பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
திருத்தணி:திருத்தணி மலைக்கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் வசதிக்காக நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள், தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். முடி காணிக்கை மண்டபத்திற்கு நிரந்தர கட்டடம் இதுவரை ஏற்படுத்தவில்லை.
தற்போது, மாடவீதியில் இலவச கழிப்பறை கட்டடம் அருகே, முடி காணிக்கை செலுத்தும் இடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, முடி காணிக்கை செலுத்துவதற்கு ஒரு கோடி ரூபாயில், நவீன முடி காணிக்கை மண்டபம் ஏற்படுத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக, கோவில் பொதுநிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டது.
தற்போது, நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கு மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்தம் இடத்தில், கட்டுமான பணிகள் துவங்கி, துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
இது குறித்து, கோவில் தக்கார் வே. ஜெய்சங்கர் கூறியதாவது:
பக்தர்கள் நலன் கருதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மொத்தம், 40 அடி அகலமும், 80 அடி நீளமும் கொண்ட இரண்டு அடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில், முடி காணிக்கை செலுத்தும் அறை, கழிப்பறை, நவீன குளியல் அறை மற்றும் ஆடைகள் மாற்றும் இடம் ஏற்படுத்தப்பட உள்ளது.இப்பணிகள், ஆறு மாதத்தில் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.