சிங்கம்புணரி பெருமாள் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2018 11:09
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சீரமைத்து பாது காக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயில் முன்புறம் பழமையான தெப்பக்குளம் உள்ளது.
இக்குளத்து தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தெப்பக்குள தண்ணீரை உடம்பில் தெளித்துக் கொண்டு அருகில் உள்ள கிணறு, தொட்டி தண்ணீரை குளிக்க பயன்படுத்துகின்றனர்.
இக்கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் தெப்பக்குளத்தில் வந்து சேர வசதியாக கால்வாய், பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இக்கால்வாய் அருகிலேயே நகரின் கழிவுநீர் ஓடையும் செல்கிறது. மழைக்காலங்களில் இந்த இரு கால்வாய்களும் ஒன்றாக சேர்ந்து தெப்பக்குளத்தில் சாக்கடை நீரும், குப்பையும் கலந்து விடுகிறது.
அதோ குளத்தில் சேரும் கால்வாயின் உயரம் குறைவாக இருப்பதால் கூடுதல் தண்ணீர் தேங்க வழியில்லாமல் போய் விடுகிறது.எனவே இக்கல்வாய் தண்ணீரை மேற்கு படித்துறை வழியாக குளத்தில் சேரும் வகையில் அமைப்புகளை மாற்ற வேண்டும். நான்கு ரத வீதிகளில் பெய்யும் பெரும்பாலான மழை நீர் கழிவு நீர் கால்வாயில் சென்று வீணாகிறது. இந்த தண்ணீ ரும் கோயில் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாற்றி ஏற்படுத்த வேண்டும்.
இக்கோயில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலும், தெப்பக்குளம் சிவபுரிபட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலும் வருகிறது. இதனால் இக்குளத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீன் பாசி ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுப்பவர்கள் மீன்களின் உணவுக்காக பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து இக்குளத் தில் கொட்டி விடுகின்றனர். இதனால் தெப்பக்குளத்தின் புனிதம் பாதிக்கப்படுகிறது. இக்குளத்தில் வணிக நோக்கில் மீன்களை வளர்ப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும்.