பதிவு செய்த நாள்
31
ஆக
2018
11:08
மேட்டுப்பாளையம்: நுாறாண்டு பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மெயின் ரோட்டில், காந்தி மைதானத்தில், நுாறாண்டு பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மூன்று நிலை கோபுரம், முன் மண்டபம் ஆகியவை அமைப்பதற்கான திருப்பணிகள் முடிக்கப்பட்டன.
கடந்த, 28ம் தேதி முதல் நேற்று வரை, கணபதி வேள்வி, முளைப்பாரிகை ஊர்வலம், யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காம் வேள்வியும், பின் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடந்தன. 9:15 மணிக்கு மேளதாள இசை முழங்க வாணவேடிக்கையுடன் புனித தீர்த்தக்குடங்கள் கோவிலை வளம் வந்தன. 9:30 மணிக்கு சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் தலைமையில், பிள்ளையார்பட்டி பீடம் பொன்மணிவாசக அடிகளார் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இந்த விழாவையும், கோபுர தரிசனத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் எம்.பி.,க்கள் செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., சின்னராஜ், நகராட்சி கமிஷனர் கணேசன், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.