நன்கு தூங்குவதாகிய உறக்கத்தை எய்தும்படி; வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கு என-வாகை மாலையும் தும்பை மாலையும் வடதிசையின் கண் நம் அரசன் சூடுதற்குக் காணமான விரைந்த யானைப் படைகளை மீண்டும் ஊர்ப்புகுதும் வழி இதுவேயாகும் ஆகவே இவ்விடத்தினின்றும் நீங்குவாயாக என்று பொருளமைந்து, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-திறத்திறம் என்னும் அப் பண்ணின்கண் அமைத்து மிகவும் உயர்ந்த பாணின்கண் இருந்து குறமகளிர் பாடிய குறிஞ்சிப்பண்ணும் என்க.
(விளக்கம்) கானவன்-தேறல் பருகியமையால் மயங்கிக் காவலைக் கை விட்டானாக அந்தச் செவ்வி பார்த்து தினையுண்ண வந்த யானை குறத்தியர் பரண்மிசை இருந்து பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு மயங்கித் தான் வந்த காரியத்தை மறந்து நின்றபடியே தூங்கிற்று. அது கண்ட அக் குற மகளிர் மீண்டும் பாடுபவர், யானையே! நீற்குமிடம் யானைப்படை போகும்வழி ஆதலின் அவ்விடத்தை விட்டுப் போய் விடு என்று பாடினர் என்பது கருத்து.
இதுவுமது
225-230: வடதிசை...............பாணியும்
(இதன் பொருள்) பகடே வடதிசை மன்னர் மண் எயில் முருக்கி கவடி வித்திய கழுதை ஏர் உழவன் குடவர் கோமான் வந்தான்-எருதே! எருதே! நீ ஒரு செய்தி கேள்! வடதிசை மன்னராகிய கனகவிசயரை உள்ளிட்ட அரசர்களுடைய நிலைபேறுடைய மதில்களை அழித்து வெள் வாகை விதைத்த கழுதைபூட்டிய ஏரை உழுகின்ற குடநாட்டு அரசனாகிய சேரன் செங்குட்டுவன் வாகை சூடி மீண்டும் வந்தான்; நாளை மன்னர் அடித்தளை நீக்கும் வெள் அணி ஆம்-நாளை பகையரசருடைய கால் விலங்குகளை அகற்றுதற்குக் காரணமான பிறந்த நாள் மங்கல விழா அச் செங்குட்டுவனுக்கு நிகழுமாதலின்; படுநுகம் பூணாய் எனும்-உள் பிடரில் படுகின்ற நுகத்தடியைப் பூண்டு நீ உழவேண்டியதில்லைகாண் என்னும் பொருளமைத்துப் பாடுகின்ற; தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-விளாக்கோலி உழுகின்ற பெரிய உழவர் முழங்குகின்ற ஏர் மங்கலப் பாடலும் என்க.
(விளக்கம்) கவடி-வெள் வரகு. பண்டைக் காலத்துப் பகை மன்னர் அரண்களை அழித்த அரசர் கோவேறு கழுதைகளை ஏரிற் பூட்டி அரண்மனையின் உள்ளே உழுது உண்ணுதற்குதவாத வெள்வரகினை விதைப்பது ஒரு வழக்கம். தொடுப்பு-விளாக்கோலுதல். ஒன்றனோடு ஒன்று தொடர்புடையதாகக் கோலப்படுதலின் அப் பெயர்த்தாயிற்று தொடுப்பு-விதைப்புமாம். உழவர் பாணி. ஏர்மங்கலப் பாட்டு.
இதுவுமது
231-241: தண்ணான்.............பாணியும்
(இதன் பொருள்) தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து-தண்ணிய ஆன்பொருநைப் பேரியாற்றின்கண் நீராடுகின்ற மாந்தர் விடுத்த வண்ணங்களும் சுண்ணப் பொடிகளும் பல்வேறு வண்ண மலர்களும் நீரின்கண் பரவி, விண் உறை வில்போல் விளங்கிய பெருந்துறை-வானத்தே தோன்றுகின்ற இந்திர வில்லைப்போன்று பல்வேறு வண்ணத்தோடு விளங்குகின்ற பெரிய நீராடு துறையின்கண்; வண்டு உணமலர்ந்த மணித்தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்-வண்டுகள் தேனுண்ணும்படி மலர்ந்துள்ள நீலமணிபோலும் நிறமுடைய கருங்குவளைப் பூமாலையை முள்ளிப் பூமாலையோடு சேர்த்து அணிந்திருக்கின்ற தலை மயிரின்கண்; முருகுவிரி தாமரை முழுமலர் தோய-மணம் பரப்புகின்ற தாமரையினது முழுமையான மலரையும் அணிந்துகொண்டு; குருகு அலர் தாழைக் கோட்டுமிசை கொம்பின் மேலே ஏறி இருந்து; வியன்பேரிமயத்து வில்லவன் வந்தான்-அகன்ற பெரிய இமய மலையினின்றும் நம் சேரர் பெருமான் மீண்டு வந்தான்; பல் ஆன் நிரையொடு நீர் படர்குவிர் என-அவன் அத் திசையினின்றும் திறைப்பொருளாகப் பெற்று வருகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆனிரையோடு சேர்ந்து நீங்களும் செல்லுவீர் என்று கூறி; காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇ-அச் சேரன் செங்குட்டுவனுக்குரிய ஆனிரையை நீருண்ணத் துறையின்கண் செலுத்திநின்று; கோவலர் ஊதும் குழலின் பாணியும்-இடையர்கள் மகிழ்ந்து ஊõதநிற்கும் வேய்ங்குழலிசையும் என்க.
