Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 31. வயிநாகரம் செட்டியார் திருப்பணிகள்
"வயிநாகரம் செட்டியார் திருப்பணிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2018
03:09

தென்பாண்டி நாட்டில் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலங்கள் பதினான்கினுள் திருவாலவாய் ஆகிய மதுரை துவாதசாந்த திருத்தலம் என்றும் இங்கு எழுந்தருளியுள்ள சொக்கலிங்கப் பெருமான் எல்லோருக்கும் முன்னே தோன்றி முளைத்தவன் என்றும் சைவப்பெருநூல்கள் சாற்றுகின்றன. இத்திருத்தலத்து திருக்கோவில் திருக்கோபுரங்கள் மண்டபங்கள் தீர்த்தங்கள், வாகனங்கள் ஆகிய திருப்பணிகள் தேவர்கோனாகிய இந்திரன் முதல் மன்னர்கள் மாந்தர்கள் வரை பலர் திருப்பணிகளைச் செல்வர்களால் பண்டைக்காலம் தொட்டு செய்யப்பெற்று வந்துள்ளனர்.

திருவாலவாயுடையார் திருப்பணி மாலை என்னும் சிறிய நூல் ஒன்றை மதுரைத்தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்களும், சிவநெறியையும் செந்தமிழையும் இருகண்கள் எனப் போற்றி வந்தவர்களுமான பாலவ நத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் பரிசோதித்துச் செந்தமிழ் திங்களிதழினை வெளியீடாகத் தந்திருக்கிறார்கள். இந்த நூல் மதுரைத் தமிழ் சங்கத்து பிரவேச வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக அந்தக் காலத்தில் இருந்தது. இதில் தேவேந்திரன் பல யுகங்களுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்த தங்க விமானம் முதல் 18ம் நூற்றாண்டில் அழகிரி நாயக்கர் அமைத்த மண்டபம் வரை பல திருப்பணிகள் கூறப்பெற்றுள்ளன.

பாண்டி நாட்டை ஆண்ட நாயக்க மன்னர்கள் மதுரைத் திருக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகளுக்குச் பிறகு அதில் சரியான கவனம் வைத்து வேறு யாரும் அப்பணியை மேற்கொள்ளாமையால் காலப்போக்கில் திருக்கோயில் சிற்சில பழுதுகளை அடையத் தொடங்கியது.

அந்தவேளையில் தான் வயிநாகரம் நாகப்பச் செட்டியார் அவர்கள் மதுரைத் திருகோவிலைச் செப்பனிட்டு குடமுழுக்கு விழாச் செய்யத் திருவுளம் பற்றினார்கள். செட்டிநாட்டில் திருக்கோவில் திருப்பணிகள் செய்த எல்லாச் செல்வர்களுக்கும் நாகப்பச் செட்டியார் அவர்களே வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவர்கள் காலத்திற்கு முன்பு சிவ தர்மங்கள் பலவற்றை நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் செய்து வந்தவர்களாயிலும் திருக்கோவில் திருப்பணி என்பது நாகப்பச் செட்டியார் அவர்களாலயே முதன் முதலில் மேற்கொள்ளப்பெற்றது என்பதும் அங்கனம் மேற்கொள்ளப் பெற்றது மதுரைத் திருப்பணியே என்பது நினைவு கூறுதற்குரியன.

 மதுரைத் திருப்பணியைத் துவங்கி அப்பணி நடைபெற்றுகொண்டிருக்கும்போது பாண்டிய நாட்டில் உள்ள பதிகம் பெற்ற மதுரைத் திருக்கோவில்களையும் பழுதுபார்த்துப் புதுப்பிக்க இவர் எண்ணிணார். அவ்வண்ணம் திருப்பரங்குன்றம் அம்பாள் கோயில் திருவாப்பனூர் திருக்கோயிலில் சில பகுதிகள், திருவாதவூர் அம்பாள் கோயில், திருப்பத்தூர் அம்பாள் கோயில், திருக்கானப்பேர் சோமேசர் கோவில். திருவேடகம் திருக்கோயிலில் சில பகுதிகள் ஆகிய திருப்பணிகள் நிகழ்ந்தன.

