பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
திருத்தணி,:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக கூடுதல் அன்னதானம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளன என, கோவில் தக்கார் கூறினார். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், மதியம், தினந்தோறும், 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 200 பக்தர்களுக்கு, கூடுதலாக அன்னதானம் (மொத்தம் 500) வழங்குவதற்கு ஆணை வழங்க வேண்டும் என, கோவில் நிர்வாகம், இந்து அறநிலைதுறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது, அன்னதானம் குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், 300 பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வசதியில்லை. மாறாக, மூன்று முறை அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோவில் நிர்வாகம், கூடுதல் அன்னதான கூடம் கட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது. பயன்படுத்தாமல் உள்ள கட்டடத்தை சீரமைக்கும் பணியில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் ஆய்வு செய்து கூறியதாவது: பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் அன்னதான கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய முக்கிய நாட்களில், பக்தர்கள் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள் மற்றும் பிற துறையினருக்கு அன்னதானம் கூடத்தில் உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.