பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
வீரபாண்டி: மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, கஞ்சி கலயங்களை ஏந்திக்கொண்டு ஊர்வலம் சென்றனர். ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இளம்பிள்ளை அருகே ராசிகவுண்டனூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. ஏரிக்கரை, காளியம்மன் கோவிலில் இருந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து, வேப்பிலை கொத்துகளை கையில் எடுத்துக்கொண்டு தலையில் தீச்சட்டி, கஞ்சி கலயங்களை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ராசிகவுண்டனூர் வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, கலயத்தில் எடுத்து வந்த கஞ்சி மற்றும் அன்னதானத்தை மக்களுக்கு வழங்கினர். இதே போல், வேம்படிதாளம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், விநாயகர் கோவிலில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பூங்கரகம் மற்றும் கஞ்சி கலயங்களை சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர்.