கலைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்த ஊர் ஒன்றுக்கு வெளிநாட்டினர் வந்தனர், பொருட்களின் அழகு, தரம் கண்டு வியந்த அவர்கள் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதிக்காக பெரிய அளவில் ஆர்டர் கொடுத்தனர். தயாரிப்பாளர்களும் மகிழ்வுடன் சம்மதித்தனர். தொடக்கத்தில் பொருள் தரமாக இருந்தால் தான் தொடர்ந்துஆர்டர் கிடைக்கும் என நினைத்த னர். காலப் போக்கில் சிலர் ’மற்றவர்கள் தரமானதை அனுப்பட்டும்; நாம் மட்டும் சற்று தரம் குறைவாக அனுப்பினால் யாருக்கும் தெரியாது’ என எண்ணினர். இப்படி அனைவரும் சிந்திக்க முற்றிலும் தரம் குறைந்தது. உண்மையை அறிந்த வெளிநாட்டினர் பொருட்களை அனுப்பியதோடு நஷ்டஈடு கேட்டு வழக்கும் தொடுத்தனர். தயாரிப்பாளர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. பிறரை ஏமாற்ற முயலும் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே ஏமாற்றுகிறோம். ’வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ ’ஏமாற்ற நினைப்பவனே ஏமாற்றம் அடைவான்’ என்பதற்கு இது சான்று. ’நான் கண்டிருக்கிறபடி அநியாயத்தை உழுது தீவினையை விதைத்தவர்கள் அதையே அறுக்கிறார்கள்’ என்றும் ’அநியாயத்தை விதைக் கிறவன் வருத்தத்தை அறுக்கிறான்’ என்றும் பைபிள் சொல்வது உங்களின் நினைவில் இருக்கட்டும்.