பதிவு செய்த நாள்
05
அக்
2018
01:10
சென்னை: தாமிரபரணி புஷ்கரம் விழாவில், எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக நீராடலாம் என்பதை, மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, புலவர் மகாதேவன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி நதியில், வரும், 12 முதல், 23ம் தேதி வரை, புஷ்கரம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் தீர்த்தவாரி நிகழ்ச்சி, தைப்பூச படித்துறையில் நடக்கும். அப்போது, தைப்பூச படித்துறை மற்றும் குறுக்கு படித்துறையில், பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில், பக்தர்கள் நீராட வருவர் என்பதால், தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில், 140 இடங்களில் நீராட முடியும். அதனால், ஒட்டுமொத்தமாக அனைவரும், தைப்பூச படித்துறைக்கு வருவதாக கூற முடியாது.
எனவே, திருநெல்வேலியில், தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குப் படித்துறையில், புனித நீராட விதிக்கப்பட்ட தடை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். புஷ்கரம் நிகழ்ச்சியை பாதுகாப்புடன் நடத்த, அனைத்து ஏற்பாடுகளை செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி மகாதேவன் முன், நேற்று (அக்., 4ல்) விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜா ஆஜராகி, ""எனக்கு தெரிந்து, திருநெல்வேலி மாவட்டத்தில், இதுபோல் புஷ்கரம் என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றில் விழா நடந்தது இல்லை.
படித்துறைகளை, பொதுப்பணித்துறை தான் கவனிக்க வேண்டும். பக்தர்கள் குளிக்கும்போது, அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், குறிப்பிட்ட படித்துறைகளில் தடை விதிக்கப் பட்டுள்ளது, என்றார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.ஆர்.ராஜகோபால், ""பொது மக்களின் பாதுகாப்பு, மிகவும் முக்கியம். மனுதாரர் கோரும் இடங்களில், நீராட அனுமதிக்க முடியாது. பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் இடங்களில், நீராட தடையில்லை, என்றார்.
இதையடுத்து, எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக நீராடலாம் என்பதை, மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி மகாதேவன் தள்ளிவைத்தார்.