பதிவு செய்த நாள்
28
செப்
2018
02:09
""ஆநந்த சாகரஸ்தவம்
நீலகண்ட தீட்சிதர் வடமொழியில் மூன்று பெரிய காவியங்களையும் சிற்றிலக்கியம் என்று கருதக்கூடிய பல நூல்களையும் ஸ்ரீ மீனாக்ஷி யம்மனைக்குறித்து ""ஆநந்த சாகரஸ்தவம் என்ற 107 சுலோகங்களை உடைய ஒரு நெஞ்சை உருக்கும் தோத்திர நூலையும் எழுதிய மஹா கவி. அத்துடன் லௌகீக வாழ்விலும் உயர்ந்த நிலையில் இருந்தவர். அவர் பல வருடங்களாக திருமலை நாயக்கருக்கும் முதன் மந்திரியாயிருந்து அவர் செய்த ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோவில் திருப்பணிகள் உற்சவாதிகள் முதலியவைகளைத் நிர்மாணிப்பதிலும், நடத்துவதிலும் ஊக்கம் காட்டி பெரும் பங்கு கொண்டவர். இன்றுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் நீலகண்ட தீட்சிதரைப் பற்றி கேட்டிருக்கவே மாட்டார்களாதலால், அவர்களுடைய வாழ்க்கை, நூல்கள் ஆகியவைகளைப் பற்றிச் சுருக்கமாகவாவது எழுதுவது புனிதமான மீனாக்ஷியம்மன் ஆலயத்தின் பெருமைக்கும், அருளுக்கும் காரணமாயிருந்தவர்களின் பக்தியும் ஆழமான ஆன்மீக ஈடுபாடுகளையும் நாம் புரிந்துகொண்டு மகிழ்வுற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
நீலகண்ட தீட்சிதர் காஞ்சீபுரம் பக்கத்திலுள்ள அடையப்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பல கவிஞர்களையும் தோற்றுவித்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். கி.பி 16ஆம் நூற்றாண்டில் சிறந்து விளங்கி வடமொழியில் நூற்றுக்குமேல் நூல்கள் எழுதி அக்காலத்தில் வேலூரை ஆண்ட நாயக்க மன்னரால் ஆதரிக்கப்பட்ட அப்பய்ய தீட்சிதர், இந்த ஊரைச் சார்ந்த சிவபக்தர். இவருடைய சகோதரரின் பேரன் நீலகண்ட தீட்சிதர். நீலகண்டனின் பெற்றோர்கள் அவர் சிறுகுழந்தையாய் இருக்கும்போதே காலமாய்விட்டபடியால் அப்பய்ய தீட்சிதரே பையனை வளர்த்து கல்வி புகட்டினார். குடும்பத்தின் சொத்துப்பிரிவின் காரணமாக, ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நுண்ணிய அறிவையும் பேராற்றலையும் பெற்ற நீலகண்டர் தமது 12வது வயதில் பாட்டனாரின் ஆசியைப் பெற்று, தனது தாயாருடன் தெற்கே புறப்பட்டார். கொஞ்ச காலம் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்து தனது கல்வியை அபிவிருத்தி செய்து கொண்டு மதுரையில் வந்து குடியேறினார். தமது பிரசங்கங்களின் விளைவாக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
ஒரு சமயம் இவர் தேவி மகாத்மியத்தைப் பற்றி பிரவசனம் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கச் செய்து கொண்டிருந்தார். இரவில் நகரத்தைச் சுற்றும் வழக்கமுடைய திருமலை நாயக்கரும், பிரவசனத்தைக் கேட்டு ஆனந்தித்தார். பின்னர் தீட்சிதரையும் அழைத்து நடத்திய வித்வத் சபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பயனாக திருமலை நாயக்கர் அவரைத் தமது பிரதான மந்திரியாக்கினார். தீட்சதரின் மேதைமையும் நுண்ணிறிவும் தமது அரசாட்சிக்கு ஒரு பெரிய அரணாக இருக்கும் என்று நாயக்கர் கருதி வந்தார். திருமலை நாயக்கர் தொடங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் திருப்பணிகள் கி.பி 1626 முதல் 1633 வரை தொடர்ந்து நடந்தன. முன்னால் கூறியது போல இந்த வேலைகளுக்கு மந்திரி தீட்சிதரே மேற்பார்வையாளராக இருந்தார். புதுமண்டபம் என்று சொல்லப்படும் வசந்த மண்டபத்தைக் கட்டும்போது பிரதம சிற்பியான சுமந்திர மூர்த்தி ஒரு தூணிற்கு ஏகபாத மூர்த்தியைச் செதுக்கி முடித்து, அதை நிறுத்த நன்னாளும் பார்த்திருக்கிறார்.