 தனவணிக நாட்டில் அமராவதிப் புதூர் எனும் ஊரில் வயிநகரம் இராமநாதன் செட்டியார் அவர்களின் மக்களாக நால்வர் தோன்றினர். அவர்கள் நாகப்பச் செட்டியார், வெங்கடாச்சலம் செட்டியார், அண்ணாமலைச் செட்டியார், சுப்ரமணியச் செட்டியார் என்பது அவர்களின் திருப்பெயர்கள். இவர்களுள் மூத்தவர்களான நாகப்பச் செட்டியாரும் வெங்கடாச்சலரும் மதுரைக்கு வந்து ஜடாமுனி சந்தில் உள்ள துட்டுக் கிருஷ்ணய்யர் அவர்கள் வீட்டில் நூல் வியாபாரமும், ஜவுளி வியாபாரமும் நடத்தி வந்தார்கள்.

அப்போது தங்களுக்கு இருந்த சிறியப் பொருள் வசதிக்குத் தக்கபடி நாள்தோறும் அபிஷேகத்திற்கு அரைப்படிப்பாலும் சாத்துவதற்கு மாலைகளும் கோயிலுக்குக் கொடுத்து வழிபாடு செய்து வந்தார்கள். நாள் ஏற ஏறப் பொருள் வசதியும் வாணிப வசதியும் மீனாக்ஷியம்மையின் திருவருளால் மேலோங்கின. ஊதியமும் மிகப்பெருகின. ஒவ்வொரு நாளும் அர்த்த யாம தரிசனத்திற்கு திருக்கோவிலுக்கு வரும் நியமமுடைய இவ்விருவர்களுக்கும் அப்போது திருக்கோயிலிலிருந்த சீர்கேடான நிலை பெரிதும் வருத்ததைத் தந்தது. கிபி 1858ல் மதுரைக் கோயிலிருந்த நிலையை குடும்பத்திலுள்ள பெரும்புலவர் வித்துவான் சிரோண்மணி இராமனாதன் செட்டியார் தனது சில பாடல்களில் எழுதியிருந்தார்.

அஃதில் உள்ளவை

 திருக்கோயில் முழுதும் பகலில் ஒரே இருள்மயம். இரவில் அக்காலத்தூண் விளக்குகள் மின்மினிப்பூச்சி போல கண்சிமிட்டிக் கொண்டிருக்கும். தேள், நட்டுவாக்காலி பாம்பரணை பெருச்சாளி. உண்ணி, சுண்டெலிகள் வரும் பக்தர்களுக்கு இவற்றால் அடிக்கடி துன்பம் நேரும். விஷப்பிராணிகளால் பெரும் தொல்லையில் அடிக்கடி நிகழ்ந்த வண்ணமிருந்தன. அப்பிராந்தியத்தில் மந்திரவாதிகளும் வைத்தியர்களும் வேப்பிலை மருந்துகளுடன் அங்கு இருந்து கொண்டிருப்பார்கள். அப்போது மதுரைக் கலெக்டராக ஸ்பெசன்துரை அப்பிராணிகளைப் பிடித்துக் கொன்று கொண்டு வருபவர்களுக்கு பரிசுத்தொகை கொடுப்பாராம்.

 பெரும் கோபுரங்களில் மரங்கள் வளர்ந்து மொய்த்திருந்தன. தளவரிசைகள் இருந்தும் இல்லாதவையாகின. தட்டோடுகள் வெடித்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தன. மண்டபங்கள் பெரிதும் கால் சாய்ந்து ஒதுங்கியிருந்தது. 1863ம் ஆண்டில் மதுரைக் கோயில் நிர்வாகம் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவிடம் அரசினரால் ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவிற்கு நாகப்பச் செட்டியார் தலைவராக இருந்தார்கள்.

திருக்கோயில் நிர்வாகம் தனது பொறுப்பில் வந்தபின் நாகப்பச் செட்டியார் அவர்கள் தமது சகோதரர்களையும் கலந்தாலோசித்துக் கொண்டு திருப்பணி செய்யத் தொடங்கினார்கள். முதலில் செய்த திருப்பணி சித்திவிநாயகர் கோயில் திருப்பணி. மீனாக்ஷியம்மன் கோயில் முதற்பிராகத்தில் மதில் சாய்ந்திருந்ததைத் திருத்தம் செய்தார்கள். திருப்பள்ளியறை புதுப்பிக்கப் பெற்று ஊஞ்சலுக்கு பொற்றகடு போற்றப் பெற்றது. கோவில் முழுவதிலும் தட்டோடுகள் பழுதுபார்க்கப் பெற்று வலிமை செய்யப் பெற்றன. மண்டபங்களில் இடைகளில் பாவுகற்களைச் தூக்கிச் சுற்றிலும் பலகணிகள் அமைக்கப்பட்டு இருட்படலங்கள் நீக்கப்பட்டன.