(விளக்கம்) ஆன்பொருநை-ஓர் யாற்றின் பெயர் இக்காலத்தே தாமிரபரணி என்பர். தண் பொருநை என்பதே இவ்வாறு வழங்குகின்றது என்க. விண்ணுறை வில்-இந்திர வில். முண்டகக் கோதை முள்ளிப்பூ மாலை. குஞ்சி-ஆண் மயிர். குருகு போன்று அலர் தாழை என்க. குருகு-கொக்கு. இது வெண்டாழை மலருக்குவமை. வில்லவன் சேரன் இமயத்தினின்று கொணருகின்ற பல்லான் நிரை என்க.
இதுவுமது
242-250: வெண்டிரை...........பாணியும்
(இதன் பொருள்) வெள்திரை பொருத வேலை வாலுகத்துக் குண்டுநீர் அடைகரை குவையிரும் புன்னை-வெள்ளிய அலைகள் மோதப்பெற்ற கடற்கரையின்கண் அமைந்த மணற்குன்றின்மருங்கே ஆழமான நீரையுடைய அடைகரையின்கண் அடர்ந்துள்ள கரிய புன்னை நீழலின்கண்; வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம் வலம்புரிச் சங்கு கருவிலிருந்து ஈன்ற அழகிய விரும்புதற்குக் காரணமான முத்துக்களை; கழங்காடு மகளிர் ஓதை ஆயத்து-கழங்காட்டம் ஆடுகின்ற நெய்தல் நிலத்து மகளிரின் ஆரவாரமுடைய கூட்டத்தின்கண் அம் மகளிர்; வழங்கு தொடி முன்கைமலர ஏந்தி-இயங்குகின்ற வளையலை உடைய முன் கையை அகல விரித்து ஏந்திக்கொண்டு; மடவீர் யாம்-மகளிர்களே இனி யாமெல்லாம்; வானவன் வந்தான் வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய-நம் சேரர்பெருமான் வாகைசூடி மீண்டு வந்தான். இனி அவன் நம்மைக் காதலித்து வளருகின்ற இளைய அழகிய முலைகள் அவனது தேரளினது ஊற்றின்பத்தை நுகரும்படி; தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் எனும்-வாகை சூடுதற்குக் காரணமான தும்பைப் பூமாலையையும் அவன் அடையாளப் பூவாகிய பனம்பூ மாலையையும் வஞ்சிப்பூ மாலையையும் இனிப் பாடக் கடவேம் என்கின்ற; அம் சொல் கிளவியர் அம் தீம்பாணியும்-அழகிய சொல்லையுடைய மொழியினை உடைய அம் மகளிர் பாடுகின்ற அழகிய இனிய நெய்தற்பண்ணும் என்க.
(விளக்கம்) வேலை-கடற்கரை. வாலுகத்துக் கரை குண்டு நீர் அடைகரை எனத் தனித்தனி கூட்டுக! வாலுகம்-மணற்குன்று குண்டு நீர்-ஆழமான நீர். வலம்புரி ஈன்ற முத்தத்தைக் கழங்காடு மகளிர் முன்கை மலரக் கழங்காக ஏந்தி என்க. வஞ்சி வஞ்சி நகரமுமாம். இதன் கண் குறிஞ்சிப் பாணியும் உழவர் ஓதைப் பாணியும்(மருத நிலப்பண்) குழலின் பாணி(முல்லைப்பண்) அந்தீம்பாணி (நெய்தற்பண்) என நான்கு நிலத்திற்கு முரிய நான்கு பண்களும் வந்தமை உணர்க.
இதுவுமது
251-256: ஓர்த்துடன்.........குட்டுவனென்
(இதன் பொருள்) ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி வால்வளை செறிய -செவியால் ஆராய்ந்து கொண்டிருந்த கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளின் உடம்பு மகிழ்ச்சியால் பூரிப்படைந்து அவளது வெள்ளிய சங்கு வளையல்கள் செறியா நிற்ப; செங்குட்டுவன் வலம்புரி வலன்எழ மாலை வெண்குடைக்கீழ்-செங்குட்டுவன் என்னும் சேரர் பெருமான் வலம்புரிச் சங்கங்கள் வெற்றியை விளக்கி முழங்கவும் மலர்மாலையணிந்த கொற்ற வெண்குடை நிழலின்கீழ் அமர்ந்து வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து-வாகைமாலை சூடிய முடியையுடையவனாய் விரைந்து வருகின்ற யானையின் பிடரின்மேல் பொலிவுற வீற்றிருந்து: குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன்-மங்கலச் சின்னமாகிய யானை அணி முதலியவற்றோடு தலைநகரத்திலுள்ள சான்றோர் எதிர்கொள்ளும் படி நகரத்தின்கண் புகுந்தான் என்பதாம்.
(விளக்கம்) அரசனுடைய வருகையினைப் பாடும் பாடல்களை ஓர்த்தலால் பிரிவாற்றி இருந்த கோப்பெருந்தேவி என்க. மங்கலத்தின் பொருட்டு அப் பெருந் தேவி பிரிந்துறைந்த காலத்தில் எல்லாம் சங்கு வளையல் ஒன்றுமே அணிந்திருந்தமை தோன்ற வால்வளை செறிய என்றார். வேகயானை-சினமிக்க யானையுமாம். யானையின் பிடரியில் இடப்பட்ட பொன்னிருக்கையின் மேலிருத்தலால் யானையின் மிசை என்றொழியாது யானையின் மீமிசை என்றார். ஒழுகை-அணி. கோநகர்-தலை நகரம் ஆகு பெயர். நகரத்துச் சான்றோர் என்க.
பா-நிலைமண்டில ஆசிரியப்பா
நீர்ப்படைக் காதை முற்றிற்று.