பத்திரிக்கை அச்சிட்டு.. அரசுக்கும், வேம்புக்கும் ‘டும்டும்
பதிவு செய்த நாள்
11
செப் 2018 10:09
பெ.நா.பாளையம், மக்கள் அனைத்து வளமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ , துடியலுார் அருகே அரச, வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்தப்பட்டது. துடியலுார் ஜி.என்.,மில்ஸ் பிரிவு அருகே ஐ.டி.ஐ., பின்புறம் திருவள்ளுவர் நகர் உள்ளது.
இங்குள்ள அரச, வேம்பு மரங்களுக்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து திருமணம் நடத்தினர். இதற்காக, 10 நாட்களுக்கு முன் திருமண பத்திரிக்கை அச்சிட்டு, வீடு, வீடாக வழங் கினர். மணமகன், மணமகள் வீட்டார் என, இரு பிரிவாக பக்தர்கள் பிரிந்து, சீர்வரிசை கொண்டு வந்தனர். மண மகனான அரச மரத்துக்கு பட்டு வேட்டி, சட்டை அணிவிக்கப்பட்டு மண மகன் கோலத்திலும், வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை, பூ அணிந்து மண மகள் கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டது. திருமாங்கல்யத்தை பொதுமக்கள் சீர்வாதம் செய்து கொடுக்க, மேள, தாள ம் முழங்க குருக்கள் முன்னிலையில் அரசு, வேம்பு திருமணம் நடந்தது. சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பால்குடங்கள், சீர்வரிசை, வேள்வி வழிபாடுகள் நடந்தன. பொதுமக்கள் கூறுகையில், ‘அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்தால், அப்பகுதியில் நிலவும் தோஷம் நீங்கும். தடைபட்ட திருமணம் விரைவில்கை கூடும். போதுமான மழை பொழிந்து, நாடு சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்’ என்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
|