 இராஜ கோபுரங்கள் பன்னிரண்டிலும் வழிவழியாகத் தங்கி வாழ்ந்து கோயில்களிலும் சுற்றுலுமுள்ள மக்களுக்கும் பெருந்துன்பம் தந்து வந்த குரங்குகளெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கென மேற்கொண்ட முயற்சி பெருவியப்பைத் தருவதாகும். குரங்குகளின் சேட்டையால் மனங்கலங்கிய திருப்பணிச் செல்வர்கள் அவற்றில் ஒன்றையேனும் கொலை செய்ய எண்ணினார்களில்லை.

 சாராயக் குடங்களிலும். கள் குடங்களிலும் நிலக்கடலையை ஊறவைத்து குரங்குகள் எடுத்துத் தின்னுமாறு போட்டார்கள். எல்லாக் குரங்குகளும் நிலக்கடலை வாசனையால் மதிமயங்கி அக்கடலைகளைப் பொறுக்கித்தின்று மயக்கமடைந்தன. அவைகளைத் தந்திரமாய் பிடித்துப் பெட்டியிலடைத்து நெடுந்தூரத்திலுள்ள மலைகளில் கொண்டு போய்விட்டார்கள்.

 பண்ணிரெண்டு கோபுரங்களும் சுதை வைத்து வண்ணம் தீட்டப்பெற்றன. அன்றைய காலத்தில் அதற்கான செலவு எட்டு லட்சம் ரூபாய். சித்திரை வீதி, தெற்குதிருமதிலையொட்டித் திருக்கோயில் இடத்தில் உரிமையோடு வாழந்து வந்த பலரை அப்புறப்படுத்தினார்கள். சித்திரை வீதி திருமதில்களைச் சுற்றி இரும்புக் கம்பி வேலியிட்டு அதில் பூஞ்செடிகளை வைத்து நந்தவனமாக்கினார்கள். சித்திரை வீதியை ஒழுங்குபடுத்துவதற்குச் செலவான தொகை ஒரு லட்சம். பதினாறுகால் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும், நூற்றுக்கால் மண்டபம், மீனாக்ஷிநாயக்கர் மண்டபம் அட்டசக்தி மண்டபம் ஆகியவை பழுதுபார்த்துப் புதுபிக்கப்பட்டது. திருக்கல்யாண மண்டபம் மிக அழகான முறையில் புதிதாக் கட்டப்பெற்றது. அம்மண்டபத்தில் அலங்காரத்திற்கு நிலைக்கண்ணாடிகள் முதலிய பல அலங்காரப் பொருட்கள் வாங்கி வைக்கப்பெற்றன.

பசுத் தொழு மண்டபம், ஆனைமால் மண்டபம், கிளி மண்டபம் வசந்தராயர் மண்டபம், முத்து ராமலிங்கையர் மண்டபம், கழுவேற்று மண்டபம், துவசத்தம்ப மண்டபம் ஆகியவைகள் திருத்தப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன. தெப்பக்குளத்தின் மையமண்டபம் பிரித்துத் திருத்தப்பெற்றது. பொற்றாமரைக்குளத்தங்கரையின் தளவரிசைகளும், ஆடி வீதிகளின் தளவரிசைகள் அழகாகப் போடப்பெற்றன. புதுமண்டபத்திலும், அட்சய மண்டபத்திலும் தட்டோடு பழுதுபார்க்கப் பெற்று வர்ணந் தீட்டப்பெற்றது. பொற்றாமரைக்குளப் படித்துறைகளும் கைப்பிடிச்சுவர்களும் அமைக்கப்பெற்றன. சுவாமிகோயில் முதற்பிரகாரத் திருமதிலில் அறுபான் மும்மை நாயக்கமார்களின் வரலாற்றுச் சுதைச் சித்திரங்களும், கிளி மண்டபத் தட்டோடு அடிப்பகுதியில் மஹேஸ்வர சித்திரங்களும், பொற்றாமரையின் வடக்கு, கிழக்கு திருமதில்களில் திருவிளையாடற்புராண வரலாற்றுச் சித்திரங்களும் கண்கவர் வனப்பினவாய்த் தீட்டப்பெற்றன.

