பதிவு செய்த நாள்
28
செப்
2018
11:09
மாமல்லபுரம்: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் வளாகத்தில், நிழற்பந்தல் இல்லாததால், பக்தர்கள் வெயிலில் அவதிப்படுகின்றனர். மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், 108 வைணவ கோவில்களில் ஒன்றான, நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. திருமண பரிகார கோவிலாக விளங்கும் இக்கோவிலை, தமிழக ஹிந்து சமய அறநிலைய மற்றும் மத்திய தொல்லியல் ஆகிய துறைகள் நிர்வகிக்கின்றன. ஜூலை, 5ல், மஹா கும்பாபிஷேகம் நடந்து, புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில், பக்தர்கள் குவிகின்றனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில், பக்தர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுமதிக்கவும், நிழலில் காத்திருக்கவும், நிழற்பந்தல் அமைக்கப்படவில்லை. வளாகத்தில், பக்தர்கள் நலன் கருதி, குறுகிய பந்தல், சவுக்கு தடுப்பு அமைக்க, அறநிலைய நிர்வாகம் முயன்றபோது, தொல்லியல் துறை நிர்வாகம், அதை தடுத்து, தடுப்பை அகற்றியது. வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலையில், வெயிலில் அவதிப்படுகின்றனர். முதியோர், பெண்கள், மயங்கி பரிதவிக்கின்றனர். தொல்லியல் துறை, தற்காலிக தடுப்பு, நிழற்பந்தல் ஆகியவற்றை அனுமதிக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.