பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
ஆழ்வார்குறிச்சி:கடையம் முப்புடாதியம்மன் கோயிலில் நேற்று நடந்த ஆறாம் திருநாள் மண்டகப்படியில் பூந்தட்டு ஊர்வலம் நடந்தது.கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் கீழ்புறம் கீழக்கடையத்தில் பத்திரகாளியம்மன் உற்சவ கோயிலும், ராமநதி அணைக்கு செல்லும் வழியில் பத்திரகாளியம்மனின் மூலக்கோயிலும் உள்ளது. காலம் காலமாக முப்புடாதியம்மன், பத்திரகாளியம்மன் கோயில்களில் ஒரே நாளில் கால்நாட்டுதல், காப்பு கட்டுதல், கொடைவிழா, திருத்தேரில் அம்பாள் எழுந்தருளல் மற்றும் எட்டாம் பூஜை விழா ஆகிய அனைத்தும் ஒரே நாளில் நடைபெறும். முப்புடாதியம்மன் கோயிலில் மண்டகபடிதாரர்களும், பத்திரகாளியம்மன் கோயிலில் பதினெட்டு பட்டி கிராமத்தை சேர்ந்த மண்டகபடிதாரர்களும் விழாவினை நடத்துவர். ஆறாம் திருநாளான நேற்று முப்புடாதியம்மன் கோயிலில் காலையில் 301 பெண்கள் பூந்தட்டு ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்கு வந்தனர். மேளதாளம், சிலம்பு விளையாட்டு, ஆட்டம் பாட்டங்களுடன் ஊர்வலம் வந்தது. பால்குட ஊர்வலமும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் கூடிய தீபாராதனையும், மாலையில் 251 பேர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமும் வந்தனர். பின்னர் அலங்கார தீபாரதனையும், அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளலும் நடந்தது. கடையம் பத்திரகாளியம்மன் கோயிலில் காலையில் சிறப்பு பூஜை, தவணை கமலா குழுவினரின் வில்லிசை கச்சேரி, இரவு 8 மணிக்கு அம்மன் கண் திறப்பு வைபவம், மாவிளக்கு ஊர்வலம், தீபாராதனை, கடையநல்லூர் அம்மையப்பன் குழுவினரின் நையாண்டி மேள கச்சேரி, திண்டுக்கல் தேவிகலா குழுவினரின் கரகாட்டம், செண்டை மேளம் நடந்தது. இரவு அம்மன் எழுந்தருளல் நடந்தது.இரு கோயில்களிலும் நாளை (7ம் தேதி) கொடை திருவிழா நடக்கிறது. கடையத்தில் இரு கோயில்களிலும் ஒரே நேரத்தில் கொடை திருவிழா நடப்பதால் கடையம் களை கட்டியுள்ளது.