பதிவு செய்த நாள்
24
செப்
2018
02:09
ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி தொடரப்பட்டவழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாநிலத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக் குட்பட்ட கோவில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்தி, அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து வரும், செப்., 30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, ஊட்டி மாவட்ட நீதிபதி வடமலை தலைமையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், நீதிபதியுமான சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று 23ல் ஊட்டி மாரியம்மன் கோவிலில் திடீர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, ஜலகண்டேஸ்வர கோவிலிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
மாவட்ட நீதிபதி வடமலை கூறுகையில், உயர்நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவை அடுத்து, மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை செப்., 30க்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும், என்றார்.