பதிவு செய்த நாள்
04
அக்
2018
01:10
நந்தி பகவானுக்கு திருமணம் நடந்த தலம் திருமழபாடியாகும். இவ்வூர் விருத்தாச்சலம் - திருச்சி பாதையில் குள்ளம்பாடி ஸ்டேஷனுக்கு கிழக்கே 18 கி.மீ தொலைவில் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது. நந்திகேஸ்வரர் வரலாறு பற்றி திருவையாறு ஸ்தல புராணத்தில் பஞ்சநாத ஷேத்திரம் காணப்படுகிறது. நந்திதேவரின் தந்தையார் சிலாத முனிவர். அன்னை சாருலட்சணை என்பவராகும். இவர் வசிஷ்ட மஹரிஷியின் தங்கை. திருவையாற்றில் இறைவன் ஸ்ரீஜப்பியேஸ்வரர் சன்னதியில் ஐந்து எழுத்து மந்திர சித்தியை அடைய சிலாத முனிவர் கடும் தவம் இயற்றினார். அவருக்கு துர்வாச மஹரிஷி சில தவமுறைகளைக் கூறி உபதேசம் செய்தார். அதில் ஒன்றாக தவம் நிறைவேறும்வரை கற்பொடியை ஆகாரமாக உண்டுவரச் செய்தார். அவ்வாறே சிலாத முனிவர் மேற்கொண்டு தவம் இயற்றிய காரணத்தால் சிலாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பஞ்சாட்சர சித்தியை இறைவன் அவருக்கு அளித்தார்.
இவருக்கு பிள்ளைப்பேறு இல்லாமையால் வருந்தியதன் பொருட்டு இறைவன் அசரீரியாய் கூறி அருளியபடி புத்திர காமேஷ்டியாகம் செய்து நிலத்தை உழ அந்நிலத்தில் பெட்டி அகப்பட்டது. அதில் நான்கு தோள்களுடன் அழகிய இரு கண்களுடன் நெற்றிக்கண்ணும் சேர்ந்து முக்கண்ணாகி சந்திரனை அணிந்த தலையுடனும் ஒரு அதிசய குழந்தையைக் கண்டு நின்றபோது மீண்டும் ஒரு அசிரீரி ""பெட்டியை மூடித்திற என்றது. அதன்படி செய்தபோது அழகிய தோற்றமுள்ள ஒரு குழந்தையைக் கண்டு மகிழ்ந்து அக்குழந்தையை எடுத்துச் சைலாதர் என பெயரிட்டு சிறப்புடன் வளர்த்துவரும் சமயம் சைலாதரின் தவப்பயனால் அவருடைய மானுடர் அவங்களும் உடற்குறைகளும் நீங்கிட கங்கை நீர், வான்மேக நீர், அம்மையின் ஸ்தனப்பால் ரிஷப நந்தியின் வாய்துரைநீர் போன்ற தீர்த்தங்களால் அபிஷேகம் செய்விக்கப் பெற்றார். திருவையாற்றில் இறைவன்பார் சைலாதர் செய்த தவப்பரிசாகவும், ஐயாரப்பனின் அருட்பரிசாகவும் இறைவனே நேரில் சென்று உபதேசித்த பெருமைகளைப் பெற்றார். திருக்கயிலாய பரம்பரை எனக் கூறப்படும் சித்தர், ரிஷிகள், முனிவர் யாவர்க்கும் சைவத்திருவாகி முதற்குருவாகவும், அனைத்து சிவகணங் களுக்கும் தலைவர் என்ற பதவியையும், சிவகையிலாயத்திற்கு தலைவாயிற் காவல்புரியும் அதிகார உரிமைகளையும் பெற்றதோடு இறைவன் திரு முன்னர் பஞ்ச புண்ணிய நதிகளை வரவழைத்து அத்தீர்த்தங்களால் சைலாதருக்கு பட்டாபிஷேகமும் நிகழ்த்தப்பட்டன. அன்று முதல் இறை ஸ்வவரூபமாகவும் இறை அருகிலேயே எப்போதும் இருக்கும் பாக்கியத்தையும் இறையாம்சம் சிவாம்சம் பெற்றும் ரிஷப முகமும் காளைமுகம் கொண்டு நந்திதேவர் என்ற திருநாமம் பெற்று ரத்தினப் பிரம்பையும் கொண்ட அதிகார நந்தியாய் விளங்கினார்.
வியாக்கிரபாத முனிவருடைய மகளும் உபமன்யனின் சகோதரியும் வசிஷ்ட மஹரிஷியின் பேத்தியுமான சுயம்பிரபை என்ற ஞானாம்சம் கொண்ட அழகிய பெண்ணை திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள திருமழபாடி என்ற ஊரில் இருக்கும் சிவாலயத்தில் சிவனாரின் முன்பாக திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை இறையனாரே முன்னின்று நடத்தி வைத்தார். திருமழபாடியில் ஈசன் எதிரில் நந்திகேஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவது மிகவும் முக்கியமானதாகும். ஏனைய சிவாலயங்களில் நந்தி பகவான் அழகுறக் கிடந்த கோலத்தில் காட்சி தருவதே வழக்கம். இத்தலத்தில் இப்போதும் ஒவ்வொரு வருட பங்குனி மாதத்தில் நந்திதேவரின் திருமண விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு திருவையாற்றிலிருந்து இறைவன் ஐயாரப்பனுடன் அன்னை அறம் வளர்த்த நாயகியும் மணமகன் நந்திதேவரும் புறப்பட்டு பெண் சுயம் பிரபை வீட்டிற்கு திருமழபாடிக்கு எழுந்தருள்வது வழக்கமாகும்.
நம்பன், நந்தி, தேவர் என இறைவனைக் குறிக்கும் பெயர்களே நந்தி தேவருக்கும் இருப்பது. ஏனெனில் நந்தியார் இறையாம்சம் கொண்ட சிவனின் அம்சபந்தம் என்பதாலேயே. தேவர்கள் பருகிய தேவாமுதை நந்தி தேவரும் உண்டு என்றென்றும் இளமையுடன் வாழும் பேறு பெற்ற சிவோத்தமர் ஆவர். பிரதோஷ நாயகர் சிவனார் அன்னையுடன் இவரது சிரசின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடனமாடும் பேற்றைப்பெற்றவர். மண்ணிலும், விண்ணிலும் புகழ்பெற்ற சிவமயச் செல்வன், இவ்வாதி சைவன் எல்லா முனிவர்களாலும் வணங்கப்பெறுகிறார். நாமும் இவரை வணங்கி வழிபட்டால் யாவரையும் வணங்கிய பேற்றினையும் யாவற்றையும் பெற்ற பாக்கியர்களாக ஆவோம்.
ஆதியிலும் திருநந்தி அநாதியிலும் திருநந்தி
வாதனையால் விளையாட வருமிடமும் திருந்தி
தீதிலாத திருநந்தி திகழ்பெருமை திசைமுகனார்
ஓதிடினும் அவர்க்கு வாய் ஒருகோடி போதாவே!
ஞானக் கூத்தர்