பதிவு செய்த நாள்
28
செப்
2018
12:09
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில், மழைநீர் தேங்காமல் இருக்க, மணல் குவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவில். இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் உள்ளிட்ட சுவாமிகள் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நிலம் தொடர்பான பரிகார கோவிலாக விளங்குகிறது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கோவில் வளாகம் மற்றும் இதையொட்டிய நாற்புற சாலைகள், சமதளப் பரப்பில் அமைந்திருந்தன.நாளடைவில், சாலைகள் உயர்ந்து, அருகில் உயரமான கட்டடங்கள் உருவாகி, கோவில் வளாகம் தாழ்ந்தது.இங்கு பெய்யும் மழைநீர், அருகாமை பாறைக்குன்றில் பெருக்கெடுக்கும் மழைநீர், கோவில் வளாகத்தில் குளம்போல் தேங்கி, வெளியேற வழியின்றி, சேறும் சகதியுமாக சீர்கேடாக இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கும் நிலையில், கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, அறநிலையத் துறை சார்பாக, தற்போது மணல் குவிக்கப்பட்டு உள்ளது.