ஏகபாத மூர்த்தி என்பது பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடமிருந்து உற்பத்தியானதாக இருந்த ஐதீகத்தைக்கொண்டு செதுக்கப்பட்ட உருவம். இந்தத் தூணை வைக்ககூடாதென்றும் வைப்பது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றும் வைணவர்கள் நாயக்கரிடம் சென்று ஆட்சேபிக்கவே மன்னன் இது சம்பந்தமாக சாஸ்திரங்களைக் கற்ற பல பெரியோர்களின் வாதங்களை ஆறுமாதங்கள் வரைக் கேட்டு இறுதியில் சிற்பி செதுக்கிய மூர்த்தியுள்ள தூணை நிறுவ அனுமதி கொடுத்தார். இந்தத் தகராறில் சைவர்கள் பக்கம் வாதாடியவர் மந்திரி நீலகண்ட தீட்சிதரே.
இந்த மண்டபத்தின் சிற்ப அனுமதி சம்பந்தமாக பின்னர் தோன்றிய ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வாகவே ஆநந்த சாகரஸ்தவம் என்ற பாடல் பிறந்ததாக ஒரு கதை வழங்குகிறது. சிற்பிகளுக்கு அரசனான சுமந்திர மூர்த்தி மண்டபத்தின் மத்தியிலுள்ள ஒரு தூணுக்குத் திருமலை நாயக்கரின் உருவத்தையும், அவர் பக்கத்தில் சில ராணிகளுடன் உருவங்களையும் அமைத்துக் கொண்டிருந்தான். நாயக்கரின் பட்ட மகிஷியின் உருவத்தைச் செதுக்கும்போது அவர் துடை ஒரு துண்டு சிதறி பின்னம் ஏற்பட்டது. சிற்பி பலதடவை முயன்றும் இதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் இதை தீட்சிதரிடம் சொல்லிக் கவலைப்பட்டான். மந்திரி சிந்தனை செய்து இதில் ஏதோ தெய்வீகம் இருப்பதாகக் கருதி, சிற்பியிடம் ஒருக்கால் பட்ட மகிஷியின் துடையில் மச்சம் இருக்கலாம் என்று கூறி மேற்கொண்டு வேலையைத் தொடர்ந்து செய்யக் கட்டளையிட்டார். ஒருநாள் மன்னன், ராணியின் உருவத்தைப் பார்த்து துடையிலுள்ள பின்னத்தைப் பற்றி வினவ சிற்பி நடந்ததைச் சொன்னான்.
தீட்சிதருக்கு தமது பட்ட மகிஷியின் துடையிலுள்ள மச்சம் எப்படித் தெரிந்தது என்று நாயக்க மன்னன் கலக்கமடைந்து பின்னர் மந்திரியின் மீது சந்தேகம் கொண்டான். மறுநாள் காலையில் தீட்சிதரின் கண்களைப் பிடுங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் தமது காவலாளிகளைக் கூப்பிட்டு மந்திரியை உடனடியாக அழைத்து வரும்படியாகக் கட்டளையிட்டான். தீட்சிதர் பூசை செய்து கொண்டிருக்கும்போது காவலாளிகள் அரசனின் ஆணையைத் தெரிவித்தார்கள். இந்த அழைப்பு அரசனின் அசாதாரணமானதால் மந்திரி சற்று சிந்தனையில் ஆழ்ந்து உண்மையை ஊகித்துக் கொண்டார். காவலாளிகளிடம் மன்னனின் எண்ணித்தைத் தாமே பூர்த்தி செய்து விட்டதாக நாயக்கரிடம் கூறும்படி சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு பூசையில் உபயோகித்த கற்பூரஜ்வாலையைத்தம் கண்களில் வைத்துக்கொண்டு பார்வையை இழந்தார். இதை அறிந்த மன்னன் தாம் அவசரத்தில் செய்த முடிவின் தவற்றையும் தமது உத்தமமான மந்திரிக்குச் செய்த அபசாரத்தையும் நினைத்து வருந்தி ஓடோடியும் தீட்சிதர் வீட்டிற்கு சென்று மன்னிப்புக் கேட்டு வருந்தினான். இந்தச் சமயத்தில் தீட்சிதர் ஜகன்மாதாவாகிய மீனாக்ஷியை நினைத்து ""ஆநந்த சாகரஸ்தவப் பாடல்கள் உணர்ச்சியுடன் பாடினார். அம்மனின் அருளால் இழந்த பார்வையை அவர் மீண்டும் பெறவே மன்னன் மகிழ்ச்சியும் ஆறுதலுமடைந்தான் என்பதுதான் கர்ண பரம்பரையாக வழங்கும் கதை.
