பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
செய்துங்கநல்லூர்:கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. சரித்திர புகழ் பெற்ற கருங்குளம் வகுளகிரி மலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயிலில் வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பதியில் எழுந்தருளியுள்ள வெங்கடாசலபதியை சுபகண்டன் என்ற அரசன் தன் நோய் நீங்குவதற்காகக வழிபட்டு வந்தான். அப்போது அவரது கனவில் சுவாமி தோன்றி எனக்கு சந்தன மரத்தால் ஒரு தேர் செய்ய வேண்டும். அப்போது உன் நோய் கொஞ்சம் நீங்கும். பின்னர் சந்தன தேர் செய்த பின் 2 தேர்கால்கள் மீதமாக இருக்கும். அதில் நான் எழுந்தருளுவேன். அதைக் கொண்டு தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்தால் உன் நோய் முழுவதும் நீங்கும் என்று கூறினாராம். அவ்வாறு அமைந்தது தான் இந்த கோயில் என்பது வரலாறு என்று பொதுமக்களால் பேசப்படுகிறது.இத்தகைய புகழ் மிக்க கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. இதற்காக இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு யானை மீது அருகிலுள்ள தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி மாலை அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் துவங்கி 10.15 மணிக்கு முடிகிறது.இக்கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பள்ளத்தூர் சரஸ்வதி ராமநாதன் நேர்முக வர்ணனை செய்கிறார். சிறப்பு இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சிகளாக வரும் 3ம் தேதி இரவு ஸ்ரீரங்கம் பாண்டு ரங்காச்சாரியாரின் திருநாமம் பிரபாவம் நிகழ்ச்சியும், மறுநாள் 4ம் தேதி காலை டிவி புகழ் தாமோதர தீஷிதர் வெங்கடேச மகாத்மியம் என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்ச்சியும், மாலை பெங்களூர் ஸ்ரீமதி நாராயணனின் சீதா கல்யாணம் சொற்பொழிவு நிகழ்ச்சியும், 5ம் தேதி ஞாயிறு இரவு சென்னை ஆதம்பாக்கம் குமாரி வித்யாலெட்சுமி குழுவினரின் கர்நாடக சங்கீத இன்னிசை நிகழ்ச்சியும், 6ம் தேதி திங்கள் மாலை நெல்லை பெருமாள்புரம் ஸ்ரீமதி பிரியா சந்தான கிருஷ்ணன் ஸ்ரீனிவாச கல்யாணசொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. இக்கும்பாபிஷேக பூஜைகளை கோவிந்தராஜ் பட்டாச்சாரியார், சேஷபட்டாச்சாரியார், சுந்தரராஜ பட்டாச்சாரியார், ராஜேஷ் பட்டாச்சாரியார் செய்கின்றனர். கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை கருங்குளம் யூனியன் சேர்மன் பிச்சையா தலைமையில் பஞ்.,தலைவி ஜெயலட்சுமி சுடலைமணி செய்து வருகிறார். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துகளை ஸ்ரீவை.,டிஎஸ்பி.,மணி தலைமையில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி செய்து வருகின்றார்.