பணகுடி:பணகுடி ராமலிங்கசுவாமி - சிவகாமி அம்பாள் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.பணகுடியில் அமைந்துள்ள ராமலிங்கசுவாமி - சிவகாமி அம்பாள் கோயில் மூர்த்தி தீர்த்த சிறப்பால் மேம்பாடு கொண்டதாகும். ராமலிங்கசுவாமி அம்பாளுடனும், நம்பிசிங்கபெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடனும் ஒரே வளாகத்தில் இருகோயில்கள் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பு. இங்குள்ள பெருமாளை வடநாட்டு யாத்ரீகர்கள் "சோட்டா நாராயணா என்று வழிபட்டு செல்வதை இன்னமும் கடைபிடித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு, கும்பாபிஷேகம், சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை, மின் அலங்காரம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து மாலை சுமார் 6.40 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.இறுதிநாளான 10ம் நாள் விழாவான இன்று (6ம் தேதி) இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளி 11 வளையம் சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.