பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
திருநெல்வேலி:நெல்லை டவுன் கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயிலில் 10ம்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலுடன் இணைந்த நெல்லை டவுன் (காட்சி மண்டபம்) கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் ரிஷிவனம், தேவதாருவனம், தபோவனம் என போற்றப்படுகிறது.இங்கு உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனை மணம் புரிய அம்பாள் தவமிருந்து 38 அறங்களை வளர்த்ததாக வரலாறு உள்ளது. இங்கு சிவந்த நிறம் உடைய கம்பாநதி பாதாள வாகினியாக ஓடுகிறது. அகத்தியர் வேண்டுகோளை ஏற்று கம்பாநதி, விஸ்வேஸ்வர லிங்கம் கோயில் முன்பு தோன்றி காட்சியளித்து அருளியதாக ஐதீகம் உள்ளது. இறைவனை மணம் செய்ய அம்பாள் தவம் இருந்ததால் திருமணத்தடை நீங்க இங்கு சிறப்பு வழிபாடு நடத்தலாம் என ஆன்மீகப்பெரியவர்கள் கூறுகின்றனர். இக்கோயில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்தது. பக்தர்கள் பேரவை முயற்சியால் 2007ம்ஆண்டு கோயில் திறக்கப்பட்டு நித்யபூஜை துவக்கப்பட்டது. திருப்பணி துவங்கியது. முன்பக்க சிமென்ட் தளம், பிரகார சிமென்ட் தளம், தண்ணீர் வடிகால் தொட்டி அமைப்பு, கல்மண்டபம், தூண் புதுப்பித்தல், மேற்கூரை தளஓடு பதித்தல், வயரிங், பொருட்கள் பாதுகாப்பு அறை அமைப்பு, அம்பாள் விமானம், சுவாமி விஸ்வேஸ்வரர் விமானம், சாளக்கோபுரம், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி சந்நிதி அமைப்புப்பணிகள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. கம்பாநதி தீர்த்தக்குள சுற்றுச்சுவரில் அமைக்கப்படும் நந்தி சிலைகளை அழகுபடுத்தும் பணி நேற்று நடந்தது. கோயிலில் 10ம்தேதி காலை 9.56 மணிக்கு மேல் 10.21 மணிக்குள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 8ம்தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து நான்கு கால பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி, கம்பா நதி காமாட்சி அம்பாள் கைங்கர்ய சபா தலைவர், உறுப்பினர்கள், பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்