பதிவு செய்த நாள்
08
செப்
2018 
01:09
 
 கால ஓட்டத்தில் மண்ணின் தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம்; நீர்நிலை களையும் பாழ்படுத்தி வருகிறோம். வரும், 13ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருக்கி றோம். பிரதிஷ்டை செய்யும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் நச்சு கலந்த சிலைகளை கரைத்தால், நீர்வளம் பாதிக்கும். இதற்கு மாற்றுவழி உண்டுஎன்பதை நிரூபித்துள்ளார், கோவையை சேர்ந்த இளைஞர் சுவரஜித் (27).பசுமை கணபதி எனும் விதை விநாயகர் சிலையை தயாரித்து, இயற்கையை நேசிப்பதற் கான விதையை  தூவியுள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...
கவர்ச்சிக்காக, பல கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்கவே, சோ அவேர் தொண்டு நிறுவனத்தை துவக்கினோம். எங்களோடு இளைஞர்கள் பலர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். இதன் சிறப்பம்சம், ரசாயன கலப்பின்றி, இயற்கையான களிமண்ணை பயன்படுத்துவதாகும்.
கூடவே, விதைகளையும் சிலைகளுக்கு நடுவே விதைத்திருக்கிறோம். அடுக்குமாடி குடியி ருப்புகளில் வசிக்கும் நகரவாசிகளுக்கு ஏற்ப, சிலைக்குள் தக்காளி, துளசி, வெண்டை, பச்சை மிளகாய் உள்ளிட்ட விதைகளை வைத்திருக்கிறோம். சிலையை கரைக்க நீர் நிலைகளைத் தேடி அலையத் தேவையில்லை. சதுர்த்தி முடிந்ததும், வீட்டுக்கு வெளியே வாளி அல்லது அகலமான பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி கரைத்தால் போதும்.
அதில் இருக்கும் களிமண், விதைகள், வாளிக்கு அடியில் கரைந்து தங்கி விடும். அதை சூரியவெளிச்சத்தில் வைத்தால் போதும்; ஒரு வாரத்தில் செடிகள் முளைக்கத் துவங்கி விடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம். இம்முறையில் கீரை வகைகளையும் சேர்த்துள்ளோம்.
ஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காகவும் பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொள்ளும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைத்துள்ளோம்.
பளிச்சிடும் வண்ணங்களில் இவ்விநாயகர் சிலைகள் இருக்காது. களிமண் நிறத்தில் கலை நுட்பத்துடன் வடிவமைத்துள்ள இச்சிலைகள், இரண்டரை இன்ச் முதல் உள்ளன. குறைந்தது, 25 முதல், 1,450 ரூபாய் வரை கிடைக்கும். தொடர்புக்கு: 96556 67775