பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
வீரபாண்டி: சித்தர்கோவில், சுற்றுப்பாதை சாலை முழுவதும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக, விளக்கு வசதி இல்லாமல் உள்ளதால், பக்தர்கள் அச்சப்படுகின்றனர். இளம்பிள்ளை அருகே, சித்தர்கோவில் சித்தேஸ்வர சுவாமி கோவிலை சுற்றி வரும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், தார்ச்சாலை போடப்பட்டது. இளம்பிள்ளையில் இருந்து வருபவர்கள், எளிதாக வந்து சென்றனர். தற்போது பராமரிப்பில்லாத காரணத்தால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தெருவிளக்குகளும் இல்லாததால், இவ்வழியாக செல்ல பக்தர்கள் அச்சப்படுகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், பகலிலேயே மது பாட்டில்களுடன் குடிமகன்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
இதுகுறித்து, சித்தர்கோவில் செயல் அலுவலர் சங்கரன் கூறியதாவது: கோவில் சுற்றுவட்டப் பாதையில், சுற்றுலாத்துறை மூலம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை விரைவில் அமைக்கப்படவுள்ளது. வீரபாண்டி எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து தெருவிளக்குகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். தார்ச்சாலை பணி முடியும் போது, விளக்கு வசதியும் ஏற்படுத்தி, நுழைவு வாயிலுக்கு கதவு போட்டு பாதுகாப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.