பதிவு செய்த நாள்
08
செப்
2018
11:09
ராஜபாளையம்:மனித வாழ்வில் அடுத்தடுத்து தேடல்களில் உச்சம் தொட்டு நின்ற பிறகு ,ஆற்றுப்படுத்தலுக்கும் சமூக அவலங் களுக்கு வடிகாலாகவும், மன அமைதிக்கு தேக்கமாகவும் விளங்கி வருவது ஆன்மிகம் மட்டுமே.இதன் அருமை உணர்ந்து பண்டைய காலம் தொட்டு இவற்றை நடைமுறைபடுத்த பெரியோர்கள் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் மூலம் முறைப்படுத்தி வந்துள்ளனர். இருந்தும் இவற்றின் மகத்துவம் உணராமல் நவீன யுகத்தில் பகுத்தறிவு எனும் பெயரால் நிந்தித்து வரும் இளைய சமுதாயத்தினரை காண்கிறோம். பல்வேறு கால கட்டத்தில் சோதனைக்குள்ளாகியும் இதன் அருமை உணர்ந்து திருவிழாக்களை தொடர்ந்து பின்பற்றி பொது மக்களிடையே ஆன்மிக சிந்தனைகளை வளர்ப்பதற்கும் பக்தி மார்க்கத்தை முன்னெடுத்து செல்லும் பணியிலும் சிலர் தொடர்ந்தபடிதான் உள்ளனர்.
அந்தவகையில் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் 31 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இலவச ஆம்புலன்ஸ், சாலையோர சோலைகள், ஊரணியை தூர் வாரல், ஆதரவற்ற வர்களுக்கு ஈம சடங்கு, கல்வி உதவி என பல்வேறு உதவிகள் நடைபெறுகிறது.
விநாயகர் திருவிழா நடைபெறும் ஒரு வாரம் முழுவதும் அன்னதானம், மகான்கள் அருளுரை, ஆசி, பட்டிமன்றம், திருவாசகம் முற்றோதல், பரதநாட்டியம், பாரம்பரிய இசை நிகழ்ச்சி, சமை யல் போட்டி, நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், சீர் வரிசையோடு இலவச திருமணம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, மழை வேண்டி வேள்வி என ஆன்மிகம் மற்றும் அமைதி சார்ந்த நிகழ்ச்சிகளை பெரும் விமரிசையோடு நடத்தி வருகின்றனர்.
விழா ஊர்வலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதுமை புகுத்தி பக்தர்களை ஆச்சர்யப்படுத்தி தங்கள் பால் ஈர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு மும்பை டோல் மேளத்தோடு, யானை அம்பாரி, குதிரை, மோகினி, பொய்க்கால், ஒயில், தாரை தப்பட்டை, நாதஸ்வரம் என மக்களை திரும்பி பார்க்க வைக்கின்றனர்.
புல்லு கட்டு கணபதி, கடையாணி கணபதி, டிராக்டர் வண்டி கணபதி, ஜல்லிக்கட்டு கணபதி என சூழ்நிலைக்கு ஏற்ப விநாயகரின் பல்வேறு உருவங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
திருவிழாக்கள் அவசியமாகிறது
இந்து மத நம்பிக்கையை கேளிப்பொருளாக்கி வரும் காலகட்டத்தில் ,இளைஞர்கள் பங்கு பெற வித்தியாசமான பணிகள் செய்வது அவசியமாகிறது. இறை வழிபாடு மட்டுமின்றி சமூக மேம்பாடு, கொண்டாட்டங்கள், அவர்கள் விரும்பும் கேளிக்கை, நலத்திட்ட உதவிகள், அலங்காரங்கள், பல்வேறு பாரம்பரிய நடனங்கள் என்பதோடு அவர்களையும் இவற்றில் பங்கேற்க உற்சாக படுத்த வேண்டியுள்ளது. பல்வேறு இடங்களில் பழமையான கோயில்கள் கேட்பாரற்று மாறி வரும் சூழலில் இது போன்ற மாற்றமான திருவிழாக்கள் அவசியமாகிறது.
-கண்ணன், அர்ச்சகர், வழிவிடு விநாயகர் கோயில்,.ராஜபாளையம். முக்கிய காரணியாக தொடர்ந்து கொண்டாடப்படும் இத்தகைய விழாக்களால் சமூக இளைஞர்கள் மத்தியில் அமைதி பெருகுவதோடு தேவையற்ற சிந்தனைகள் விலகிட வாய்ப்பு ஏற்பட்டு விடும். இளைஞர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ள, தவறான இணைய தள துர் சிந்தனைகளுக்கு இது போன்ற திருவிழாக்கள் நல்ல தீர்வாக அமைந்து வருகிறது. பெண்கள் மட்டுமே தொடர்ந்து கோயிலுக்கு சென்று வரும் சூழலில், இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரையும் பங்கு கொள்ள வைப்பதில், இது போன்ற பிரம்மாண்ட விழாக்கள் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.
ராமச்சந்திரன், அரிசி வியாபாரி.தலைமுறையினரை ஈர்க்க ஆன்மிகம் என்றாலே எட்டிக் காயாக பார்க்கும் இக்கால தலைமுறையினரை ஈர்க்க பிரம்மாண்டம் அவசியமாகிறது. அவை வெறும் அபிஷேகம் அலங்காரங்களோடு நின்று விடாமல் நலத்திட்ட உதவிகளோடு கூடிய ஆன்மிக பணிகள் என்ற வகையில் தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டிலேயே அதிக பொருட்செலவில் கொண்டாடப் படும் இத்திருவிழா ,ஆண்டு தோறும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சென்று பொது மக்களை இறை பணியில் ஈடுபட ஈர்ப்பது என்பது மிகுந்த பெருமை வாய்ந்தாகும்.
வேலாயுதராஜா, வியாபாரி அமைதி பெருகுவதே நோக்கம் ஒவ்வொரு ஆண்டும் ராஜ பாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள திடலில் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருவிழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு நடைபெறும் நிகழ்ச்சியால், இறைவன் பெயரில் சாமான்ய மக்கள் பலன் பெறுவதுடன், ஆன்மிக சிந்தனை , அமைதி பெருக வேண்டும் என்பதே நோக்கம்.
-
ராமராஜ், தலைவர்,மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம், ராஜபாளையம்.