நிரபராதியான ஒரு இளைஞனை அம்ரு இப்னுலைது என்னும் கவர்னர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவனை காப்பாற்ற அவன் தாய் முயற்சி செய்தும் பலனில்லை. கடைசியாக மனு ஒன்றை எழுதிய தாய், கவர்னர் செல்லும் வழியில் காத்து நின்றாள். குதிரை மீது கம்பீரமாக வந்த அம்ரு காவலர்களிடம் “யார் இவள்? ஏன் நிற்கிறாள்?” எனக் கேட்டார். அதற்குள் அவள் “பிரபு... சிறையில் வாடும் என் மகன் நிரபராதி. அவனை விடுவிக்க உத்தரவிடுங்கள்” என்று சொல்லி மனுவைக் கொடுத்தாள். அம்ருவின் மனம் இரங்கவில்லை. “ காவலர்களே...சிறையில் கிடக்கும் இவளது மகனுக்கு நூறு கசையடி கொடுப்பதோடு, ஊர் மக்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் அவனை வீதியில் இழுத்து வாருங்கள்” என்றார். “உங்களின் மனம் போன போக்கிலே நீதி வழங்கினால் இறைவனின் நீதி என்ன ஆவது?” என்று அந்த தாய் கொதித்து எழுந்தாள். இறைவனுக்கு எதிராக தான் நீதி வழங்குவது முறையாகாது என்னும் பயம் அம்ருவின் மனதில் எழுந்தது. காவலர்களிடம் இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டதோடு, அநீதியில் இருந்து தன்னைக் காப்பாற்றிய அப்பெண்ணுக்கு நன்றி கூறினார். மனம் போன போக்கில் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்; நடுவுநிலை தவறாதீர்கள் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.