பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும், 1,800 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும், 1,800 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (செப்., 13ல்) காலை, 5:00 மணியில் இருந்து அந்தந்த பகுதியில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பல இடங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி, பெண்களுக்கான கோலப் போட்டி, இளைஞர்களு க்கான கபடி, உறியடித்தல் போட்டி நடந்தது. இந்து அன்னையர் முன்னணி சார்பில், திருவிளக்கு பூஜை, உலக நலன் வேண்டி திருப்பூர் கிழக்கு பகுதி சார்பில், கூட்டு பிரார்த்தனை நடத்தினர். மேலும், ஸ்ரீநகரில், 208 விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவிலில், 10 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் துவக்கி வைத்தார். ராமமூர்த்தி நகரில், 108 சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தெற்கு பகுதியில், 250 பெண்கள் முளைப்பாலிகை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அதேபோல், மாநகரில் பல இடங்களில், பாரத அன்னையர் முன்னேற்ற கழகம், இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா, இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா), இந்து மக்கள் கட்சி (தமிழகம்), தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத், பாரத் சேனா மற்றும் பொதுமக்கள் என, பலரும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
* பாரத் சேனா சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 53 இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஊர்வலமாக எடுத்து வந்து, 17ம் தேதி விசர்ஜனம் நடக்கிறது.
* சிவசேனா மற்றும் யுவசேனா அமைப்புகள் சார்பில் ஆறு பகுதிகளில் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை நாளை 15ம் தேதி ஊர்வலமாக சென்று விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
* இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது சிலைகள் நாளை மாலை விசர் ஜனம் செய்யப்படுகிறது. முன்னதாக ஆலங்காட்டில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
* தமிழ் மாநில சிவசேனா சார்பில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு துவங்கியது.
* அவிநாசி: அவிநாசி வட்டாரத்தில், இந்து முன்னணி சார்பில், 55 மற்றும் வடக்கு ஒன்றிய கிராமங்களில், 38 இடங்களிலும், விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சேவூர், திருமுருகன்பூண்டி, கருவலூர், தெக்கலூர் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள், நாளை மதியம், அவிநாசி, செங்காடு திடலுக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறுமுகையில் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப் படுகிறது.
* பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், இந்து முன்னணி சார்பில், 80க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. மாவட்ட தலைவர் தாமு வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். நகர தலைவர் லோகநாதன் முன்னி லை வகித்தார். பாரத மாணவர் பேரவை சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பங்கேற்ற பக்தர்களுக்கு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
* காங்கயம்: காங்கயம் பகுதியில் வி.எச்.பி., சார்பில் 17 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று (செப்., 13ல்) மாலை அவை ஊர்வலமாக எடுத்து சென்று, திட்டுப்பாறை பகுதியில் விசர்ஜனம் நடந்தது.