பதிவு செய்த நாள்
04
அக்
2018
03:10
ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஒரு பெரிய தத்துவ ஞானி. இவர் முக்கியமாக நம் தேசத்தில் தெய்வ வழிபாட்டுமுறையை ஆறு சமயங்களாகப் பிரித்திருக்கிறார். இந்த சமயங்கள் ஆறினையும் ஆறு தெய்வங்களை பிரதானமாகக் கொண்டதாகும். அவரவர் விருப்பப்படி அந்தந்த தெய்வங்களை வழிபட்டு மேன்மையடையலாம் என்று வகுத்துக் கொடுத்தார். அவைகள் ஸ்ரீபரமசிவன், ஸ்ரீ நாராயணன், ஸ்ரீ விநாயகர், அன்னை ஸ்ரீ பராசக்தி, முருகக் கடவுள், ஸ்ரீசூர்ய பஹவான். ஒவ்வொரு மூர்த்திகளும் வழிபாட்டிற்கான தோத்திரங்களைச் செய்துள்ளார்.
அன்னை பராசக்தியின் வழிபாடு பெரிய தத்துவங்கள் அடங்கிய சமயமாகத் தனிச்சிறப்புடன் வழக்கிலிருக்கின்றது. கடவுளைத் தாயாக வழிபடுவதே இதன் முக்கியத் தத்துவம். கடவுளைத் தந்தையாக பாவிப்பது ஒரு முறை. அதை விட பக்தர்களின் மனதைக் கவரச் செய்வது தாய் என்ற முறை. தாய் உள்ளம் கனிந்த உள்ளம். ஆகையினால் மக்களின் குறைகளைப் பொறுத்து அருள்புரியும் தெய்வமாகும். இம்முறையில் ஸ்ரீ ஆதிசங்கரர் பல தோத்திரங்களைச் செய்திருக் கிறார்கள். அவைகள் எல்லாவற்றிலும் முக்கியமாகவும் சிறந்ததாகவும் விளங்குவது "சௌந்தர்ய லஹரி என்ற நூறு ஸ்லோகங்களைக் கொண்ட தோத்திர ரத்தினமாகும். அதன் பெருமையை அதைப் பற்றி உள்ள வரலாறு நன்றாக உணர்த்துகிறது.
பார்வதி தேவியுடன் பாதி உடலாக விளங்கும் சிவபிரானின் பூரண அருளால் ஸ்ரீ சங்கர பாகவத்பாதருக்கு இந்த நூறு சுலோகங்கள் கிடைதத்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் முதல் 41 சுலோகங்களைக் கொண்ட பாகத்திற்கு ஆனந்த லஹரி என்றும் மற்ற 59 சுலோகங்களை கொண்ட பாகத்துக்கு சௌந்தர்ய லஹரி என்றும் பெயர் வழங்கக் காண்கிறது. "சௌந்தர்ய லஹரி என்பதற்கு "அழகு அலைகள் எனப் பொருள். தோத்திரம் செய்யும் போது நிரம்பிய அழகு. அலைகளைப் போல காண்கிறது. இந்த உண்மையே அந்தச் சொல்லின் பொருளாக விளங்குகிறது. அழகு என்பதே ஓர் உயர்ந்த தத்துவம். உலக தத்துவங்களை மூன்றாய்ப்பிரித்து
1. உண்மை 2. நலம் 3. அழகு என்ற வேத தத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். இம்மூன்றானாலேயே உலகத்தை ஈன்ற தாய் அழகு வடிவு உள்ளவளாகவே மனக்கண்ணால் பார்த்து அந்த அழகை நேர்த்தியாக வர்ணிப்பதுதான் இந்த சௌந்தர்ய லஹரியின் முக்கிய கருத்து. சாக்த சமயத்தில் உள்ள பல உண்மைகளும் இந்த தோத்திரத்தில் கையாளப் பட்டிருக்கின்றன. சாக்த ஆசாரம், சமையாசாரம் கௌலம் அல்லது வாமாச்சாரம் என இரு வகையாகும்.
கௌலமார்க்கத்தில் அவைதீகமான சில பழக்கங்கள் இருப்பதால் இதை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே சமய சாரத்தை வைத்துக்கொண்டே அம்பிகையின் புகழைப் பாடுகிறார். இந்த தேவி உபாசனையில் மந்த்ர யோகம் என்றும் குண்டலினி யோகம் என்றும் சொல்லப்படும் இரண்டு. தேவீ மந்தரங்களுடைய ரகஸ்யங்களையும் ஆங்காங்கு இந்த தோத்திரங்கள் குறிப்பிடுகின்றன. மனிதனுடைய சரீரத்திற்குள் ஆறு சக்கரங்கள் இருக்கின்றன. அந்த ஆறு சக்கரங்களின் அடிபாகத்தில் சரீரத்தின் அடிபாகத்தில் மூலாதாரம், அங்கு தேவீ குண்டலநீ ஸ்வரூபியாக இருக்கிறாள். அந்த குண்டலநீயை எழுப்பி ஸகஸ்ரார சக்கரத்திற்கு இதர நான்கு சக்கரங்களைக் கடந்து செல்லும்படியான யோகமுறையைப் பல பெரியோர்கள் பின்பற்றி இருக்கிறார்கள். இந்த ரகஸ்யங்கள் எல்லாவற்றையுமே இந்நூலில் காணலாம்.
சிரசிலிருந்து பாதம் வரை தேவியினுடைய உருவத்தின் அழகையும் கவிச்சுவை நிரம்பிய வழியில் இந்தத் தோத்திரங்களில் வர்ணித்துள்ளார். இந்த கிரந்தத்தை உயர்ந்த ஒரு காவியமாக வும் மக்கள் அனுபவிக்கலாம். தேவீ உபாஸôன தத்துவங்களை சாஸ்த்திரப்படி உபதேசிக்கும் நூலாகவும் கருதி இதை வாசித்துப் பயனடையலாம். ஒவ்வொரு தோத்திரமும் மந்திர ரூபமாகவும் நினைத்து பாராயணம் செய்து மக்கள் உய்யவும் மார்க்கமாக அமைந்துள்ளது.
யந்திர ஸ்தாபனம் செய்து அதில் பூஜை செய்யும் முறையும் தேவீ உபாஸனத்தின் முக்ய வழியாகும். அந்த தத்துவமும் இதில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த தோத்திரத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஸ்ரீ சங்கர பாகவத் பாதர் அவர்களுடைய சகலகலா வல்லமையையும் நன்றாக அனுபவிக்கலாம். சங்கீத சாஸ்த்திரத்திலும் அவருக்குள்ள புலமையை அறிய இதிலே காணும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சான்றாகும்.
""கலேரே காஸ்திரோ கதிகமக கீதைக நிபுணே
விவாஹ வியாநத்த ப்ரகுண குண ஸங்க்யா ப்ரதி புவ:
விராஜந்தே நாநாவித மது ராக கரபுவாம்
த்ரயாணாம் ஸ்திதிநியம் ஸீமனாந இவதே
சௌ - 69
சங்கீத சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள் இதனைச் சொல்ல முடியும் என்பதை இதிலிருந்து தீர்மானிக்க முடிகிறது. பாரத தேசத்தில் சங்கீதத்தை தேவீ உபாஸனைக்கு நாதோபாஸனை அற்பணித்திருக்கிறார்கள். ராகங்களில் ஈடுபட்டு லயிப்பதே ஓர் உபாஸனை முறையாக வைத்து பெரியோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்த நாத உபாஸனைக்கும் சௌந்தர்ய லஹரி பயனாகிறது என்பதும் ஓர் உயர்வாகிறது.