பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆதிபராசக்தி பக்தர்கள் சார்பில், ஆடிப்பூரத்தையொட்டி 1,008 கஞ்சிக்கலய திருவீதி உலா நடந்தது. உலகம் செழிப்படையவும், விவசாயம், மழைவளம், தொழில் வளம் பெருக வேண்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆதிபராசக்தி பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி, 1,008 கஞ்சிக்கலய திருவீதி உலா, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று காவிரி ஆற்றில் நீராடி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி அம்மன் செண்டை, மேள தாளங்களுடன் பவனி வர, காளியம்மன் கோவிலில் இருந்து, செவ்வாடை அணிந்தவாறும், வேப்பிலை, அக்னி சட்டிகளுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, கஞ்சிக்கலயம் எடுத்து வந்தனர். ராஜா வீதி, சேலம் மெயின் ரோடு, உள்ளிட்ட பகுதிகளின் வழியாக, ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷம் முழங்கியவாறு, ஆதிபராசக்தி ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கஞ்சிக்கலயங்களை வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதன்பின், பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.