பின்னர் அரச சேவையை உதறித்தள்ளிவிட்டு நெல்லை ஜில்லாவில் தாமிரபரணிக்கரையிலுள்ள பாலாமடை கிராமத்தில் வாழ்ந்தார். அவருடைய சமாதியும் அவ்வூரில் இருக்கிறது. ஆநந்த சாகரஸ்தவம் மிகச்சிறந்த தோத்திர நூல்களில் ஒன்று. அத்துடன் அது ஒரு அற்புதமான ஞானநூலாயும் இருக்கிறது. வேதாந்த சிகாமணியும் ஞான பண்டிதருமான தீட்சிதர் சாத்திர அறிவு ஞான மார்க்கம், வேதாந்த விசாரணை முதலியவைகளால் பயனில்லை என்றும், பக்திமார்க்கத்தின் தராதரத்தையும் நுட்பமாக அலசி எல்லா மோட்ச சாதனைகளைப்பற்றி தர்க்க ரீதியாக விவாதித்து இறுதியாகத் தம்மையே அம்மனிடம் ஒப்புவித்துவிடுவதாக உணர்ச்சியுடன் கூறுகிறார். தேவியின் திவ்ய மங்கள சொரூபத்தை அழகான ஸ்லோகங்களில் ஆர்வத்துடன் வர்ணிக்கிறார். இந்தப் பாடல் எல்லோரும் மூலத்திலாவது மொழிபெயர்ப்பிலாவது படித்து இன்புறத்தக்கது. இதன் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஸ்ரீ மஹாலிங்க சாஸ்திரிகளால் செய்யப்பெற்று பல வருடங்களுக்கு முன் ஸ்ரீ காமகோடி பீட கோசஸ்தானத்தால் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.
நீலகண்ட தீட்சிதர் வட மொழியிலுள்ள மஹாகவிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் "சிவலீலார்ணவம் என்று மதுரை ஈசனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பொருளாகக் கொண்டு ஒரு பெரிய காவியத்தைச் செய்திருக்கிறார். இது அவர் மதுரையில் மந்திரியாயிருந்த போது எழுதிய காவியம். சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தமிழ்நாட்டின் சைவ சமயத்தையும் பண்டைத் தமிழ் இலக்கியத்தையும் மதுரையம்பதியிலுள்ள ஆலயத்தின் தொன்மை யையும் சேர்ந்த ஒரு சிறப்புப் பொருள். வடநாட்டைச் சேர்ந்த வடமொழிப்புராணங்களைத் தழுவிய பொருளல்ல. ஸ்காந்தத்திலுள்ள ஹாலாஸ்ய மஹாத்மியம் வடமொழியிலிருந்த போதிலும் பொருள் தமிழையும், தமிழ்நாட்டுச் செல்வத்தையும் சைவத்தையும் சேர்ந்தது. நீல கண்ட தீட்சிதர் இதைக் கையாண்டு ஆக்கிய மாபெரும் காப்பியம் வடமொழியில்இருந்து போதிலும் அது தமிழ்க் கலைச்செல்வமே என்று தயக்கமின்றி அது கூறலாம். அவர் எழுதியிருக்கும் மற்ற இரண்டு காவியங்களான கங்காவதரணம் ""நீலகண்ட விஜய சம்பு ஆகியவை நமது பாரத நாட்டு புராணக் கதைகளைத் தழுவிச் செய்யப்பட்ட சிறந்த நூல்கள். இவற்றின் இலக்கிய நயங்களைப் பற்றி அக்கால வடமொழிப்புலவர் பெரிதும் புகழ்ந்திருக்கிறார்கள். நகைச்சுவை ததும்பும் சில சிறிய நூல்களையும் நள சரித்திரம் என்ற முற்றுப் பெறாத நாடகத்தையும், சிவபரமாச் சில சமயநூல்களையும் எழுதியிருக்கிறார்.
நீலகண்ட தீட்சிதர் தமது நூல்களில் காசியின் மஹிமையைக் குறிப்பிட்டு அந்த க்ஷேத்திரத்திற்குப் போக வேண்டுமென்ற ஏக்கத்தைச் சில பாடல்களில் வெளியிட்டிருக்கிறார். இருந்த போதிலும் அவர் வாழ்நாளில் அவருக்கு இறுதிவரை காசி யாத்திரை கிட்டவில்லை என்று ஸ்ரீ மஹாலிங்க சாஸ்திரிகள் கருதுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதரின் வாழ்க்கையைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் அருமையான ஒரு நூலைத் தமிழில் எழுதி வெளியிட்ட ஸ்ரீ பி.எஸ். கிருஷ்ணன் சொல்வதாவது : முடிவில் அவர் காசியை அடைந்து கங்கையில் நீராடி தன் வாழ்நாள் விருப்பத்தைப் பெற்றார் என்பது அவருடைய சிவலீலாவர்ணத்திலிருந்து தெளிவாகிறது. தமது வாழ்நாள் முழுவதும் காசிக்குப் போக வேண்டுமென்று ஏங்கிய தீட்சிதருக்கு இறுதியாக காசியாத்திரை கிட்டியது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் இந்த விஷயத்தில் தீட்சிதரைவிட சாஸ்வத காசிவாசம் பெற்ற குமரகுருபர ஸ்வாமிகள் அதிக அதிர்ஷ்டசாலியாய் இருந்திருக்கிறார் என்று கூறி கட்டுரையை முடிப்போம் என ஆசிரியர் கூறுகிறார்.
""இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்பறுத்து சோதியா அன்பமைத்து
சீரார்ப் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலம்