கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், மூன்று நாள் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் நேற்று காலை 10.30 மணியளவில் கொடியேற்றும் விழா நடந்தது. பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ணமன்றாடியார், செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பின் இரவு 7.00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை சுவாமி திருவீதி உலா மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை மற்றும் மாலை சுவாமி திருவீதி உலாவில், பாதயாத்திரை செல்லும் சஷ்டி குழுவினர் கிரிவலம் வருகின்றனர். வரும் 6ம் தேதி இரவு 7.00 மணியளவில் திருவீதி உலா முடிந்து திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின், 7ம் தேதி மாலை 5.00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், 5.00 மணிக்கு முதல் நாள் திருத்தேர் வடமும், வரும் 8, 9 தேதிகளில் மாலை 5.00 மணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் திருத்தேர் வடமும் பிடிக்கப்படுகிறது. வரும் 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு பரிவேட்டை தீர்த்தவாரியும் 11ம் தேதி காலை 9.00 மணிக்கு சுவாமி தரிசனம், இரவு 9.00 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. 12ம் தேதி இரவு 7.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.