பதிவு செய்த நாள்
31
ஆக
2018
11:08
சோமனுார், கோவை, சோமனுார் பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா, காவடி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.கோவை, சோமனுார் அடுத்த ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 40 ஆண்டுகளாக, தமிழகம் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும், காவடி ஆட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும், இக்கலையை இலவசமாக கற்றுத் தருகின்றனர். தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறை சார்பில், காவடி குழுவைச் சேர்ந்த, 27 பேர், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலின் கும்பாபிஷேக விழாவில், காவடி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இதற்காக, நேற்று, ஊஞ்சப்பாளையம் பிள்ளையார் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தி புறப்பட்டு சென்றனர். காவடி குழு தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:முருகனின் வழிபாட்டு முறைகளில், காவடி ஆட்டமும் ஒன்று. இதற்காக, சென்னிமலை, பழநி மலை கோவிலுக்கு, ஆண்டுதோறும் விரதமிருந்து, பாதயாத்திரையாக, 100 காவடிகளை சுமந்து செல்வோம்.தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், காவடி ஆட்டம் நடத்தியுள்ளோம். 2015ல், பாங்காக்கில் உள்ள மாகாளியம்மன் கோவில் நவராத்திரி விழாவில் பங்கேற்றோம். தற்போது, மலேசியா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.