திருப்புவனம்: திருப்புவனம் அருகே மழை வேண்டி குதிரை எடுப்பு விழா நடந்தது. ஐந்து ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் திருப்புவனம் பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி 9 ஆண்டுகளுக்கு பின், நயினார் பேட்டை அதிகமுடைய அய்யனார் கோயிலுக்கு குதிரை எடுப்பு திருவிழா நடத்தினர். நேற்று முன்தினம் மாலை குதிரை எடுப்பு ஊர்வலம் திருப்புவனம் புதுார் வேளார் தெருவில் துவங்கியது. கரகாட்டம், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நயினார் பேட்டைக்கு சென்றனர். அச்சமயத்தில் மழை பெய்ததால், நனைந்தபடியே 5 கி.மீ.,க்கு குதிரை எடுத்து சென்றனர். முன்னதாக அய்யனாரை சுமந்து வரும் குதிரைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. குதிரைகளுக்கு புது வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டன. இரவு 9:00 மணிக்கு அய்யனார் கோயிலை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழா ஏற்பாட்டை கிராம மக்கள் செய்தனர்.