சுவாமி கோயில் முதல் பிரகார இரண்டாம் பிரகாரத் தளவரிசைகள் புதிதாய்ப் போடப்பட்டன. சுவாமி அம்பாளுக்குத் தங்க விமானங்களும் தங்கம் வெள்ளிகலளான வாகனங்களும் திருவாபரணங்களும் செய்யப்பெற்றன. திருக்கோயில் தோன்றிய நாள் தொட்டுத் திருப்பணி நிறைவேறாதிருந்த மொட்டைக்கோபுரம் மக்கள் செய்த பலவகையான இடையூறுகளுக்கிடையில் சொக்கலிங்கப்பெருமான் புரிந்த திருவருளினால் ழுழுக்கோபுரமாக ஆக்கப்பெற்றது. வயிநாகரம் குடும்பத்தார் செய்த திருப்பணிகளின் விரிவுகளையும், திருவாபரணங்கள், வாகனங்களின் விளக்கங்களையும் முழுதும் சொல்லுதற்கில்லை எனில் காரணம், எல்லாத் திருப்பணிகளையும் தங்கள் குடும்பப் பொருள்களிலிருந்தே நாகப்பச் செட்டியார் அவர்களும் வெங்கடாச்சலம் செட்டியார் அவர்களும் செய்தார்கள் என்பதே. பொது மக்களிடமிருந்தோ, பிறவழிகளிலிருந்தோ பொருள் பெற்றோ செய்யவில்லை.

""சீர் செய்த சித்திரை வீதிகள் நான்குக் குட்
பட்ட தெய்வக் கோவில்
ஆர் செய்தது? அரைக்காசு பெறும் கதவா
ணியும் பிறர்வந்தடித்த துண்டோ?
பேர் செய்த நாகப்ப பாண்டியனும் அவனு
டனே பிறந்த கீர்த்தி
வேர் செய்த வேங்கடாசலச் செழியனும்
செய்து விளக்கி னாரால்

என்ற பாடல் அறிவிக்கின்றது. இங்கனம் திருப்பணி, திருவாபரணம் வாகனம் ஆகிய எல்லாவற்றிற்கும் தங்கள் பொருளைப் பயன்படுத்திய நாகப்பச் செட்டியாரவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதற்காக இரண்டு தங்கக்குடங்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பொருளைக் கொண்டு செய்து வைத்திருக்கிறார்கள்.

""சிகரத்தார் விளக்கென்னச் செகத்தெல்லாம்
போற்றிசைக்கும் செல்வம் வாய்ந்த
நகரத்தார் சார்பாக ஞானத்தாய் பாலூட்ட
நா ஒன்றாலே
பகரத்தான் முடியாத பயோதரங்கள் இரண்டு
வைத்த பாங்கு என்ன
மகரத்தார் கொடியாட்குப் பொற்குடங்கள்
இரண்டு செய்து வைத்தார் மன்னே

என்ற பாடல் தெரிவிக்கின்றது. சேது மன்னராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் தந்த பொருளைக் கொண்டு அம்மன் தேரை அமைத்தார்கள். இவர்கள் திருப்பணிக் காலத்தில் 6.2.1878 ஈஸ்வர தை 26ம் நாளில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ந்தது. மதுரைத்திருப்பணியின் பொருட்டு வயிநாகரம் குடும்பத்தார் அப்போது செலவு செய்த தொகை சற்றேறக்குறைய இருபத்தைந்து லட்சமாகும்.

இந்த இருபத்தைந்து லட்சம் தற்போதைய மதிப்பிற்கு பல கோடிக்கு மேற்பட்ட திருப்பணியைச் செய்தது என்பதும் இந்த தொகையிற் கவனக்குறைவால் வீணானது ஒரு சல்லிக்காசு கூட இல்லை என்பதும், அத்தனை தொகையும் உசிதமான முறையிலே செலவு செய்யப் பெற்றது என்பது நினைவிலிருக்கத் தக்கதாகும். ""காசு வீணிற் செலவிடார் உசிதமானதில் கன திரவியற்கள் விடுவார் என்பது தனவணிகனின் இயல்பல்லவா? நிலையாகச் செய்யப்பெற்ற இத்திருப்பணிகளுடன் குழித்தளிகைக் கட்டளை, அர்த்த சாமக் கட்டளை, பிரதோஷக் கட்டளை முதலிய நித்தியக் கட்டளைகளுக்கும், திருக்கல்யாண மண்டகப்படி முதலான நைமித்திகக் கட்டளைகளுக்கும் வயிநாகரம் குடும்பத்தார் பெரும் பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar